ஆர்யா மற்றும் ஷாஜி நடேசன் தயாரிப்பில் அரவிந்த் சாமி, குஞ்சாக்கோ போபன், ஜாக்கி ஷெராஃப், ஈஷா ரெப்பா , ஆடுகளம் நரேன் நடிப்பில் சஞ்சீவின் கதை திரைக்கதைக்கு சசிகுமாரன் சிவகுரு வசனம் எழுத பெலினி இயக்கி இருக்கும் படம் .
சில காலம் முன்பு நடந்த ஒரு தாதாக்கள் சண்டையில் பல கோடி ரூபாய் எங்கே போனது என்று தெரியாத நிலையில், அவர்களில் ஒரு தாதாவின் உதவியாளனாக இருந்து , அப்போது நடந்த விசயங்களை மறந்து விட்டவன் என்று ஒரு நபரைக் (அரவிந்த்சாமி) காட்டி, அவனிடம் எப்படியாவது பழகி நினைவுகள் வர வைத்து, பணம் பற்றி அறியவேண்டும் என்று ஓர் இளைஞனுக்கு (குஞ்சாக்கோ போபன்) வேலை கொடுக்கிறது ஒரு குழு( ஆடுகளம் நரேன், அமல்டா லிஸ்)
அப்படியே பழகி சம்மந்தப்பட்ட நபரை சண்டை நடந்த இடத்துக்கு அழைத்துப் போனால் அங்கே எல்லாமே தலை கீழ். வலை விரித்தவனாக நினைத்துக் கொள்ளும் நபருக்கே விரிக்கப்பட்ட வலை அது .

மாத்தி யோசி பாணியில் அட்டகாசமான திருப்பங்களைக் கொண்டு படத்தைக் கொண்டு போகிறார்கள் . ஆக்ஷன் கிளைமாக்சில் படம் முடிகிறது . இந்த மொத்தப் படமும் அத்தியாயம் ரெண்டு .
அப்போ முதல் அத்தியாயம் ? அது அடுத்த பாகத்தில் வரும். சில காலம் முன்பு நடந்தது என்ன என்பதை அதில் முதல் அத்தியாயமாக சொல்லி, இனி என்ன நடக்கப் போகிறது என்ற விஷயத்தையும் மூன்றாம் அத்தியாயமாக அதே இரண்டாம் பாகத்தில் சொல்லி முடிப்பார்களாம்.
முன்பெல்லாம் ஒரு முக்கியமான கதைப் போக்கை திரைக்கதையில் இடைவேளை வரை சொல்லி , இடைவேளைக்குப் பிறகு அந்த முக்கியக் கதைப் போக்குக்கு முன்னால் நடந்தது என்ன என்று சொல்லி, பின்னர் மேற்கொண்டு திரைக்கதையின் இறுதிப் பகுதியை சொல்லி படத்தை முடிப்பார்கள்.
இப்படி ஒரு படமாக சொல்வதை இப்போது இடைவேளை வரை வருவதை ஒரு படமாகவும் இடைவேளைக்குப் பிறகு வருவதை இன்னொரு படமாகவும் எடுத்து இருக்கிறார்கள் .

ஆனால் அழகான திரைக்கதை, சிறப்பான படமாக்கல் என்று சிறப்பாக செய்து இருக்கிறார்கள்
கவுதம் சங்கரின் ஒளிப்பதிவும் அருள் ராஜ் கென்னடியின் பின்னணி இசையும் அருமை.
அரவிந்த் சாமி அட்டகாசமாக நடித்துள்ளார் , குஞ்சாக்கோ போபனும் மற்றவர்களும் கூட சிறப்பான பங்களிப்பு.
ஆனால் படத்தில் இருந்தியில் தீபாவளித் துப்பாக்கிகள் கணக்காக வெடித்துக் கொண்டே இருக்கும் அந்த பயாஸ்கோப்பு துப்பாக்கிச் சண்டை அதுவரை படத்துடன் பார்ப்பவர்களுக்கு ஏற்பட்டு இருந்த அன்னியோன்யத்தை சுட்டுப் பொசுக்குகிறது
எனினும் மோசமில்லாத திரை அனுபவம் தருகிறது படம்