எமோஜி @ விமர்சனம்

ரமணா ஆர்ட்ஸ் சார்பில் ஏ.எம் சம்பத் குமார் தயாரிக்க, மகத் ராகவேந்திரா , தேவிகா சதீஷ்,  மானசா சவுத்ரி , ஆஷிக், பிரியதர்ஷி, ஆடுகளம் நரேன் நடிப்பில் சென். எஸ் . ரங்கமசாமி இயக்கி , ஆஹா ஓ டி டி தளத்தில் காணக் கிடைக்கும் ஏழு எபிசோட் வெப் சீரிஸ் . 

என்ஜினீயரிங் முடித்து விட்டு சென்னையில் ஐ டி நிறுவனத்தில்  வேலை பார்க்கும் இளைஞன் ஆதவ் (மகத் ராகவேந்திரா). 

ஸ்போர்ட்ஸ் கடையில் வேலை பார்க்கிற – நீச்சல் பயிற்சியாளராக இருக்கிற – பெங்களூரில் அனாதை ஆசிரமத்தில் பிறந்து  கோவையில் வாழும் தம்பதியால் தத்து எடுக்கப் பட்டு வளர்க்கப்பட்ட  பிரார்த்தனா( மானசா சவுத்ரி)வின் பின்னழகில் அவன்  மயங்கி , ஆசைப்பட்டு காதலைச் சொல்கிறான் .  

அவளும் சில நிபந்தனைகளோடு ஏற்க  இருவரும் நெருங்கிப் பழகி ஒன்றாகத் தங்கி பல முறை உடலுறவு கொண்டு ஜாலியாக இருக்கின்றனர். 

ஆதவ்  இருக்கும் ஃபிளாட்டுக்கு எதிரே கேரளாவைச் சேர்ந்த மலையாளப் பெண்ணும் வன விலங்குகள் புகைப்பட நிபுணருமான தீக்ஷா ( தேவிகா சதீஷ்) ,

 மாடலிங் செய்யும் இளைஞனுடன் கல்யாணம் செய்து கொள்ளாமல்  காதல் காமம் என்று சேர்ந்து வசிக்கிறாள் . 
வாழ்க்கை மனிதனை ஆச்சர்யப்படுத்திக் கொண்டே இருக்கும் என்ற விதிக்கு ஏற்ப பிரார்த்தனா ஆதவ்வை பிரிய, மாடல் காதலனும்  தீக்ஷாவைப் பிரிய , தீக்ஷாவும் ஆதவ்வும் சேர்ந்து வாழ்கிறார்கள் . 

பின்னர் திருமணம் செய்து கொள்கிறார்கள். அதற்குப் பின்பும் வாழ்க்கை அவர்களுக்கு ஆச்சர்யங்களைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது . 

அவை என்ன என்பதையும் வாழ்வில் ஆச்சர்யங்கள் தொடர்கதை என்பதையும் சொல்லும் தொடரே எமோஜி . 

ஆபாச, காமக் காட்சிகள் , காமடியோடு காம நெடி வசனங்கள், இரட்டை அர்த்த மற்றும் அதே அதான ஒற்றை அர்த்த வசனங்கள் நிறைந்த பதினெட்டு வயது மேற்பட்டோருக்கான தொடர் . கால மாற்றம் என்ற பெயரில் தனது பெண் கல்யாணத்துக்கு முன்பு ஒருவனோடு சேர்ந்து குடியும் ‘குடி’யும் குடித்தனமுமாய் கும்மாளம் அடித்துக் காமக் களியாட்டங்களுடன் வாழ்வதை  ஜஸ்ட் லைக்  தட் ஏற்றுக் கொள்ளும் மலையாளத் தந்தை,  

”பெங்களூரில் உள்ள  அநாதை ஆசிரமத்தில் இருந்து தத்து எடுத்துக் கொண்டு வந்து  வளர்க்கும் கோவையைச் சேர்ந்த எனது வளர்ப்புப் பெற்றோர் சொல்லும் பையனைத்தான் திருமணம் செய்து கொள்வேன். ஆனால் அது வரை நாம் ஜாலியாக  காமம் சுகித்து தண்ணி அடித்து வாழலாம்” என்று நடத்திக் காட்டும் பெண்,

ஒரு பெண்ணைக் காதலிப்பதாகச் சொல்லிவிட்டு தன் மகன்  இன்னொரு பெண்ணை கல்யாணம் செய்து கொள்வதை ஏற்கும் அம்மா..  

இப்படி எல்லோராலும் ஏற்றுக் கொள்ள முடியாத அல்லது ஏற்றுக் கொள்ளத் துணியாத பாத்திரங்களும் கதைப் போக்குகளும் இருந்தாலும் 

தனது அற்புதமான இயக்கம், காட்சி அமைப்பு , படமாக்கல், நடிக நடிகையரிடம் வேலை வாங்கிய விதம் இவற்றால் படத்துக்கு ஒரு கவிதைத் தன்மையை  கொண்டு வருகிறார் இயக்குனர் சென். எஸ் . ரங்கமசாமி.  வாழ்த்துகள் பாராட்டுகள் .

ஒவ்வொரு எபிசோட் முடிவிலும் ஒரு திருப்பம் அல்லது எதிர்பார்ப்பு கொடுத்த வகையிலும் அசத்துகிறார் .  பந்திப்பூர் பாரஸ்ட் ஏரியா பகுதி திரைகதையின் அபாரம் . 

பணம் தனது தனிப்பட்ட சுயநலமான விருப்பு வெறுப்பு இவற்றுக்காக வாழ்வது  வாழ்க்கை அல்ல ;ஆண் பெண் இரு தரப்புமே வாழ்வதற்காக வாழ்க்கைக்காக தனது வாழ்க்கைத் துணைக்காக சில விசயங்களை விட்டுக் கொடுத்து வாழ்வதுதான் வாழ்க்கை என்ற….  சரியான பாதுகாப்பான துணை நலம் இணை வலிமை மிக்க வாழ்க்கை முறைக்கு எதிராக, 

”தனிப்பட்ட  விருப்பமும் சுயநல ஆசைகளும்தான்  முக்கியம் என்ற கருத்துக்கு  முக்கியத்துவம் கொடுத்து வாழ்வது தப்பில்லை  எனினும் அந்தப் பிரிவிலும் சோகம் இருக்கும்” என்று இயக்குனர் சொல்ல வருகிறாரா ?
அல்லது பக்குவமும் விட்டுக் கொடுக்கும் மன நிலையும் இல்லாமல் இன்றைய தலைமுறை எப்படி வாழ்க்கையை இழக்கிறார்கள் பாருங்கள் என்று  சொல்கிறாரா?இல்லை இல்லை இந்தப் பிரிவும் நிரந்தரம் இல்லை என்று சொல்ல வருகிறாரா ?

– என்ற கேள்விகளை ஏற்படுத்தும்படியான பல்முனைப் பாதைகளை யோசிக்க வைக்கும் படியாக இயக்கி இருக்கிறார் . 

நல்ல விசயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதை திரைக்கதைகளை இயக்கினால் இன்னும் உயரம் தொடுவார் சென். எஸ் . ரங்கமசாமி. 

‘அதுதான் கவர்ச்சியும் காமமும் இருக்கே அது போதும்’ என்று எண்ணி இரண்டு  நாயகி கதாபாத்திரங்களையும் ஒரே மாதிரி வடிவமைக்காமல்,

 சைக்கிளிங் ஆர்வம் மற்றும் தீர்க்கமான முடிவுகளோடு ஜஸ்ட் லைக் தட் என்று வாழும் ஒரு பெண் ,  வன விலங்கு போட்டோஃகிராபி ,  ஜிம்னாஸ்டிக்,  ஏரோபிக்ஸ்,  களரி மாதிரியான விளையாட்டுகளில்  தேர்ச்சி என்று இன்னொரு பெண் என்று கதாபாத்திரங்களில் கொடுத்த வித்தியாசம்… 

ஒரு பெண்ணிடம் பெற்ற காதல் பற்றிய சிந்தனையை வார்த்தைகளால் இன்னொரு பெண்ணுக்கு கடத்தும் நாயகன், முதல் காதலனிடம் காட்டும் உடல் மொழிகளை அடுத்த காதலனிடமும் காட்டும் பெண்….

–  என்று இயக்குனரைப் பாராட்ட பல இடங்கள் உண்டு . 

காமநெடிக் காட்சிகள் , பல காட்சிகளில் நீட்டிக்கப்படும் நேரம் இவற்றை எல்லாம் நறுக்கி விட்டு  இதே விஷயத்தை கண்ணியமாக மட்டும்  காட்சிப்படுத்தி,  தியேட்டருக்குக் கொண்டு வந்திருந்தால் படம் பட்டையைக் கிளப்பி இருக்கும் . தேவை இல்லாமல் ஆபாசத்தில் மூழ்கடித்து விட்டார்கள்.

நாயகன் கதாபாத்திரத்துக்கு தோற்றத்தால் நூறு சதவீதம் பொருந்துகிறார் மகத். மிகக் கனமான பாத்திரத்தை சிரத்தையோடு சுமந்து நடித்திருக்கிறார் . பாராட்டுகள் தம்பி . அது மட்டுமல்ல…  சிம்புவிடம் பழகி பழகி  வசன உச்சரிப்பு, குரல், தொனி ஆகியவற்றில் சிம்பு போலவே மாறிவிட்டார் மகத். சிம்புவுக்கு இவர் டப்பிங் குரல் கொடுத்தால் யாராலும் வித்தியாசம் கண்டு பிடிக்கவே முடியாது . 

தேவிகா சதீஷ்,  மானசா சவுத்ரி இருவரும் பெண்களின் இரு வித உடல் , குண, செயல் இயல்புகளை அருமையாக வெளிப்படுத்தி நடித்துள்ளார்கள். தேவிகா தனக்கு கிடைத்த கனமான பாத்திரத்துக்கு எல்லா வகையிலும் நியாயம் செய்து அசத்தி இருக்கிறார் . ஆரம்பத்தில் நிலா போல  படத்தை ஆக்கிரமிக்கும் மானசா  மெல்ல மெல்ல நட்சத்திரம்போல  தூரம் போக, தெரு விளக்கு போல அறிமுகம் ஆகும் தேவிகா போகப் போக பவுர்ணமி நிலவாய் ஜொலிக்கிறார் . இங்கும் இதற்கும் இயக்குனரைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை . 

அற்புதமான தீம் மியூசிக்குடன் கூடிய நெகிழ்வான சுகமான இசையால் காட்சியின் உணர்வுகளுக்கு கனம் சேர்க்கிறார் இசையமைப்பாளர் சனத் பரத்வாஜ். மிக சிறப்பான பங்களிப்பு . 

ஜலந்தர் வாசுதேவனின் ஒளிப்பதிவு  காட்சிகளுக்கு அழகும்  சூழலுக்கு பலம் சேர்ப்பதோடு படத்துக்கு ஒரு எலைட் தன்மையைத் தருகிறது . 

கலை இயக்கம், ஆடை வடிவமைப்பு ஆகியவையும் சிறப்பு

‘ ஒரு படம் பார்க்கும்போதோ அல்லது வாழ்க்கையிலோ  ஒரு குறிப்பட்ட நபர் , அல்லது விசயத்தோடு தொடர்ந்து சேர்ந்து இருந்து விட்டால்  போதும் . அது பெரிதாக நம்மைப் பாதிக்கக் கூட தேவை இல்லை. எனினும் அது பிரியும் போதும் அது கூட ஒரு வலி வரும் . திரைக்கதைக்கு அந்த உணர்வே போதும் என்று நினைத்து அதற்கேற்ற காட்சிகளையே கோர்த்து இருக்கிறார்கள் . அதுதான் பலவீனம் . 

அந்த வசதியை சலுகையை எடுத்துக் கொள்ளாமல் இன்னும் சிறப்பாக காட்சிகளை அமைத்து இருக்க வேண்டும் . 

“இப்போ இப்படி ஒரு கதையை அவசியம் சொல்லணுமாக்கும். போங்கய்யா யோவ்….. ?”  என்பது போன்ற  முகச் சுளிப்புகளையோ விவாதங்களையோ அல்லது ஏற்பு மறுப்புகளையோ  உருவாக்க  கூடிய கதை திரைக்கதை. 
ஆனால் அதை அழகாக அலங்கரித்து நறுமணம் கமழ வைக்கும் வகையில்  சிறப்பாகப் படமாக்கி  இருக்கிறார்கள் 

தயாரிப்பாளர் சம்பத் குமாருக்கும் வாழ்த்துகள் 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *