எம்புரான் @ விமர்சனம்

ஆஷிர்வாத் சினிமாஸ் சார்பில் ஆண்டனி பெரும்பாவூர், லைகா புரடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன்,  கோகுலம் சினிமாஸ் சார்பில் கோபாலன், பிரித்விராஜ்  புரடக்ஷன்ஸ் சார்வில் பிரித்விராஜ் சுகுமாரன் ஆகியோர் தயாரிக்க, 

சற்றே நீண்ட கவுரவத் தோற்றத்தில் மோகன்லாலும் கவுரவத் தோற்றத்தில் பிரித்விராஜ் சுகுமாரனும் நடிக்க, மஞ்சு வாரியார் , டோவினோ தாமஸ் , சுராஜ் வெஞ்சரமூடு , இந்தியில் இருந்து அபிமன்யு சிங், கன்னடத்தில் இருந்து கிஷோர், தவிர மலையாள சினிமாவில் உள்ள பெரும்பாலான நட்சத்திரங்கள் பெருமையோடு நடிக்க, (ஆனால் ஒரு தமிழ் நடிகர் கூட இல்லை)

முரளி கோபியின் எழுத்தில் பிரித்விராஜ் சுகுமாரன் இயக்கி இருக்கும் படம் .

2002 இல் குஜராத்தில் நடந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் போல ஒரு சம்பவத்தில் படம் துவங்குகிறது .  உ பி முதல்வர் யோகி ஆதித்யநாத் போன்ற பஜ்ரங் பலி பால்ராஜ் என்ற நபர் ( அபிமன்யு சிங் ) தங்கள் பகுதியில் உள்ள இஸ்லாமியர்களை கொலை வெறியோடு தாக்குகிறார் . 

உயிருக்குப் பயந்து ஓடும் அவர்களுக்கு பக்கத்து ஊரில் உள்ள ஜமீன்தார் போன்ற ஓர்  இந்துப் பெண்மணியும் அவர் ஆட்களும் அடைக்கலம் கொடுக்கிறார்கள் . அங்கேயே உள்ள ஓர் இந்துத்வா வெறியன் பல்ராஜுக்கு தகவல் தர, அங்கே வரும் பல்ராஜ்  இந்துப் பெண்மணியை  சுட்டுக் கொன்று அவர்  ஆட்களையும் கொன்று , தஞ்சம் வந்த இஸ்லாமியர்களை கொடூரமாகக் கொல்கிறான் . நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணை கொடூரமாக வன்புணர்வு செய்கிறான் . கிழவி சிறுமி என்று பாராமல் அடித்துக் கொல்கிறான் . 

அந்த இஸ்லாமியர்களில் ஒருவர், தனது பிள்ளைகளான  குரேஷி ஆபிரகாம் என்ற சிறுவனையும் ( மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால்) , சயீத் என்ற சிறுவனையும் ( கார்த்திகேயா தேவ்)  தப்பிக்க வைக்கிறார் . 

தங்கள் கண் முன்னே தமது  உறவுகள் அத்தனை பேரும் இந்துத்வா வெறிக்கு அநியாயமாகப் பலியாவதை கண்ணீரோடு பார்த்தபடி அந்த சிறுவர்கள்  நடக்கிறார்கள். 

இருபத்தி மூன்று ஆண்டுகள் ஆகிறது .

கேரளாவிலே காங்கிரசும் கம்யூனிஸ்டுகளும் மாறி மாறி ஆண்ட நிலையில் , கேரளாவில் இந்துத்வாவை அதிகாரத்துக்குக் கொண்டு வரும் வேலை பல்ராஜிடம் தரப்படுகிறது . 

கேரள காங்கிரஸ் தலைவரான ஈ கே நாயனாரை ஞாபகப்படுத்தும்  பி கே ராம்தாஸ்   (சச்சின் கடேகர்?) என்ற மக்கள் ஆதரவு பெற்ற முதல்வர் இறந்து விட்ட நிலையில் , அவரது மகனும் இன்றைய முதல்வருமான ஜத்தின் ராமதாஸ் (டோவினோ தாமஸ்) இந்துத்வாவுக்கு உதவுகிறார் . 

ஆனால் அது பிடிக்காத அவரது சகோதரி இந்திரா பிரியதர்ஷினி ராமதாஸ் ( மஞ்சு வாரியர்) அவரை எதிர்த்து அரசியல் செய்கிறார் .  பால்ராஜின் உதவியோடு ஜத்தினே தனது சகோதரியைக் கொல்ல முயல(?) , 
அவரைக் காப்பாற்ற ,  

ஸ்டீபன் நெடும்பள்ளி என்ற பெயரில் கொஞ்ச நாள் கேரள எம் எல் ஏ வாக  இருந்து பின்னர் காணமல் போன தொழிலதிபர் ஒருவர்  (மோகன்லால் ) எழுந்தருளுகிறார் .

(அதுவரை எங்கே போனார் என்கிறீர்களா? இது ஒரி பான் வார்ல்டு சினிமாயல்லே…. ? அதனால் உலகம் எங்கும் உள்ள கள்ளக் கடத்தல்காரர்களிடம் எல்லாம் பில்டப் சண்டை போட்டுக் கொண்டு இருந்தார் . படத்தின் கதைப்படி மோகன் லாலின் வயசு  முப்பது சில்லறைதான். ‘அந்தக் கொழந்தையே நீங்கதான் சார்’ ஞாபகம் வரல? )  

இந்திரா பிரியதர்ஷினியை ஸ்டீபன் நெடும்பள்ளி  காப்பாற்ற , ஜத்தினும் , பால்ராஜும் களம் இறங்க , தனது நம்பிக்கைக்கு உரிய படை வீரனாக இருக்கும் சயீத்தின் ( பிரித்விராஜ் சுகுமாரன்) உதவியோடு ஸ்டீபன் நெடும்பள்ளி என்ற பெயரில் இருந்த ‘அந்த’ நபர் துப்பாக்கி தூக்க, நடந்தது என்ன ? உண்மையில் ஸ்டீபன் நெடும்பள்ளி யார் என்பதே படம். 

ரொம்ப யோசிக்க வேண்டாம்..  குடியிருந்த கோயில், நாளை நமதே, தாய் மீது சத்தியம் …பழைய  தமிழ் சினிமாக்களில் வந்த அதே அதே .. !  

படத்தில் பாராட்ட வேண்டிய முதல் அம்சம் …சங்கிகளின் இந்துத்வா வெறியை,  உரித்து உப்புக்கண்டம் போட்டு இருக்கிறார்கள். பாராட்டுகள். 

அதே போல நீ முஸ்லீம் என்பதாலேயே பாகிஸ்தான் ஆதரவு மன நிலைக்கு போகக் கூடாது என்று சொல்வதன் மூலம் பச்சை சங்கிகளுக்கும் ஒரு செப்பல் ஷாட் 

நமக்குப் பழகிய முகம் என்பதையும் மீறி மஞ்சு  வாரியாரின் சிறப்பான நடிப்பு. 

இடைவேளை முடிந்தவுடன் வரும் காட்சியில் கேரள காங்கிரசும் கேரள கம்யூனிஸ்டும் ஒருவர் முகத்தில் ஒருவர் காறித் துப்பிக் கொள்ளும் காட்சி  , அபார அத்திப்பூ. 

சிறுவயது ஆப்ராம் குரேஷி, சயீத் சம்பந்தப்பட்ட பாகிஸ்தான் காட்சிகளில் லொக்கேஷனும் சுஜித் வாசுதேவின் ஒளிப்பதிவும் பிரம்ம்ம்மம்ம்மிக்க வைக்கிறது . சபாஷ் 

மற்றபடி படம் முழுக்க இருப்பது எல்லாம் தேவையில்லாத ஆணி . அதோடு அநியாயமாக தமிழ்நாட்டுக்கு எதிராக வழக்கம் போல பொய் சொல்கிற  – மலையாளப் படைப்பாளிகளைப் பீடித்த – குணமாக்க முடியாத  குஷ்டரோக நோயும் இந்தப் படத்தில் இருக்கிறது.

இந்துத்வாவின் வெறியாட்டத்தை விலாவாரியாகக் காட்டுகிறார்கள். அதிலும் பிரம்மாண்டம் இருக்கிறதே தவிர  அழுத்தம் இல்லை. அபூர்வ  சகோதரர்கள் படத்தில் போலீஸ் அதிகாரி கமல் கொல்லப்பட, விசம் கொடுக்கப்பட்டு தப்பித்து ஆற்றில் ஸ்ரீவித்யா பயணிக்கும் சீன் ஞாபகம் இருக்கா? ஜஸ்ட் ஒரே சீன்தான். ஆனால் இந்தப் படத்தில் இவ்வளவு பணத்தைக் கொட்டியும் அந்த ஒரு சீன் கொடுத்த அழுத்தத்தில் கால்வாசி கூட இதில் இல்லை. அபூர்வ சகோதரர்கள் வந்து கால் நூற்றாண்டு ஆச்சு. சும்மாவா ? கமல்ஹாசன் இல்ல… ?

ஸ்டான்ட் சில்வாவின் சண்டைக் காட்சிகள் அபாரம் 

படம் துவங்கி அறுபத்தி இரண்டாவது நிமிடத்தில் அறிமுகம் ஆகும் மோகன்லால்  நாலு தடவை நடக்கிறார் . ஐந்து தடவை திரும்புகிறார் . ஆறு தடவை பேசுகிறார் . அதில் இரண்டு குளோசப்களில் தமிழே பேசுகிறார் . அதற்குள் படம் ஒரு மணி  நாற்பது நிமிட நேரம் ஓடிப் போகிறது . 

அப்புறம் படம் துவங்கி,  அப்பப்ப காணமல் போய் அப்பப்ப வந்து ஆற அமர உட்காந்து பேசி அடித்து விட்டுப் போகிறார் . 

பார்ப்பவர்களுக்கு லூஸ் மோஷன் போகும் அளவுக்கு ஸ்லோ மோஷன் ஷாட்கள் . பார்ப்பவர்களின் பொறுமை என்னும் பில்டிங் பூகம்பம் வராமலேயே உடைந்து நொறுங்கும் அளவுக்கு பில்டப் ஷாட்டுகள் . . முடியல . 
ஒரு படத்தில் தன் மீது சந்தனம் பூசும் பெண்ணிடம்  கவுண்டமணி, “இத பாரு இங்கப் பூசு …. இத பாரு இங்காப் பூசு… இதோ இங்காப் பூசு. நல்லாப் பூசு ” என்பார். 

அது மாதிரி பெரிய பட்ஜெட்,  கொட்டும் கோடிகள் என தயாரிப்புக்கு காசு இருப்பதால் , ” இதப் பார்.. இப்படி ஒரு ஷாட் வை…. இதப் பாரு.. இப்படி ஒரு ஃபிரேம் வை.    இதோ பாரு .. இப்படி ஒரு ட்ரோன் ஷாட் வுடு.. ” என்று ஷாட் ஷாட்டாக எடுத்துக் குவித்து அடுக்கி இருக்கிறார் இயக்குனர் ப்ரித்விராஜ் சுகுமாரன் 

ஆரம்பத்தில் தமிழில் எம்புரான் என்ற பெயரை அறிவித்த போது அலட்சியம் காட்டி அடி உதை வாங்கியும் அதே அலட்சியம் சப் டைட்டிலிலும் இருக்கிறது . 

”சாவுடி..” என்பதை “சாவ்டி….”  என்றும் “பாம் ஸ்குவாட்…”  என்பதை “பாம்பு ஸ்குவாடு…. ” என்றும் போடுகிறர்கள் . ஆரம்பத்தில் வரும் படத்தின் டைட்டிலிலும் இதே போல ஏகப்பட்ட கந்தர கோலம் .  

” 539 உருண்டையில் 20 உருண்டைதான் நம்முடையது .  (பாராளுமன்றத் தொகுதிகள் ). இதை வச்சு நாம ஒன்னும் சாதிக்க முடியாம  இருக்கோம் ” என்றும் 

”நாட்டோட அரசியல் என்ற விருந்தில் நம்ம பங்கு கறிவேப்பிலை மாதிரித்தான் . நம்மால ஒன்னும் முடியல .. ” என்றும்..

என்னமோ மத்திய அரசு கேரளாவையும் வஞ்சிப்பது போல நீலிக் கண்ணீர் வடிக்கிறது முரளி கோபியின் வசனம் 

அடடா என்ன ஒரு மாய்மாலம !

நேரு காலம் முதல் கொண்டு காங்கிரஸ் ஆண்ட வரை பிரதமர் அலுவலக பியூன் வேலையில் இருந்து அயலுறவுத் துறை உயர் பதவிகள் வரை மத்திய அரசு முழுக்க மலையாளிகள் ஆதிக்கம் இருந்தது . என்ன செய்து அதை எல்லாம் சாதித்தது கேரளா?  20 உருண்டைகளை வைத்துக் கொண்டு முன்னூறு உருண்டைகள் வரை முழுங்கியது எப்படி ? கறிவேப்பிலை கொண்டு வந்து கொடுத்து விட்டு, கறியும் சோறும் பாலும் தேனும் மொத்தமாக சுருட்டிக் கொண்டது எப்படி ?

அவ்வளவு ஏன் ? இப்போது பி ஜே பி ஆளும்போது கூட தமிழகம் , தெலுங்கானா அளவுக்கு கேரளாவுக்கு பாதிப்பில்லையே . எதிர் அரசியல் செய்தாலும் கேரளாவுக்கு வர வேண்டிய பல பசையான  விசயங்களை  எப்படியாவது  மத்திய அரசிடம் இருந்து வாங்கத்தான் மலையாளிகளுக்குத் தெரியுதே . அப்புறம் என்ன ?

படத்தின் உத்தமியாக உண்மை யோக்கியாக உயிர் யோக்கியாக வரும் பிரியதர்ஷினி ராமதாஸ் என்ன சொல்லி நேர்மையின் சிகரமாக ஆகிறார் தெரியுமா?

“நெடும்பள்ளி அணை உடைந்தால்….  கேரளாவே…. அழிந்ந்ந்ந்த்து போகும் . அதைக் காக்க….  ஒரு செக் டேம் கட்ட சொன்னால்… அதிலும்…. ஊழல் செய்கிறது…. நம் மாநில அரசு .. என்னைக்கோ…. ராஜாக்களும் அந்நியரும் போட்ட ஒப்பந்தம் …. இப்போ ராஜாவும் இல்லை, அந்நியரும் இல்லை….  இனியும் எதற்கு…  அந்த 999 ஆண்டு ஒப்பந்தம் ?” என்பதுதான் (”வாங்கி விட்டீர்களா …. ஆங் .. ஆங்.. ஆங்.  குங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்குமம் … ” பாணியில் படிக்கவும்) 

இங்கே அவர்கள் நெடும்பள்ளி அணை என்று சொல்வது முல்லைப் பெரியாறு அணையை  . ராஜா என்பது திருவாங்கூர் சமஸ்தானம் . அன்னியர் என்பது முல்லைப் பெரியாறு அணை கட்டிய வெள்ளைக்கார அரசு 

அது மட்டுமல்ல இந்துத்வ சக்தியான பால்ராஜ் ஒருமுறை , ‘அணையை இடிக்க வேண்டாம் . நாலு ஷட்டரைத் தொறந்து விட்டா போதும் .. கேரளாவே மூழ்கிடும் “என்கிறான். 

அதாவது சங்கிகள் கூட  கேரளாவுக்கு கெடுதல் செய்ய முல்லைப் பெரியாறு அணையைப் பயன்படுத்த வாய்ப்பு உண்டாம் . 

எப்படி மலையாள மாய்மாலம்? 

உண்மைக்குப் புறம்பாக அநியாயமாக முல்லைப் பெரியாறு அணை முன்னாள் மண்டி போட்டு உட்கார்ந்து – படத்தின் ஆரம்பத் தமிழ் போஸ்டரில் ஒரு வார்த்தை இருந்ததே … அதைச் செய்யாவிட்டால் இவர்களுக்குத் தூக்கமே வராது போல. 

இந்தப் படத்தின் கதை துவங்கும் அதே 2002 ஆண்டுக்கு இரண்டு வருடம் முன்பு , முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து கேள்வி வந்தபோது, தாமஸ் என்ற அன்றைய கேரள பொதுப்பணித்துறை  தலைமைப் பொறியாளர் முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து  ஆய்வு செய்தார் . 

ஆய்வு முடித்த நிலையில் அறிக்கையை அவர் அரசுக்கு கொடுப்பதற்குள்  சில சேனல்கள் அவரைப் பேட்டி எடுக்க, கள்ளங்கபடம் இல்லாமல்  திரு தாமஸ் அவர்கள் மிக நேர்மையாக , ” முல்லைப் பெரியாறு அணை மிக வலுவாக உள்ளது .  இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் அதன் பலம் குறையாது . பூகம்பம் வந்தாலும் தாங்கும் ” என்று கூறி விட்டார் . அவர் தமிழர் அல்ல . தமிழ் உணர்வாளரும் இல்லை. மலையாளிதான் . ஆனால் மனசாட்சி உள்ள மலையாளி . 

உடனே அவரை ”எப்படி உண்மையை சொல்லப் போச்சு ? என்று  வீடு புகுந்து அடித்து அவரை ஒடுக்கி உட்கார வைத்தார்கள் . 

அதாவது இந்தப் படத்தின் முதல் காட்சியில் வரும் இஸ்லாமிய மக்கள் என்பது முல்லைப் பெரியாறு ஆணை விசயத்தில் உள்ள நியாயம் உண்மை மாதிரி . 

கேரள இஞ்சினீயர் தாமஸ் தான்  படத்தில் இஸ்லாமியர்களுக்கு மன சாட்சியோடு உதவப் போய் கொல்லப்படும்  இந்து ஜமீந்தார் பெண்மணி மாதிரி . 

முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக தொடர்ந்து பொய் வாதங்களைப் பரப்பும் இந்தப் படக் குழு உள்ளிட்ட நபர்கள்தான் இந்தப் படத்தில் வரும்- உ பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் பிம்பமாக வரும் பல்ராஜ் மாதிரி  
அவர்கள் இந்துத்வ சங்கிகள் என்றால் இந்தப் படம் எடுத்தவர்கள் மலையாளச் சங்கிகள். 

அப்படி இருக்க, தன் முதுகில் உள்ள அழுக்கைப் பார்க்காமல் அடுத்தவர்  பின்புறத்தை நுகரும் இந்த மலையாளச் சங்கிகளைப் பார்க்கும் போது,  ‘ஈயத்தைப் பாத்து இளிச்சதாம் பித்தளை’ என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது .  

இந்தப் படத்துக்கு பணம் போட்டு இருக்கும் லைகா சுபாஷ்கரனின்  தன்மானம் பிரம்மிக்க வைக்கிறது . 

பொதுவாக தமிழ் நாட்டில் மலையாளிகளில் ஒரு பகுதியினர் என்ன செய்கிறார்களோ … அந்த வேலைகளை எல்லாம் தமிழர்கள் கேரளாவில் செய்வதாக அநியாயமாக  பொய்யாக  காட்சிப்படுத்தும் வேலையை ,பல மலையாளப் படங்கள் செய்து வந்தன . ஆனால் ஒரு நிலையில் மலையாளப் படங்களை தமிழ்நாட்டில் எப்படியாவது ஓட வைக்கும் திட்டத்தால் , சிறிய படங்கள் அந்த அல்ப வேலையை,  சுயநலத்துக்காக நிறுத்திக் கொண்டன. நேர்மையால் அல்ல. 

ஆனால் இந்தப் படக் குழுவுக்கு அந்த பயம் இல்லை. “நம்முடே சினிமா பான் வேர்ல்டு சினிமாயல்லே… தமிழு நாடு கண்டில்லங்கேல் போகட்டே… ” என்று, மீண்டும் தமிழர் விரோத வன்மம் கொட்டி  எடுத்து இருக்கிறார்கள் . 

அதுதான் தமிழ்நாட்டில்  மட்டுமின்றி கேரளாவிலேயே படம் கிழியுது . 

மொத்தத்தில் எம்புரான்.. நான் என்ன சொல்வது ,  மேலே உள்ள போட்டோ  பாத்து நீங்களே சொல்வீங்க 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *