ஜெயராம் புரடக்ஷன்ஸ் சார்பில் ஜே. சண்முகம் தயாரிக்க, கவுண்டமணி, ரித்விகா, சவுந்தர்ராஜா, சனா ஆகியோர் நடிக்க,
கதை திரைக்கதை வசனம் எழுதி கணபதி பாலகிருஷ்ணன் இயக்கி இருக்கும் படம், ‘எனக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது ‘
இருக்கட்டும் மெயின் பிராஞ்ச் கல்லா கட்டுமா? பார்க்கலாம் .
கிராமத்து ஏழைச் சிறுவனாக வளர்ந்து வந்த நிலையில் ஒரு சினிமா ஷூட்டிங் யூனிட்டுக்கு புத்திசாலித்தனமாக உதவி செய்து,
அவர்களை கவர்ந்து , அதன் மூலம் சென்னை வந்து , தனது மெக்கானிக் அறிவு மற்றும் ஓவியத் திறனால் உயர்ந்து .
நடிக நடிகையரின் வசதிக்கான படப்பிடிப்புக்கு பயன்படும் கேரவான் எனப்படும் சொகுசு வாகனங்கள் பலவற்றின் அதிபராக வாழ்பவர் கிருஷ்ணன் (கவுண்டமணி)
பியூட்டி பார்லர் வைத்து இருக்கிற ஜோதிடத்தில் தீவிர நம்பிக்கை உள்ள பக்தி மானான மனைவி (சனா) அவருக்கு .
உண்மையான காதலர்களை சேர்த்து வைப்பதை வாழ்வில் முக்கிய வேலையாக செய்யும் கிருஷ்ணனின் ஜாதகத்தில் வரும் ஏழரை சனியால்,
அவரது உயிருக்கே ஆபத்து என்று ஜோசியர் சொல்ல , பதற்றத்தில் இருக்கிறார் மனைவி .
இந்த நிலையில் முக்கிய ஜாதிக் கட்சித் தலைவரின் மகள் வேறு ஜாதிப் பையனை காதலிக்க , விஷயம் தெரிந்த தலைவர் பையனை காலி பண்ண ரவுடிகளை அனுப்ப ,
காதல் ஜோடி கவுண்டரிடம் தஞ்சம் அடைய ,
ஜாதகம் ஜெயித்ததா ? காதல் ஜெயித்ததா என்பதே இந்த படம் .
மீண்டும் கவுண்டமணியின் காமெடி ரகளை . ஒரு தலைமுறை கடந்த பின்னும் அதே உற்சாகத்தோடு ரசிக்க முடிகிறது .
டிப் டாப் டிரஸ் , பெண்களோடு டான்ஸ் , என்று ரகளையாக கவுண்டர் அறிமுகமானாலும் நிஜ ரகளை அவரது காமெடி வசனங்கள் .
எம் ஜி ஆர் சிவாஜி தவிர சினிமாக்காரர்கள் யாரும் அவரிடம் இருந்து தப்பவில்லை . எஸ் ஜே சூர்யா ,ஜி வி பிரகாஷ் குமார் வரை எல்லோரையும் வைத்து பந்தாடுகிறார் மனிதர் .
சினிமா உலக களேபரங்களையும் தனக்கே உரிய பாணியில் வாருகிறார்
சினிமா மட்டுமா ? அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் , பேஸ்புக் , டுவிட்டர் வலைதள பிரியர்கள் என்று கவுண்டமணியின் காமெடி ஹை டெக் ஆகி இருக்கிறது இந்தப் படத்தில் .
ஆனால் அய்யகோ… இதெல்லாம் முதல் பகுதி வரை மட்டுமே . இரண்டாம் பகுதியில் சுமார் முக்கால் மணி நேரத்துக்கு கவுண்டமணிக்கு லீவு கொடுத்து அனுப்பி விடுகிறார்கள் .
கவுண்டமணி இருக்கும் படத்தில் கவுண்டமணி இல்லாமலும் தன்னை நிரூபிக்க வேண்டும் என்ற, இயக்குனர் கணபதியின் நோக்கம் பாராட்டுக்குரியதுதான் . ஆனால் படத்தில் அது அமையவில்லை .
சும்மா எதாவது பேசியே சிரிக்க வைக்கும் திறன் உள்ள கவுண்டமணிக்கே கேரவன் ஓனர் என்ற அட்டகாசமான கேரக்டர் பிடித்த இயக்குனர் ,,
கவுண்டமணி இல்லாத அந்த காதல் பிளாஷ்பேக்குக்கு எவ்வளவு கவனமாக இருந்து எப்படிப்பட்ட ஒரு சூப்பர் டிராக் பிடித்து இருக்க வேண்டும் ? அங்கேதான் ஆட்டம் காண்கிறது படம் .
மீண்டும் எப்போதடா கவுண்டர் வருவார் என்ற எதிர்பார்ப்பில் கடுப்புதான் வருகிறது . வந்த கொஞ்ச நேரத்தில் படம் முடிந்து விடுகிறது
திரைக்கதை முழுக்க கவுண்டர் வரும்படி செய்து , அவர் காமெடி படத்துக்குக் கொடுக்கும் பலத்தை மிஞ்சும் வகையில் ஒரு நல்ல கதை திரைக்கதை பண்ணி அதை கவுண்டமணி வழியே சொல்லி இருந்தால் …
நிச்சயமாக வேறு கிளை வைத்து இருக்கவே முடியாது .
இப்போ .. எதிர்லயே இன்னொரு கடையும் திறக்கலாம் போல .