கைதேர்ந்த பிக்பாக்கெட்காரன் ஒருவனுக்கு (வைபவ்), ஓர் உடற்பயிற்சி நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவில் பணியாற்றும் பெண் (ஐஸ்வர்யா), விற்பனை விசயமாக போன் செய்கிறாள் .
” நான் ரொம்ப ஏழை ” என்று இவன் நடிக்க , பரிதாபப்படும் அவள் அவனுக்கு தனது நிறுவனத்திலேயே வேலை ஏற்பாடு செய்கிறாள் . ஆனால் அவன் அங்கேயே திருடிக் கொண்டு போய் விட ,
அதனால் அவளுக்கு வேலை போய்விடுகிறது . நாற்பதாயிரம் ரூபாய் பணமும் கட்ட வேண்டி வருகிறது .
மீண்டும் பிக்பாக்கெட்காரனை சந்திக்கும் அவள் , தனது நிலைமையை சொல்லி அழ, ஜொள்ளு விடும் அவன்அந்தப் பணத்தைத் தருகிறான் . உடனே அவன் மீது அவளுக்கு காதல் வருகிறது .
அந்தப் பெண்ணின் அண்ணன்கள் (வி டி வி கணேஷ் , தீபன்) மீனவக் குப்பத்தில் சாவுக்குத்து ஆடும் தொழிலை கற்றுத் தருபவர்கள் .
‘எல்லாரையும் விட சிறப்பாக நீ சாவுக்குத்து டான்ஸ் ஆடினால் உனக்கு எங்கள் தங்கையை திருமணம் செய்து தருகிறோம்” என்று சொல்ல, அவனும் சாவுக்குத்து கற்று ஆடி , திருமணத்துக்கு சம்மதம் வாங்குகிறான்.
இந்த நிலையில் ஒரு இளம் பெண் நடுரோட்டில் காரில் அடிபட்டு உயிர் விட , அவள் வைத்திருந்த செல்போனை திருடிக் கொண்டு வருகிறான் .
அந்த செல்போன் வழியே பேயாக வரும் அந்த செத்துப் போன இளம்பெண் (ஓவியா) , ‘என்னை காதலிப்பதாக சொல்லி ஏமாற்றி வேறொரு திருமணம் செய்து வாழும் தன் காதலனை(கருணாகரன்) பழிவாங்க உதவ வேண்டும்’ என்கிறாள் .
பிக்பாக்கட்காரன் மறுக்க ,அவனது காதலியை பிடித்து ஆட்டுகிறாள்.
பேயின் காதலனை தேடித் போகும் அந்த பிக்பாக்கெட்காரன், தனதுகாதலியை எப்படி மீட்டான் என்பதுதான் இந்த ‘ஹலோ நான் பேய் பேசறேன்’ படம் ! .
நடன அசைவுகளில் ஸ்பெஷலாக ஒன்றும் இல்லை என்றாலும் ஐஸ்வர்யா கஷ்டப்பட்டு சாவுக்குத்து ஆகி இருக்கிறார் . வைபவ் உற்சாகமாக நடிக்க முயல்கிறார் .
பேய் வருகிறது . சிற்சில இடங்களில் மிரட்டுகிறது . வைபவ் , விடிவி கணேஷ் , யோகி பாபு , ஆகியோர் சில காட்சிகளில் சிரிக்க வைக்கிறார்கள் . மறுப்பதற்கு இல்லை .
ஆனால் இதையே சாக்காக வைத்து இவர்கள் அடித்து இருக்கும் கூத்து இருக்கிறதே .. கொடுமை !
ஒருவன் வளைத்து வளைத்து பிக்பாக்கெட் அடிப்பான். அதனால் எல்லாம் தப்பு இல்லை . செத்துப் போன பெண்ணின் செல்போனை திருவது மட்டும்தான் குற்றம் என்று இந்தப் படம் சொல்கிறது .
கேட்டால் காமெடி படம் லாஜிக் பாக்காதீங்க என்பார்கள் .
வறுமை என்று சொன்ன பொய்யை நம்பி, வேலை வாங்கிக் கொடுத்த பெண்ணுக்கே வேலை போகும்படியாக, அங்கேயே திருடி விட்டு வரலாம். அவனை மீண்டும் அந்தப் பெண் பார்க்கும்போது,
போலீசில் எல்லாம் பிடித்துக் கொடுக்கத் தேவை இல்லை . அவனிடம் அழுது கெஞ்சினால் போதும் .
அவனும் மனம் மாறி எல்லாம் அல்ல… ‘பிகர் நல்லா இருக்கே . பின்னாடி பயன்படும் ‘ என்று எண்ணி , திருடிய பொருளுக்கான பணத்தைக் கொடுத்து விட்டால் போதும் . அடுத்த நொடியே அவனை லவ் பண்ணலாம்
— என்றும் இந்தப் படம் தமிழ்நாட்டு இளம் பெண்களுக்கு அறிவுறுத்துகிறது . கேட்டால் இதற்கும் காமெடி படம் லாஜிக் பாக்காதீங்க என்பார்கள் .
சாவுக்குத்து ஆட்டத்தை சொல்லித் தருவதை தொழிலாகக் கொண்ட விடிவி கணேஷ் , எதோ ஒரு எம் என் சி கம்பெனி மேனேஜர் போல படு வசதியாக வாழ்கிறார் .
கேட்டால் இதற்கும் கூட காமெடி படம் லாஜிக் பாக்காதீங்க என்பார்கள் .
சரி, அப்படி என்னதான் காமெடி என்று பார்த்தால் …
புதுசாக ஒன்றும் இல்லை . கடந்த சில வருடங்களாக தமிழில் வந்து கொண்டிருக்கும் பல்வேறு பேய்ப்படங்களில் வரும் அதே பேய். அதே தோற்றம் . அதே மாதிரி டபுள் வாய்சில் பேசுகிறது .
அதே போல மிரட்டுகிறது . மின் விசிறியில் இருந்து, பீரோவுக்குள் இருந்து , பாத்ரூமுக்குள் இருந்து , பரண் மேல் இருந்து , சுவரில் இருந்து வருகிறது .
அதே மாதிரி அடிக்கிறது . அடி வாங்குபவர்கள் அதே போல பயப்படுகிறார்கள். இது போதாதென்று இரட்டை அர்த்த வசனங்கள் வேறு .
இந்த ஏரியாவில் வித்தியாசமாக ஒரு புல் நுனி அளவு கூட யோசிக்கவில்லை .
இன்னொரு பக்கம் வித்தியாசம் என்ற பெயரில் வேலைக்கு போய் சொந்தக் காலில் நிற்கத் தெரிந்த பெண்ணை சாவுக்குத்து ஆடுபவனுக்குத்தான் தருவேன் என்று இருப்பதாகச் சொல்லி,
மீனவ மக்களைக் கேவலப்படுத்துகிறார்கள் .
பேய்க்கு கணவனை ஒரு நாள் ‘கொடு’க்கிறாள் மனைவி . வித்தியாசம் ! வித்தியாசம்!!
மதுமிதா என்ற நல்ல காமெடி நடிகையை ஒரு மொக்கைக் கேரக்டரில் வீணாக்கி இருக்கிறார்கள் . அவரை அந்தக் கேரக்டரில் போட்டு ஒரு சீரியசான விசயத்தை அவர் மூலம் சொல்ல வர,
அதை அவர் சொல்வதாலேயே, பேய்க்கு கணவனை ஒரு நாள் கொடுக்கும் விஷயம் தியேட்டரில் பலமாகக் கிண்டல் செய்யப்படுகிறது .
ஒரு வேளை அதனால்தான் இதை காமெடி படம் என்கிறர்களோ என்னவோ ! wrong casting .
அண்மைக் காலமாக தமிழில் சந்திரமுகி, இருக்கு ஆனா இல்ல , காஞ்சனா, அரண்மனை, டார்லிங் என்று சில பேய்ப்படங்கள் பிச்சுக்கிட்டு ஓடி பெரும் வெற்றி பெறக் காரணம் என்ன ?
அடிப்படையில் அவை எல்லாமே பேய்ப்படங்கள் என்றாலும் ஒவ்வொரு படத்திலும் எதாவது ஒரு வித்தியாசம் தனித் தன்மை இருந்தது அல்லவா?
ஆனால் இந்தப் படத்தில் அபப்டி என்ன இருக்கிறது ? பேயைப் பார்த்து பயப்படவேண்டும் என்றால் மேற்படி படங்களை டிவியில் பார்த்து பயந்து விட்டுப் போகலாமே .
இந்தப் படத்தை வந்து பார்க்க வேண்டும் என்ற அளவுக்கு இந்தப் படத்தில் என்ன வித்தியாசம் , தனித் தன்மை இருக்கிறது .? நத்திங் .
பேய்ப்படம் எடுப்பதும் எடுக்காததும் அவரவர் திறமை . ஆனால் நாம் ஒரு பேய்ப்படம் எடுக்கிறோம் என்றால் அதில் நமது பதிவு நம்ம ஸ்டைல் என்று ஏதாவது ஒன்றை சேர்த்து விட்டுப் போக வேண்டாமா ?
அரண்மனை கூட அந்தத் தனித்தன்மை காரணமாகத்தானே சுந்தர் சி யை ஓர் இடைவேளைக்குப் பிறகு மீண்டும் கமர்ஷியல் கில்லி ஆக்கியது .
இவ்வளவு பேய்ப்படங்கள் வந்து மலிந்து விட்ட நிலையில் புதிதாக ஒரு பேய்ப்படம் வந்தால் அது எப்படி இருக்க வேண்டும் ?
‘செத்த பிறகுதான் ஆவியாக வர வேண்டுமா? கோமா நிலையில் உள்ள பெண் ஆவியாக வந்தால் என்ன/’ என்று யோசித்தான் ஒரு வெள்ளைக்காரன் . என்ன ஒரு சிந்தனை !
தமிழிலேயே அதை மூன்று பேர் முக்கி முக்கி காப்பி அடித்தார்கள் . அப்படி ஒன்று யோசிக்க வேண்டாமா?
இத்தனைக்கும் இந்தப் படத்தின் இயக்குனர் பாஸ்கர் ஒன்றும் அம்பது படம் இயக்கி அசந்து போனவர் இல்லை . இதுதான் அவருக்கு முதல் படம் .
வரும்போதே இப்போது புளித்த புண்ணாக்கில் இட்லி சுட்டுக் கொண்டு வந்தால் எப்படி ?
கமர்ஷியல் , ஜனரஞ்சகம் , பொழுதுபோக்கு , எண்டர்டெயின்மென்ட், ஏவாரம் … இன்னும் இன்னும்.. என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள் .
ஆனால் இப்படி ஓபி அடித்து வெகுஜன ரசிகனின் ரசனையை மழுங்க அடிக்காதீர்கள் .
மீறி தொடர்ந்து செய்தால், தங்களை அவமானம் செய்வதாக ஆத்திரப்படும் பேய்கள், உங்கள் வீட்டையே முற்றுகை இடலாம் .
ஹலோ நான் பேய் பேசறேன்…. சிக்னல் வீக் மற்றும் ஸ்பீக்கர் அவுட் !