பிரபல நடிகை ஜெயப்ரதா மற்றும் அவர் சார்ந்த சமாஜ்வாடி கட்சித் தலைவர் அமர்சிங் ஆகியோர் தயாரிப்பில், சத்யம் படத்தை இயக்கிய A.R.ராஜசேகர் இயக்கத்தில்,
ஜெயப்பிரதாவின் மகன் சித்து கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடித்துள்ள படம் உயிரே .. உயிரே !
ஹார்ட் பீட் எம்புட்டு ? வாங்க பாத்துருவோம் !
டெல்லியில் இருந்து சென்னைக்கு விமானம் ஏறும் இளைஞன் ஒருவன் (சித்து), அதே விமானத்துக்காக டெல்லி ஏர்போர்ட்டில் காத்திருக்கும் ஓர் அழகான இளம்பெண்ணை (ஹன்சிகா) பார்த்து,
ஜொள்ளு விடுகிறான். ஒரு குறிப்பிட்ட மாடல் காஸ்ட்லி வளையலை யார் வாங்கிக் கொடுத்தாலும் அவனையே கல்யாணம் செய்து கொள்ளத் தயார் என்ற அளவுக்கு வளையல் பைத்தியம் அவள்.
இப்படி இருக்கையில் அடுத்தடுத்த இருக்கையில், விமானத்தில் இருவரும் பயணம் செய்கிறார்கள் . அவன் விடும் ஜொள்ளு அவளால் தாங்க முடியவில்லை .
இந்த நிலையில் சென்னையில் பெய்யும் பெருமழை காரணமாக விமானம் கோவாவுக்குத் திருப்பி விடப்படுகிறது . கோவா போக வேண்டும் என்பது அவளது பல நாள் கனவு .
இப்போது கோவா விமான நிலையத்தில் இருந்தும் கோவாவை சுற்றிப் பார்க்க முடியவில்லையே என்று அவள் வருந்துகிறாள் .
நாயகனின் நண்பன் ஒருவனின் திருமணம் அதே நாளில் கோவாவில் நடக்கிறது . அதற்குப் போக முடிவு செய்யும் அவன் அவளையும் அழைக்கிறான் . கோவா பார்க்கும் ஆசையில் அவளும் போகிறாள் .
அங்கே அவளுக்கு எல்லோருடனும் உணர்வுப் பூர்வமாக பழகும் அனுபவம் தருவதற்காக, அவளை தன் மனைவி என்று சொல்கிறான். அவளும் அதை ஏற்கிறாள் .
கல்யாண மாப்பிள்ளையின் தாய் (ரோகினி) , நாயகனும் தனக்கு ஒரு மகன் போலத்தான் என்று சொல்லி , “அவன் மனைவிக்கு என்று நான் வாங்கி வைத்த பரிசு ” என்று சொல்லி,
தருவது… நாயகிக்கு ரொம்ப பிடித்த அந்த காஸ்ட்லி வளையல் .
விளைவு? நாயகனை லவ்வ ஆரம்பிக்கிறாள் நாயகி .
இதற்கிடையே கோவாவில் சிலர் நாயகியை கற்பழிக்க முயல , அவர்களை அடித்து அவளைக் காப்பாற்றுகிறான் நாயகன் .
ஒரு வழியாக இருவரும் சென்னை வந்து சேர்கிறார்கள் .
சென்னை விமான நிலையத்தில் நாயகியை வரவேற்க வந்திருக்கும் நபரைப் பார்க்கும்போது,
சென்னை விமான நிலையத்தின் கண்ணாடிக் கூரை நூறாவது முறை இடிந்து விழுவது போல ஒரு ஷாக் ! (சும்மா ஒரு பில்டப் தான்) நாயகனுக்கும் அவனை வரவேற்க வந்திருக்கும் அவனது அக்காவுக்கும் !
எப்படி ?
நாயகியை வரவேற்க வந்திருக்கும் அவளது அண்ணன், நாயகனின் அக்காவை லவ் என்ற பெயரால் டார்ச்சர் செய்தவன் . அதனால் நாயகனிடம் அடி வாங்கி , அது படாத இடத்தில் பட்டு… ஆண்மை இழந்தவன் .
அதற்குப் பிறகு ஒரு பெண்ணை காதலித்து மணந்து குழந்தை இல்லாமல் வாழ்பவன் . சொந்த அப்பாவின் வெறுப்புக்கு ஆளானவன் .
கல்லூரித தேர்வு எழுதவும் அண்ணனை அப்பாவுடன் சேர்த்து வைக்கவும்தான் நாயகி இப்போது சென்னைக்கே வந்திருக்கிறாள் .
இந்த நிலையில், தங்கையின் காதலன் யார் என்பதை அறிந்த அந்த அண்ணன் ‘இவனைத் தவிர யாரை காதலித்தாலும் ஏற்கிறேன் . ஆனால் இவனை ஏற்க மாட்டேன்’ என்று கூறி காதலை பிரிக்க முயல்கிறான் .
அண்ணனின் அடாவடித்தனத்தை நாயகி தனது அப்பாவிடம் சொல்லி விட்டால் அப்பா மீண்டும் அண்ணனைப் புறக்கணித்து விடுவார் . ஆனால் அதில் நாயகிக்கு விருப்பம் இல்லை .
உறவுகளை பிரித்து தங்கள் காதலை நிறைவேற்றிக் கொள்ள நாயகனுக்கும் விருப்பம் இல்லை .
இந்த நிலையில் இவர்களின் காதல் வென்றதா ?அண்ணனின் வெறுப்பு வென்றதா ? என்பதே இந்தப் படம் !
யாவரும் நலம் , இப்போது சூர்யா நடிக்கும் 24 ஆகிய படங்களை இயக்கிய விக்ரம் குமாரின் இயக்கத்தில், நம்ம பி சி ஸ்ரீராமின் ஒளிப்பதிவில், நிதின் , நித்யா மேனன் நடிக்க,
2012 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த இஷ்க் படத்தின் ரீமேக்தான் இந்த உயிரே உயிரே .
முதல் படத்திலேயே காதல் சண்டை என்று சகலமும் செய்து பார்த்து இருக்கிறார் சித்து . நடிப்பு ஓகேதான்.
ஆனால் . வசன உச்சரிப்பில் அலட்சியம் மற்றும் அதிக பட்ச தெலுங்கு வாசனை! ”கடவுளே… கடவுளே” என்பதை ”கடலே…. கடலே….” என்று சொல்கிறார்
படம் முழுக்க ஹன்சிகாவை வளைத்து வளைத்து ரசித்து ரசித்து லயித்து லயித்து அழகாக படமாக்கி இருக்கிறார்கள். ஹன்சிகாவும் ‘புரிந்துணர்வு’ ஒப்பந்தம் போட்டுக் கொண்டு,
விதம் விதமாக உதட்டை பிதுக்கி அதக்கியும் , கீற்றுப் பார்வை பார்த்தும் , இடுப்பை டிஸ்ப்ளே செய்தும் கிளைமாக்சில் கிளிவேஜ் காட்டியும் அவிழ்த்துப் போட்டுவிட்டு நிற்காத குறையாக நடித்து உள்ளார் .
ஒளிப்பதிவு சிறப்பாக, வண்ண மயமாக உள்ளது.
அனுப் ரூபன் இசையில் பாடல்கள் ஒகே . பின்னணி இசை இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் .
சின்ன சின்ன விசயங்களுக்கு எல்லாம், இயக்குனர் மயங்கி மயங்கி கொடுக்கும் பில்டப் எரிச்சலையே தருகிறது
முன் பின் அறியாத — பார்த்த உடன் ஜொள்ளு விடுபவனைப் பார்த்து எரிச்சல் ஆகும் ஒருத்தி, அவனோடு கோவாவை சுற்றிப் பார்க்கப் போவதும் ,
அங்கே அவன் மனைவி என்று சொல்வதை ஏற்றுக் கொள்வதும் , அவன் சார்பாக தனக்கு பிடித்த தங்க வளையல் கிடைத்ததும்,
காதலாகி லீக் ஆவதும் , அதாவது கசிந்து உருகுவதும் நல்லாவா இருக்கு ?
அட இஷ்க்கை விடுங்கப்பா . உறவுகளின் அனுமதியோடுதான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற கொள்கை உடைய இரண்டு நபர்களுக்கு இடையே காதல் வருவதை,
ஒரு அட்டகாசமான டிராக்கில் கவிதை போல சொல்ல வேண்டாமா ? என்னப்பா நீங்க ! இப்படியா இடுப்பைப் பார்த்தான், தொப்புளில் திருஷ்டிப் பொட்டு வைத்தான் என்று சீன் சொல்வது ?
ஒரு பெண்ணின் ஜீன்ஸ் நெகிழ்வில் தெரிகிற பின்புற இடுப்பைப் பார்ப்பதற்காக ஆயிரம் ரூபாய் நோட்டை கசக்கிப் போடுகிற — அதற்காக பல ஆயிரம் ரூபாய் நோட்டுகளை இழக்கிற ,
மும்பைக்கு போகிற விமான டிக்கட்டை ஜஸ்ட் லைக் தட் கிழித்துப் போடுகிற, பணக்காரத்தனம் மிக்க ஹீரோயிசம் இந்தக் கதைக்கு செட் ஆகவில்லை .
ஹீரோ ஒரு மிடில் கிளாஸ் பையனாக இருந்தால் இன்னும் மனசுக்கு நெருக்கமாக இருந்திருக்கும் .
தவிர இவர்கள் காதலுக்கு அண்ணன் மட்டுமே எதிர்ப்பு என்பது (அதுவும் ஒரு சோப்ளாங்கி அண்ணன் ) ரொம்ப வீக்கான ஏரியா .
(அதுவும் அவன் ஆண்மை போகிற அளவுக்கு ஹீரோ அடித்து விட்டான் என்பதெல்லாம் ரொம்ப அநியாயம் .. என்ன கதை சொல்கிறோம் . இந்த கதையின் நோக்கம் என்ன ? என்று பார்த்து,
அதற்கேற்ப சீன வைக்க வேண்டாமா ?)
பெண்ணின் குடும்பத்தில் பல பலபேர் எதிர்ப்பு . ஆனால் அதையும் மீறி அவள் அவனை நம்பி ஓடி வந்தாள். அவளை அழைத்துக் கொண்டு போய் விட்டால் நாளை அந்தப் பெண்ணின் வீட்டில் பலர் ,
பெண் ஓடிப்போன அவமானத்தில் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்வார்கள் என்ற நிலை .
அந்த சூழலில் உறவுகளை அழித்து நமக்கு ஒரு திருமணம் வேண்டாம் என்று நினைக்கும் அவன், அவளை வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்புகிறான் .
அப்படி அனுப்பியதாலேயே அவர்களது காதல் பாதிக்கப்படுகிறது என்று திரைக்கதை அமைத்து, இதில் சாதி ஆணவக் கொலைகள் உட்பட பல விசயங்களை இழுத்து விட்டு,
இதை மீறி அவர்களின் காதலை பெண்ணின் குடும்பம் எப்படி ஏற்றுக் கொண்டது என்று சொல்லி இருந்தால், படம் எங்கேயோ போயிருக்கும்
ஷூட்டிங் போறதுக்கு முன்னாடி, கொஞ்சம் பேனா பேப்பர் எடுத்து எழுதுங்கப்பா !
ஹன்சிகா கொஞ்சம கிளாமர் காட்டுவதால் மட்டுமே ஒரு படம் ஓடி விடுமா ? படம் பார்ப்பவனுக்கு அதுதான் வேண்டும் என்றால் யூ டியூப்பில் முழுசு முழுசா எவ்வளவோ கொட்டிக் கிடக்கே .
நல்ல கதை, கவரும் கேரக்டர்கள், அவற்றை சிறப்பாக பயன்படுத்தும் திரைக்கதை இவை எல்லாம் நன்றாக அமையும்போதுதான் , ஹன்சிகாவின் உதட்டுக் கடிப்பும் , இடுப்பு நெளிப்பும் எக்ஸ்டிரா எனர்ஜி தரும்.
ஜெயப்ரதா நம் மனம் கவர்ந்த மாபெரும் நடிகை . புத்திசாலித்தனம் காரணமாகவோ அல்லது விருப்பம் காரணமாகவோ ,
தன் மகனை தமிழில்தான் அறிமுகப்படுத்துவேன் என்று கொண்டு வந்த அவரது செயலை மதிக்கிறோம் . பாராட்டுகிறோம் .
ஆனால் அதற்கேற்ப செயல்பாடுகள் வேண்டாமா?
தமிழ் சினிமா எந்த லெவலில் இருக்கிறது . இப்போதைய தமிழ் ரசிகனின் மன நிலை , ரசனை உயர்வு என்ன?
கோலி சோடாவும் , காக்காமுட்டையும் தனி ஒருவனும் , பூலோகமும் இறுதி சுற்றும் வந்து கொண்டு இருக்கும் தமிழ் சினிமாவுக்கு,
எப்படி கதை – திரைக்கதை தேர்வு செய்யவேண்டும் என்பதிலும் கவனம் செலுத்தி இருக்கலாம் ப்ரதா!
ஆனால் நான்கு வருடம் முன்பு தெலுங்கில் ஓடிய படத்தை, இப்போது அதுவும் தமிழுக்கு கொண்டு வந்தால் எப்படி ?
விளைவு , ஹன்சிகா மோத்வானியின் காஸ்ட்லியான ஷோ ரீல் ஆகப் போய்விட்டது இந்தப் படம் !
உயிரே .. உயிரே ……. காலாவதி மருந்தால் சிகிச்சை !