கேமியோ பிலிம்ஸ் சார்பில் சி ஜே ஜெயகுமார் தயாரிக்க, நயன்தாரா, அதர்வா, அனுராக் கஷ்யப், ராஷி கன்னா , முக்கிய வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்க,
டிமாண்டி காலனி படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இரண்டாவதாக இயக்கி இருக்கும் படம் இமைக்கா நொடிகள் .
பார்க்கும் ரசிக விழிகள் இமைக்கா விழிகளா ? இல்லை சுமையுணரும் விழிகளா ? பார்க்கலாம் .
பெங்களூருவில் ருத்ரா என்ற பெயரில் கொலைகளை செய்யும் சைக்கோ ஒருவன் ( அனுராக் கஷ்யப்) கொலைகளை செய்வதில் உள்ள அதே தீவிரத்தை ,மேற்படி கொலைகளை விசாரிக்கும் மத்திய புலனாய்வுத் துறை அதிகாரி அஞ்சலி விக்ரமாதித்தனை ( நயன்தாரா) முட்டாள் ஆக்குவதிலும் காட்டுகிறான் .
அவன் முகம் கூட தெரியாமல் தவிக்கிறாள் அஞ்சலி . காவல்துறையில் ஒரு குழு அஞ்சலிக்கு ஏற்படும் சிக்கல்களை ரசிக்கிறது .
பிரிந்து போன அம்மா அப்பாவால் தனி மரமாக வாழும் ஒரு இளம் பெண் (ராஷி கன்னா) , வாழ்நாள் முழுக்க,
பிரேக் அப் என்ற பேச்சுக்கே இடம் கொடுக்கக் கூடாது என்ற நிபந்தனையோடு , அஞ்சலியின் தம்பியான அர்ஜுனை ( அதர்வா ) காதலிக்கிறாள் .
ஆனால் அவளது நண்பன் ஒருவன் அவளிடம் எடுத்துக் கொள்ளும் அதீத உரிமையால் அர்ஜுனுக்கு ஏற்படும் தவறான புரிதல் காரணமாக இருவருக்கும் பிரேக்கப் ஆகிறது .
ஒரு நிலையில் மனம் மாறி பெங்களூருவில் இருக்கும் காதலியை பார்க்கவும் அப்படியே அக்காவை பார்க்கவும் அர்ஜுன் கிளம்ப ,
அங்கே பெங்களூரில் சைக்கோ ருத்ரா ஒரு கொலை செய்ய போலீஸ் துரத்த ,
அர்ஜுனையும் அவன் காதலியையும் கடத்தும் சைக்கோ , திட்ட மிட்டு அர்ஜுன்தான் அந்த சைக்கோ என்று போலீஸ் துறையை நம்ப வைக்கிறான்
அஞ்சலி அதிர்கிறாள் . வீட்டுக் காவலில் வைக்கப் படுகிறாள்
அர்ஜுன் காதல் என்ன ஆனது ? அவன் காதலி என்ன ஆனாள்?
சைக்கோ கொலைகள் நின்றதா ?
அஞ்சலி சைக்கோவை வென்றாளா ? படத்தில் விஜய் சேதுபதியின் பங்கு என்ன என்பதே இந்த இமைக்கா நொடிகள் .
படத்தில் எடுத்த எடுப்பிலேயே கவர்கிறவர் சைக்கோ ருத்ராவாக நடித்துள்ள பிரபல இந்திப் பட இயக்குனர் அனுராக் கஷ்யப்தான் .
அட்டகாசமான நடிப்பு . அட்டகாசமான முக பாவனைகள் உடல் மொழிகளோடு ரசித்து நடித்து கடைசிவரை அதிர வைக்கிறார் . மத்திய புலனாய்வுத் துறை அதிகாரி அஞ்சலி விக்ரமாக சும்மா பின்னிப் பெடல் எடுக்கிறார் நயன்தாரா . கோல மாவு கோகிலா நயனுக்கும்
இரண்டு வார இடைவெளியில், வெளி வந்திருக்கும் இமைக்கா நொடிகள் நயனுக்கும் என்ன ஒரு தலைகீழ் ரசவாதம் . அசத்தல் . ஆசம் ! அட்டகாசம் .
அதர்வா காதல் நிறைய ஆக்ஷன் கொஞ்சம், என்று தன் பங்குக்கு சிறப்பாகச் செய்திருக்கிறார் .
ராஷி கண்ணா அழகு மட்டுமல்ல .. காதலன் சொல்லும் ஒரு வார்த்தையில் மனம் உடையும் இடத்தில் நெகிழ வைக்கிறார் .
நயன்தாராவின் கணவன் விக்கிரமாதித்தனாக வந்து சிறப்பாக நடித்து , பின் மறைந்து போகும் ஒரு கேரக்டரில் செண்டிமெண்ட், குறும்பு என்று அழகாக நடித்துள்ளார் விஜய் சேதுபதி.
அஞ்சலி -விக்ரம் தம்பதியின் மகளாக வரும் அந்த சுட்டிக்குழந்தை அசத்தல்.
ஒரு பக்கம் அதிர வைக்கும் சைக்கோ கொலைகள் , இன்னொரு பக்கம் ரசிக்க ரசிக்க ஒரு காதல் என்று இரண்டு டிராக் காட்சிகளையும்,
மாற்றி மாற்றிக் காட்டும் திரைக்கதையை அமைத்து இருக்கும் இயக்குனர் அஜய் ஞானமுத்து , மேக்கிங்கில் அசத்தி இருக்கிறார் .
பட்டுக் கோட்டை பிரபாகரின் வசனங்கள் இயல்பும் நேர்த்தியும் .
ஆர் டி ராஜ சேகரின் ஒளிப்பதிவும் ஹிப் ஹாப் ஆதியின் இசையும் திகில் காட்சிகளுக்கு பலத்தையும் காதல் காட்சிகளுக்கு இனிமையையும் ,
சோகக் காட்சிகளுக்கு நெகிழ்வையும் கொண்டு வருவதில் அம்சமாக ஜெயித்துள்ளன .
சிறு சிறு காட்சிகள் நிறைய அடங்கிய படத்தின் நீளத்தை கட்டுப் படுத்துவதில் படத் தொகுப்பு தோற்றுவிட்டது .
படத்தில் செண்டிமெண்ட் காட்சிகள் முதல் இடத்தையும் காதல் காட்சிகள் இரண்டாவது இடத்தையும் பிடிக்க , அதிக நேரம் ஆக்கிரமிக்கும் சைக்கோ கொலை காட்சிகளுக்கு மூன்றாம் இடமே கிடைக்கிறது .
படத்தில் ஒரு பகுதியாக — இரண்டாம் பாகத்தில், குற்றங்களுக்கு காரணமாக சொல்லப் படும் , மாநில போலீஸ் – சிபிஐ சண்டையை ,
மாநில போலீசின் உழைப்பை உறிஞ்சி சிபி ஐ பேர் தட்டிக் கொள்ளும் வழக்கத்தை படத்தின் நேரடிக் காரணமாக ஆரம்பம் முதலே முக்கியக் கதைப் போக்காக சொல்லி ,
அஞ்சலியை மாநில போலீஸ் அதிகாரியாக சித்தரித்து , ஒரு வழக்கில் குற்றவாளியை கண்டு பிடிக்கும் முயற்சியில் அவர் தன் குடும்பத்தையே இழந்த நிலையில்,
அவர் முக்கால்வாசி கண்டு பிடித்த நிலையில் உள்ளே நுழையும் சி பி ஐ , தான் கண்டு பிடித்ததாக பெயர் வாங்கிக் கொள்வதோடு ,
அஞ்சலி ஒழுங்காக பணியாற்றவில்லை என்று அவமானமும் செய்ய ,
வெகுண்டெழும் அஞ்சலி தானே ஒரு குற்றச் செயலை உருவாக்க , சி பி ஐ அந்த வழக்கை எடுக்க , அவர்களுக்கு தண்ணி காட்டி அலைய விட்டு ,
கடைசியில் மாநில போலீஸ் கண்டு பிடிப்பது போல காட்டி ,
அஞ்சலி செய்தது குற்றமே அல்ல .. சமூக விரோதிகளுக்கான தண்டனை என்று படத்தை முடித்து இருந்தால்,
இன்னும் பரபரப்பாக விறுவிறுப்பாக அர்த்தம் உள்ளதாக இருந்திருக்கும் .
குறைந்தபட்சம் அஞ்சலி குற்றவாளி இல்லை என்பதை தெரிந்து கொண்டாவது இன்ஸ்பெக்டர் மார்ட்டின் செத்து இருந்தால் படத்துக்கு இன்னும் கனம் கிடைத்து இருக்கும் .
இப்படி சில குறைகள் இருந்தாலும் சிறந்த நடிப்பு , அற்புதமான படமாக்கல் , சில நெகிழ்வான காட்சிகளால்,
ரசிகர்களின் கண்களை இமைக்க விடாமல் காப்பாற்றிக் கொள்கிறது இமைக்கா நொடிகள்
மொத்தத்தில் இமைக்கா நொடிகள் .. பரபரப்பான நிமிடங்கள் !