வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க,
விக்ரம் பிரபு, பிரகாஷ் ராஜ் ,சமுத்திரக்கனி, இந்துஜா, குமாரவேல், சரத், மதுமிதா, மோகன்ராம் , அருள் ஜோதி, பரத் ரெட்டி நடிப்பில்,
ராதா மோகன் எழுதி இயக்கி இருக்கும் படம் ’60 வயது மாநிறம்’. மாநிறம் மங்குமா ? இல்லை தங்கமா ? பார்க்கலாம்.
மனைவி இறந்த நிலையில் ஒற்றை மகனோடு (விக்ரம் பிரபு) வாழும் முதியவர் கோவிந்தராஜ் (பிரகாஷ் ராஜ்) அல்சீமர் என்ற,
நினைவிழத்தல் நோயால் பாதிக்கப்படுகிறார் .
வேலை தொழில் என்று பறக்கும் மகன் அவரை மேற்படி நோயாளிகளுக்கான பராமரிப்பு இல்லத்தில் சேர்த்து விடுகிறான் .
‘பணம் கொடுக்கிறோமே பிறகென்ன ?’ என்ற எண்ணம் அவனுக்கு
அங்கே முதியோர் இல்லத்தில் பெண் மருத்துவர் ஒருவர் (இந்துஜா) கோவிந்தராஜை நன்றாக பார்த்துக் கொள்கிறார் .
இந்த நிலையில் மகனின் அஜாக்ரதை காரணமாக கோவிந்தராஜ் தொலைந்து போகிறார் .
தொடர்ந்து நினைவு படுத்தாவிட்டால் தான் யார் என்பதையே மறந்து விடும் அவருக்கு என்ன ஆகுமோ என்ற பதற்றத்தில் மகனும் மருத்துவரும் அவரைத் தேடுகிறார்கள் .
அப்பாவைத் தேடும் பணியில் இணையும் பெண் மருத்துவரோடு , நாயகனுக்கு காதல் வருகிறது .
கன்ஸ்ட்ரக்ஷன் தொழில் விதி மீறல்களுக்கு ஒத்துழைப்புத் தராத ஒரு நல்ல அதிகாரியை கொலை செய்ய முடிவு செய்யும் முதலாளி ஒருவன் ( அருள் ஜோதி ),
அந்த வேலையை காசுக்கு கொலை செய்யும் அடியாள் ஒருவனிடம் (சமுத்திரக்கனி ) ஒப்படைக்கிறார் .
சம்மந்தப்பட்ட அதிகாரியை அவர்கள் கொல்ல முயல ,அந்த வண்டியில் கொவிந்தராஜ் ஏறுகிறார் .
ஒரு நிலையில் போலீசுக்கு பயந்து அடியாளும் அவனது உதவியாளும் ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தை( குமார வேலு- மதுமிதா) மிரட்டி,
அந்த வீட்டில் ரகசியமாகத் தங்குகின்றனர் . உடன் கோவிந்தராஜும் !
போலீஸ் ஒரு பக்கம் தேட , இன்னொரு பக்கம் முதலாளி அடியாளிடம் அவன் மிரட்டி தங்கி இருக்கும் வீட்டில் உள்ள அனைவரையும் கொல்லச் சொல்கிறார் .
ஆனால் அதற்குள் கோவிந்தராஜ் மற்றும் மிரட்டப்பட்ட குடும்பத்தினர் காட்டும் அன்பால் மனம் மாறும் அடியாள் அவர்களை கொல்லத் தயங்குகிறான் .
கொந்தளிக்கும் முதலாளி அடியாளையும் சேர்த்து எல்லோரையும் கொல்ல ஆள் அனுப்ப , நடந்தது என்ன ? நல்லவர்கள் தப்பினார்களா ?
கோவிந்தராஜ் தன் மகனுடன் இணைந்தாரா என்பதே இந்த 60 வயது மாநிறம்
கன்னடத்தில் வந்த ‘kothi bannaa sadhaarana maaykattu என்ற படத்தின் கதைக்கு மிக சிறப்பான திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கிறார் ராதாமோகன் .
அன்பு , பாசம், மனிதாபிமானம், உறவின் வலிமை, பிரிவின் துயர் , முதுமையின் சிரமம் , அதை இளமை தாங்கிப் பிடிக்க வேண்டிய கடமை அனைத்தையும் அடிக்கோடிட்டு வலியுறுத்தும் திரைக்கதை .
தொழில் நுட்ப ரீதியாக பார்த்தாலும் ஒரு காட்சியில் இருந்து பிணைப்பாகவும் இணைப்பாகவும் இன்னொரு காட்சி ,
அதன் நீட்சியாக பிறிதொரு காட்சி என்று செய்நேர்த்தி மிக்க திரைக்கதை .
அந்த திரைக்கதைக்கு தனது வசனங்களால் உயிர்க் காற்று கொடுத்து இருக்கிறார் விஜி . நகைச்சுவை, சீரியஸ் , இரண்டு ஏரியாவிலும் விஸ்வ ரூபம் எடுக்கிறது வசனம்.
ஒரு காட்சியின் வசனத்தில் இருந்து பிறிதொரு காட்சியோ வசனமோ உருவாகும்படி பின்னிப் பிணைந்து இருக்கின்றன திரைக்கதையும் வசனமும் .
விவேக் ஆனந்தின் ஒளிப்பதிவு சிறப்பு .
எல்லோரும் சேர்ந்து சிறப்பான படமாக்கலை சாத்தியப் படுத்த மிச்சம் உள்ள விசயங்களை தன் இசையால் உணர வைக்கிறார் இளையராஜா . அருமை .
படத்தின் பிரகாஷ் ராஜ் தோன்றும் முதல் காட்சியில் அவரது தோற்றமே , மனசுக்குள் சிம்மாசனம் போட்டு உட்காருகிறது .
அந்த சிம்மாசனத்தில் இருந்து கடைசி வரை இறங்காத அற்புத நடிப்பால் மனசின் ஆழப் பக்கங்களை வருடிப் போகிறார் பிரகாஷ் ராஜ் .
படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரு இம்மியும் மாறாமல் ஒரே மாதிரியாக அவர் வழங்கும் பளீர் பளீர் என்று சிரிப்பில் இருக்கும் ஒரு ரிதம் அபாரம் .
விருதுக்கு விருந்து வைக்கும் நடிப்பு .
இதுவரை விக்ரம் பிரபு நடித்த படங்களிலேயே சிறப்பான நடிப்பு இந்தப் படத்தில்தான் . மெல்லிய நுண்ணிய உணர்வுகளை ஜஸ்ட் லைக் தட் காட்டி உணர்ந்து நடித்திருக்கிறார் .
இந்துஜா அழகு. நடிப்பில் இன்னும் அழகு . சில குளோசப் சிரிப்புகள்தான் கொஞ்சம் ….. பட் இட்ஸ் ஒகே .
அடியாள் கேரக்டரில் சமுத்திரக் கனி நிதான நடிப்பை வழங்கி இருக்கிறார் . அவரது பொடியாளாக வரும் தம்பியின் கதாபாத்திர அமைப்பு நடிப்பு இரண்டும் நைஸ்
மதுமிதவோடு சேர்ந்து குமாரவேல் இந்தப் படத்தில் காமெடியிலும் ரகளை செய்கிறார் . ( பாராட்டில் பாதிப்பங்கு வசனத்துக்கு!) .
அப்பாவின் காதலை தான் காதலிக்கும் பெண் சொல்லி நாயகன் அறிந்து கொள்ளும் அந்த ஏரியா அபாரம் . அதை வைத்து இவர்கள் காதலுக்கு இணைப்பு எடுப்பதும் அழகு .
இன்னொருவரை கணவன் என்று எண்ணி அன்பு காட்டும் மறதி நோய் மனைவியை தாங்கும் அந்த வயதான கதாபாத்திரம் அன்பின் சிகரம் . .
இப்படி பகுதி பகுதியாக பிரித்துப் பாராட்ட படத்தில் நிறைய விஷயங்கள் உண்டு .
அடியாள் கேரக்டருக்கு சமுத்திரக் கனியைப் போட்டதாலேயே அவர் அந்த நடுத்தரக் குடும்ப நபர்களை கொல்லப் போவதில்லை என்பது புரிந்து விடுகிறது .
எனவே ஒரு முக்கியமான பதைபதைப்பு ஏரியா சப்பென்று ஆகி விடுகிறது .
அடியாளின் பொடியாள் காதலிக்கும் பெண் திடீரென எம் ஜி ஆர் படத்து நம்பியாருக்கு ஒத்தாசை செய்யும் பெண் போல ஏன் மாறினார் ? புரியல .
இப்படி சொல்ல இன்னும் ஒரு சில விஷயங்கள் இருந்தாலும் …
அதை எல்லாம் விடுவோம் …..
மனிதப் பண்புகளுக்கு மகுடம் சூட்டும் சிறந்த படம் இது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை . உலகம் போகிற போக்கில் இது போன்ற படங்கள் கட்டாயம் தேவை
மொத்தத்தில் …
60 வயது மாநிறம்’…. பொன் நிறம் !