இந்தியன் 2 @ விமர்சனம்

லைக்கா புரடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் அல்லிராஜா , ரெட் ஜெயன்ட் மூவீஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரிக்க, கமல்ஹாசன், சித்தார்த், சமுத்திரக் கனி, பிரியா  பவானி சங்கர், நெடுமுடி வேணு , பாபி சிம்ஹா நடிப்பில் ஜெயமோகன் , கபிலன் வைரமுத்து, லக்ஷ்மி சரவணகுமார் வசனத்தில் கதை திரைக்கதை எழுதி சங்கர் இயக்கி இருக்கும் படம். 

இளைஞர்கள் சிலர்  ஒரு யூ டியூப் சேனல் மூலம் சமூக அவலங்கள் , லஞ்சம், ஊழ்சல், விதி மீறல்கள் இவற்றை எள்ளல் படங்கள் மூலம் வெளிப்படுத்தி , அதன் மூலம் சம்பாதித்தும் வருகின்றனர்
 
அதில் ஒருவனின் ( சித்தார்த்) தந்தை (சமுத்திரக்கனி) விஜிலென்ஸ் ஆபீசர் . . ஒருத்தியின் (பிரியா பவானி சங்கர் ) தாய் (ரேணுகா) பத்திரப்பதிவு அதிகாரி . அவரது கணவர் ( தம்பி ராமையா) மனைவியின் கூஜா . இன்னொருவனின் (நண்டு ஜெகன்) மாமா (மனோபாலா) ஈ சேவை மையத்தில் பணிபுரிபவர் 
 
மேற்படி இளைஞர்கள் தங்கள் வீடியோக்கள் மூலம் ஊழல் ஒழியும் என்று நம்பினால் அது நடக்கவில்லை. அவர்களைத்தான் போலீஸ் அடி வெளுக்கிறது . 
 
மீண்டும் இந்தியன் தாத்தா வந்தால்தான் சரிவரும் என்று நினைக்கும் அவர்கள் , சமூக வலைத்தளங்கள் மூலம் கம் பேக் இந்தியன் என்ற ஹேஷ்டேக்கில்   அழைப்பு விடுக்க, அது இந்தியா முழுதும்   வைரல் ஆகி இந்தியா முழுக்க இருந்தும்  இளைஞர்கள் அழைக்க , 
 
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கடைசியாகப் பயணித்த  விமானம் விழுந்து நொறுங்கியதாகக் கூறப்படும் தைவான் தைப்பையில் தங்கி இந்தியன் மார்ஷல் ஆர்ட்ஸ் கற்றுக் கொடுக்கும் இந்தியன் இந்தியா வருகிறார் . 
 
பல கோடி ரூபாய்  வங்கிக் கடன் வாங்கி விட்டு  தப்பிப் போய் வெளிநாடுகளில் சொகுசாக வாழும் நபர், உட்பட பல   லஞ்ச ஊழல் நபர்கள், அதிகார துஷ்பிரயோகம் செய்பவர்களை விதம்  விதமான வர்ம முறைகள் மூலம் தண்டிக்கிறார் . 
 
உங்கள் வீட்டில்   லஞ்சம் வாங்கும் நபர்கள் இருந்தால் அவர்களை நீங்களே அம்பலப்படுத்துங்கள் என்று சொல்கிறார் . 
 
யூ டியூப் இளைஞர்கள் அப்படியே செய்ய , அதனால் அவர்களின் குடும்பங்களில் இழப்பு, அவமானம், மரணம் , தற்கொலை எல்லாம் நிகழ்கிறது . 
 
அதனால் இந்தியன் தாத்தாவை திட்டித் தீர்க்கும் யூ டியூப் இளைஞர்கள் கோ பேக் இந்தியன் என்று ஹேஸ் டேக் போட , இவர்கள் போலவே குடும்பத்தில் இருந்த லஞ்ச ஊழல் பேர்வழிகளைக் காட்டிக்கொடுத்து அதனால் இழப்புகளை எதிர்கொண்ட எல்லோரும் அப்படியே ஹேஷ் டேக் போடுகின்றனர் . 
 
இந்த மரணங்கள் காரணமாக இந்தியனை வெறுக்கும் தமிழ் நாட்டின் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள்  பெரும் கூட்டமாக திரண்டு இந்தியனைத் தாக்குகின்றனர் . 
 
முதல் பாகத்தில் இந்தியன் தாத்தாவிடம் வர்ம அடி பெற்ற  சி பி ஐ ஆபீசர் கிருஷ்ண ஸ்வாமியின்  (நெடுமுடி வேணு) மகன் (பாபி சிம்ஹா)  இப்போது சிபிஐ அதிகாரியாக ஆகி , இந்தியனை பிடித்து தந்தைக்கு ஏற்பட்ட  களங்கத்தை துடைக்க முயல , 
 
மக்களே  இந்தியனை வெறுக்கும் நிலையில் நடந்தது என்ன என்று ரெண்டு  சீன் சொல்லி,  மீதி இந்தியன் 3 இல் பாருங்க என்று , பிரிட்டிஷ் இந்தியா காலத்துக் கதைக்கு முன்னோட்டம் காட்டி அனுப்பி வைக்கிறார்கள் . 
 
நடிப்பால் அசத்தி பிரமிக்க வைக்கிறார் கமல் .  தைப்பையில் எடுக்கப்பட்டு இருக்கும் அந்த அட்டகாசமான காலண்டர் போட்டோ ஷூட்  பாடல், லஞ்ச ஊழல் பேர்வழி ஒருவரை இந்தியன் விண்வெளியில் இருப்பது போல ஜீரோ கிராவிட்டியில் கொள்வது போன்றவற்றில் ஷங்கரின் தொழில் நுட்ப மேம்பாடு தெரிகிறது .  
 
ரவிவர்மனின் ஒளிப்பதிவு சிறப்பு. 
 
அனிருத்தின் இசை ஈர்க்கவில்லை. முதல் பாகத்துக்கு ஏ ஆர் ரகுமான் போட்ட தீம் மியூசிக் இந்த பாகத்திலும் வரும்போது சிலிர்ப்பு. 
 
குஜராத் கோடீஸ்வரரின் தங்க அரண்மனை செட் பிரம்மிக்க வைக்கிறது . குஜராத்தை ஷங்கர் ஒரு குத்து குத்தி இருப்பது ரசிக்க வைக்கிறது . 
 
திரைக்கதை வசனம் பலவீனம் . 
 
படத்தில் இந்தியன் தாத்தா வருவதற்கு முன்பு வரை  சித்தார்த் அன் கோ வை வைத்து என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும். ஆனால் அவர் வந்த பிறகு அவர் வழியாகவேதான்   திரைக்கதை  பாய்ந்து இருக்க வேண்டும் . அதை விட்டு விட்டு சித்தார்த், நண்பர்கள் குடும்பம் என்று காட்சிகள் போகிறது.
 
சமுத்திரகனி கதை என்ன ஆகும் என்பது  பாமர ரசிகனுக்குக் கூட ஆரம்பத்திலேயே புரியும்படி இருக்கிறது .  இந்தியன் அல்லாத அந்தக் காட்சிகள் யாவும் பெரும்பாலும் யூகிக்க முடிந்த low key level சாதாரண டிராமா. வேற படத்தில் இருந்து உருவி இங்கே கோத்து விட்ட மாதிரி ஒரு உணர்வு. படமாக்கலும் சிறப்பாக இல்லை. 
 
ஒரு அயோக்கியன் தவறு செய்தான் என்றால் அவன் அதற்குரிய தண்டனை அடைவான்தான். அவன் குடும்பம் கதறும்தான்..துடிக்கும்தான்.  ஆனால் அதை அழுத்தமான காட்சிகள் மூலம் சொல்வது என்பது படத்தின் நோக்கத்தின் தலையிலேயே மண்ணை அள்ளிப் போடும் வேலை . . 
 
அப்பா லஞ்சம் வாங்கினார். அம்மா செத்துப் போச்சு . அவ்வளவுதான் . அதை கேரக்டர் ஃபீல் பண்ணினால் போதும் . அதை விட்டு விட்டு இப்படி டீட்டெயில் செய்து உணர்ச்சிகரமாக காட்சிகள் வைத்து அதுக்கு மியூசிக் எல்லாம் போட்டு சினிமாஸ்கோப் திரையில் காட்டும்போது படம் பார்க்கும் ரசிகனுக்கு என்ன தோன்றும்?
 
நம்ம  குடும்பத்தில் லஞ்ச ஊழல் பேர்வழிகள் இருந்தால் அம்பலப்படுத்த வேண்டும்னு ஷங்கர் சொல்றாரு. ஆனால் அப்படி அம்பலப்படுத்தினால் இப்படித்தான் நம்ம வீட்டிலும் நடக்கும் போல இருக்கே. அய்யய்யோ… வேணாம்பா இந்த வேலை… படம் பார்த்துட்டு  கிளம்பும்போது ஷங்கர் சொல்ற ஐடியாவை இந்த சீட்லயே  விட்டுட்டுப் போயிடனும் என்று ரசிகர்கள் முடிவு செய்யும்  அளவுக்கு,  இருக்கிறது அந்தக் காட்சிகள். 
 
இந்தியனை மீண்டும் இந்தியாவுக்கு வர வைப்பது  சித்தார்த் கதாபாத்திரம்தான் . ஆக  சித்தார்த் கதாபாத்திரத்துக்கு ஏற்படும் இழப்பு உட்பட எல்லாவற்றுக்கும் அவரே பொறுப்பு . அதில் இந்தியன் தாத்தாவின் தவறு ஏதும் இல்லை. எனவே  சித்தார்த் கதாபாத்திரத்தின் தாய் இறந்த நிலையில் சுடுகாட்டில் அவரை  இந்தியன் சந்திக்கும் காட்சியில் , இந்தியன் ஏன் அப்படி பம்ம வேண்டும் ? 
 
இதை விட இழப்புகளைப் பார்த்த இந்தியன் கதாபாத்திரம் அப்போதும் கம்பீரம் மாறாமல்தானே பேச வேண்டும்? எதுக்கு அப்படி தயங்கித் தயங்கிப் பேசவேண்டும் ?  
 
லஞ்ச ஊழல் செய்ததோடு பலரின் மரணத்துக்குக் காரணமான சமுத்திரக்கனி கதாபாத்திரம் ஜெயிலுக்குப் போனதால் அவர் மனைவி தற்கொலை செய்து கொள்வாராம்.
 
அந்த சேதி டிவியில் வந்து அதனால் ஒட்டுமொத்த தமிழக, தென்னிந்திய , இந்திய, தெற்காசிய, ஆசிய, அகில உலக, சூரிய குடும்ப, பேரண்ட, பிரபஞ்ச , பால் வீதி சமூகத்து மக்களேஏ ஏ ஏ ஏ ஏ ஏ ….  ஒன்று சேர்ந்து இந்தியனை அடித்து விரட்டுமாம் . 
 
பெரும்பான்மை சமூக மக்களை முட்டாளாக நன்றி கெட்டவர்களாக அயோக்கியர்களாக சித்தரிக்கும் ஷங்கரின் அநியாய மனோபாவம் இந்தக் காட்சியில்  வெளிப்படுகிறது . 
 
சமூகம் ஒன்றும் அவ்வளவு மோசம் இல்லை. இதோ இந்த விக்கிரவாண்டி இடைத் தேர்தல்வரை காசு வாங்காமல் ஓட்டுப் போடும் ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது .
 
இப்படி பலவீனமான திரைக்கதை , சேம் சைடு கோல் போடும் தவறான காட்சிகள் , திருத்தமாக எழுதப்படாத கேரக்டர்கள் படத்தை பின்னோக்கி இழுத்து விட்டது . 
 
இந்தியன் 1 படத்தின் மிகப் பெரிய பலம் வசனங்கள் 
 
ஆனால் உருப்படியாக மனதில் தைக்கிற மாதிரி ஒரு  வசனம் கூட இல்லை  இந்த இந்தியன் 2 படத்தில் .
 
டீட்டெயில் சொல்வதும் டேட்டா கொடுப்பதும் வசனம் ஆகுமா?  வாயில் … சரி,  கையில் வடை சுட்டு இருக்கிறார் ஜெயமோகன் . 
 
அறுவது வயசுக் கிழவன் எல்லோரையும் அடித்து வீழ்த்துகிறான் என்பது லாஜிக்காக இருக்க வேண்டுமே; என்ன செய்வது  என்ற பதைபதைப்பு மற்றும் சிரத்தை காரணமாக மண்டையை உடைத்துக் கொண்டதால் இந்தியன் 1 படத்துக்குள் வந்ததுதான் வர்மக் கலையில் ஹீரோ வல்லவர் என்ற அற்புதம் . இன்று உலகம்  முழுக்க இந்தியன் படத்தின் அடையாளமாக இருக்கும் அந்த விரல் சுழற்சி,  அந்த அக்கறையால் வந்ததுதான் . 
 
அனால் இந்த இந்தியன் 2 படத்தில் ஏகப்பட்ட லாஜிக் மீறல்.  
 
எனினும் 
 
கல்கி , RRR, ஏன் பாகுபலியை விட இந்தியன் 2  சிறப்பான படம்தான் .

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *