நாய்கள் ஜாக்கிரதை படத்துக்குப் பிறகு தன்னை தமிழ் சினிமாவில் தக்கவைத்துக் கொண்டு இருக்கும் சிபிராஜ், அடுத்து ஒரு பேய்ப் படத்தில் நடிக்கிறார் . படம் ஜாக்சன் துரை (முறைப்படி இதற்கு பேய்கள் ஜாக்கிரதை என்று பெயர் வைத்திருக்க வேண்டும். ஆனால் அந்தப் பெயரை வேறொருவர் பதிவு செய்து விட்டதால் ஜாக்சன் துரை என்று வைத்துள்ளார்கள் .
மாசாணி படத்தை தயாரித்ததோடு விஜய் ஆண்டனியின் சலீம் படத்தை இணைந்து தயாரித்தவரும் , வெளிவந்த இந்தியா பாகிஸ்தான், வெளிவர இருக்கும் சண்டி வீரன் போன்ற படங்களை வெளியிடுபவருமான ஸ்ரீகிரீன் புரடக்ஷன்ஸ் எம் எஸ் சரவணன், இந்தப் படத்தை தயாரிக்கிறார். பர்மா படத்தை இயக்கிய தரணிதரன் இயக்குகிறார் .
“போலீஸ் இன்ஸ்பெக்டர் சிபிராஜ் ஒரு கிராமத்துக்கு போகிறார் . அங்கு சில பேய்கள் நடமாடுவது அவருக்கு தெரிய வருகிறது . அப்புறம் என்ன என்பதுதான் படம் . படத்தில் சத்யராஜுக்கும் ஒரு முழு நீள கதாபாத்திரம் இருக்கிறது . அது ரொம்ப வித்தியாசமான கதாபாத்திரம் , கதாநாயகி பிந்து மாதவி . தைரியமான கிராமத்துப் பெண்ணாக வருகிறார்” என்கிறார் இயக்குனர் தரணிதரன் .
படம் பற்றி சொல்லும் சிபிராஜ் “இனி நானும் அப்பாவும் சேர்ந்து நடிக்கக் கூடாது என்று முடிவு செய்து இருந்தோம் . அதே போல நாய்கள் ஜாக்கிரதை படத்துக்குப் பிறகு மீண்டும் ஒரு போலீஸ் கேரக்டர் வேண்டாம் என்று நானும் நினைத்து இருந்தேன். ஆனால் இரண்டு தீர்மானங்களையும் உடைத்தது இந்தக் கதை.
அதே போல அப்பா ஒரு பேய்ப் படத்தில் நடிக்கிறார் என்றால் கதை எந்த அளவுக்கு அப்பாவை கவர்ந்திருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். தரணிதரனின் பர்மா படம் எடுக்கப்பட்ட விதம் எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது. ” என்கிறார்
வாழ்த்துகள் !