
வாடகை வீட்டு ஓனர்களின் அடாவடியால் பாதிக்கப்படும் ஒரு தந்தையும் மகனும் பல வீடுகள் மாறியே மாறியே நொந்து போகிறார்கள் . ஒரு நிலையில் தந்தை இறந்து விட ,
சொந்தமாக வீடு வாங்கும மகன் (ஜித்தன் ரமேஷ்) அதற்கு தந்தையின் பெயரை வைத்து அழகு பார்க்கிறான் .
ஆனால் அந்த வீட்டில் ஒரு பேய் இருக்கிறது . அது அந்த இளைஞனை பயமுறுத்தி விரட்ட முயல்கிறது . ஆனால் அவனுக்கு வீட்டை விற்க விருப்பம் இல்லை .
ஒரு நிலையில் அந்த பேய் அழகிய பெண்ணாக ( சிருஷ்டி டாங்கே ) கண் முன் தோன்றுகிறது .
தான் சாவதற்கு முன்பு விபததில் சிக்கி இறந்து விட்டானா ? இருக்கிறானா ? என்று தெரியாத தன் காதலனை கண்டு பிடித்துக் கொடுத்தால் வீட்டை விட்டுப் போய் விடுகிறேன் என்று கூறுகிறது பேய்.
இதற்கிடையில் அந்த பங்களாவை விலைக்கு வாங்க முயலும் ஒரு தாதா அது முடியாத நிலையில் பங்களாவை இடிக்க வருகிறான்
பேயோடு அந்தக் காதலனை சேர்த்து வைக்க, இளைஞனால் முடிந்ததா ? பங்களா இடிக்காமல் காப்பற்றப்பட்டதா ? என்பதுதான் இந்த ஜித்…
ஹலோ ! இருங்க .. இருங்க ..அதுக்குள்ளே எங்க ஓடறீங்க?
நாலு வரி படிக்கறதுக்குள்ளேயே தாங்கலன்னா…. ரெண்டு மணி நேரம் இருபது நிமிடம் உட்கார்ந்து பார்த்தவங்களுக்கு எப்படி இருக்கும்?
ஜித்தன் முதல் பாகத்தில் வெள்ளத்தில் செத்துப் போன ரமேஷ் கேரக்டரை வறண்ட சேற்றில் இருந்து மீட்டெடுக்கும் உத்தியிலும் , முதல் பாகத்தில் சொல்லப் படாத கதையாக,
ஆனால் பொருத்தமாக வாடகை வீடு பிரச்னையை கொண்டு வந்த வகையிலும் கதை திரைக்கதை வசனகர்த்தா வின்சென்ட் செல்வா தெரிகிறார்
ஆரம்பத்தில் ஒரு சில காட்சிகளில் என்னவோ வித்தியாசமாக சொல்லப் போகிறார்கள் என்ற எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்துகிறார்கள் . ஆனால் அதை நம்பிய பாவத்துக்காக படம் முடியும் வரை புரட்டிப் புரட்டி அடிக்கிறார்கள்
ஆந்திர தாதாவாக வரும் யோகி பாபு சரியாக இரண்டே இடங்களிலும் கருணாஸ் ஒரே இடததில் மட்டும் சிரிக்க வைக்கிறார் .
இலங்கை பாப் இசைப் பாடலான ”சின்ன மாமியே உன் சின்ன மகளையே ….” பாடலின் மெட்டையும் சில பழைய தமிழ்ப் பாடல் வரிகளையும் பயன்படுத்தி,
ஒரு பாட்டைக் கொடுத்து விட்டு ஸ்ரீகாந்த் தேவா எகிறிக் குதித்துப் போய் விடுகிறார் .
மற்றபடி அண்மையில் பல தமிழ் பேய்ப் படங்களில் பார்த்து சலித்த பாணியிலான காட்சிகள்… அவற்றையும் கடமைக்கு எடுத்து இருக்கிறார்கள் .
பேய்ப்படத்துக்கு லாஜிக் தேவை இல்லைதான் .ஆனால் ஏதோ ஒரு ஒழுங்குக்கும் வரையறைக்கும் உட்பட்டு லாஜிக் மாதிரி ஒரு பாவனையோடாவது காட்சிகள் அமைய வேண்டாமா ? ம்ஹும் ! கொடுமை கொடுமை .
கிளிவேஜ் காட்டிக்கொண்டு நிற்பதைத தவிர சிருஷ்டி டாங்கே ஒன்றும் சிருஷ்டிக்கவில்லை
பத்து வருடத்துக்கு முன்பு ஜித்தன் முதல் பாகத்தில் இருந்த அதே தோற்றத்தில் ரமேஷ் இருப்பதுதான் இந்த படத்தில் பாராட்ட வைக்கும் ஒரே விஷயம் . நடிப்பும் முன்னேறி இருக்கிறது . (வேற வழி?)
மற்றபடி பாராட்ட ஒன்றும் இல்லை .
ஜித்தன் 2… ஜித்தன் முதல் பகத்துக்கு வந்த ஆவி சோதனை