ஸ்ரீ ஸ்டுடியோஸ் மற்றும் அறம் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் கவுசிக் ராம், அஞ்சலி, ஹீரோஷினி , சுவாமிநாதன் நடிப்பில் ராகவ் மிர்தாத் எழுதி இயக்கி இருக்கும் படம்.
எப்படியாவது காதலித்து திருமணம் செய்து கொள்ள விரும்பி அதற்கான திட்ட வரைவறிக்கை தயார் செய்து தனக்குப் பிடித்த ஒரு பெண்ணிடம் ( ஹீரோஷினி) காதலைச் சொல்லி விட்ட — படிப்பு மற்றும் கேரியரில் நாட்டமில்லாத இயல்பான யதார்த்தமான ஒரு பையனை ( கவுசிக் ராம்),
பெற்றோர் வழியே மாப்பிள்ளை பார்க்க வந்து அவனைப் பிடித்துப் போய் உன்னைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுகிறேன் என்கிறாள் , பெரிய படிப்புப் படித்து பிரபல நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஒரு பெண் ( அஞ்சலி )
அவனும் பணக்காரப் பெண்ணை மணக்க , வெகு சீக்கிரமே கருத்து வேறுபாடு வெடிக்கிறது. காதல் முதற்கொண்டு தன்னை இம்ப்ரஸ் செய்ய ஒரு வித பாமரத்தன்மையோடு ( அவள் வார்த்தையில் சொல்வதென்றால் தத்தித்தனம்) அவன் செய்கிற விஷயம் எல்லாம் தனக்காக அவன் செய்வது என்று அவள் நினைக்க,உண்மையில் தனக்கு அவன் வைத்த செல்லப் பெயர் முதற்கொண்டு எல்லாமே அவன் வேறு பெண்களிடம் வழிந்து கொட்டியதன் மிச்சம் என்று ஒரு நிலையில் தெரிய வருகிறது .
“ஆமா. ஆனா இப்போ நான் அதை எல்லாம் செய்வது உனக்காக மட்டும்தான் ” என்று அவன் சொல்ல அவள் ஏற்க மறுக்க இந்த நிலையில் ஆரம்பத்தில் காதல் சொன்ன பெண் மீண்டும் நாயகனைத் தேடி வர , அவள் எல்லாவகையிலும் இவனது செராக்ஸ் காப்பியாகவும் இருக்க , தம்பதிக்குள் விவகாரம் விவாகரத்து வரை போக…
நடந்தது என்ன என்பதே இந்தப் படம் .
அட்டகாசமான ஆழமான சிறப்பான பொருள் பொதிந்த வித்தியாசமான வசனங்களால் கவர்கிறார் இயக்குனர் ராகவ் மிர்தாத்.மனைவி கேரக்டரில் அசத்தி இருக்கிறார் அஞ்சலி . அழகு நடிப்பு இரண்டிலும் அபாரம் .
நாயகன் கவுசிக் ராம் நடிப்பு யதார்த்தம் .
ஹீரோஷினி காதல் அறியாக் காதல் கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக இருக்கிறார்
கோபி ஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவு ரம்மியம் .
மெல்லிய நுண்ணிய காதல் உணர்வுகளை தூக்கி நிறுத்தும் வகையில் ஒலிக்கிறது ஹரி எஸ் ஆரின் இசை .
கதையே ஒன்றும் அவ்வளவு சிறப்பனதில்லை. அப்படியிருக்க அதை சரி செய்ய வேண்டிய திரைக்கதையோ ஆமை நடை போடுகிறது .ஒவ்வொரு காட்சியும் தேவைக்கு மேல் நீளும் அதே நேரம், ஒரே மாதிரி சுற்றிச் சுற்றி வருகிறது . அதுதான் படத்தை பின்னுக்கு இழுத்து விட்டது.
எனினும் மெல்லிய உணர்வுகள் வித்தியாச சிந்தனைகள் குறித்த ரசனை உள்ளவர்கள் பார்க்கலாம்