தயாரிப்பாளர் சந்திரன் அருள் அப்பளம் நிறுவன உரிமையாளர். மலையாளத்தில் மோகன்லால் மம்முட்டி ஆகியோர் நடிப்பில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் .தமிழில் இது இவருக்கு மூன்றாவது படம் .
ராபர்ட் ராஜ் இயக்குனர் கோகுலிடம் உதவியாளராகப் பணியாற்றியவர் .
படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் படத்தையும் படக் குழுவையும் இயக்குனர்கள் வெங்கட் பிரபு, சுசீந்திரன், ஏ எல் விஜய் , கோகுல் ஆகியோர் மனதாரப் பாராட்டி பேசிய காட்சித் தொகுப்புகள் திரையிடப்பட்டன .
தவிர நிகழ்ச்சிக்கும் வந்திருந்தார் சுசீந்திரன் . நடிகர் ஆரியும் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார்.
படத்தின் மோஷன் போஸ்டர் எனப்படும் அசையும் சுவரொட்டியையும் முன்னோட்டத்தையும் மிகுந்த கலையழகுடன் எடுக்கப்பட்ட ஒரு பாடலையும் திரையிட்டனர் .
பிரகாஷ் நிக்கி இசையில் கபிலன் வைரமுத்து இரண்டு பாடல்களையும் பார்வதி ஒரு பாடலையும் எழுதி இருக்கின்றனர்.
சீட்டுக் கட்டில் உள்ள ஜாக்கி , குவீன் , கிங் வடிவம் மற்றும் உடையில் நடிகர்களை நிறுத்தி, அதற்குள் அசைவுகள் நகர்வுகளை கொடுத்து உருவாக்கப்பட்டிருந்த அசையும் சுவரொட்டி,
செம கிரியேட்டிவ் ஐடியா . (உணமையில் அது அசையும் சுவரோட்டிக்கும் மேலே )
முன்னோட்டமும் அழுத்தமாகவும் மிரட்டலாகவும் இருந்தது .
ஒரே அறையில் மெழுகுவர்த்திகள் பொதிந்து எரிய , ஒரு நாற்காலியில் உட்கார்ந்தபடியே லட்சுமி பிரியா நடிக்கும் அந்த பாடல் இயக்குனர் ராபர்ட் ராஜின் அழகான பிரேம்களில்,
அறிமுக ஒளிப்பதிவாளர் முகேஷின் மிகச் சிறந்த ஒளிப்பதிவில் மிக சிறப்பாக இருந்தது. செந்தில் திரவியத்தின் கலை இயக்கம் மிக சிறப்பாக இருந்தது .
இவை எல்லாம் சேர்ந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது .
நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் சந்திரன் ” படம் பண்ணலாம் என்று முடிவு செய்தபோது என் மகன் சுபிஷ் சந்தர் வந்து ‘ அப்பா , நான் ஒரு கதை எழுதி இருக்கேன் .பாருங்க ‘ என்று சொன்னார்.
நான் ”அட போப்பா .. அதெல்லாம் விளையாட்டு இல்லை’ என்று சொல்லிவிட்டு பல கதைகள் கேட்டேன் . ஒன்றும் திருப்தியாக இல்லை .
ஒரு நாள், ‘சரி… நம் மகன் என்னதான் எழுதி இருக்கிறான்னு பார்ப்போமே’ என்று ஸ்கிரிப்டை படித்த போது , வியந்து போனேன் . ரொம்ப நன்றாக இருந்தது. சுபிஷிடம் பேசினேன் . ரொம்ப தெளிவாக இருந்தார் .
அவரே இயக்குநரை முடிவு செய்தார் .படம் எடுத்து முடித்தோம். நான் இன்னும் முழு படத்தை பார்க்கவில்லை. ஆனால் பார்த்தவரை நன்றாக இருந்தது .
தவிர பலரும் படத்தை பாராட்டுவது சந்தோஷமாக இருக்கிறது. . இனி மக்கள் கையில் ” என்றார் .
சுபிஷ் சந்திரன் பேசும்போது “எவ்வளவோ பேய்ப் படம் வருது . இதுவும் ஒரு பேய்ப் படம்தானே . இதில் என்ன ஸ்பெஷல்/’ என்று நீங்கள் கேட்கலாம் . இருக்கிறது . இதில் திரில் இருக்கிறது . ஹாரர் இருக்கிறது.
ஆனால் அவை எல்லாம் லாஜிக்காக , சுவாரஸ்யமாக , அதே நேரம் நீங்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் சிறப்பாக இருக்கிறது.
நல்ல படம எடுத்து விட்டோம் . ஆனால் இப்போது படம எடுப்பதை விட பெரிய விஷயம் படத்தை ரிலீஸ் செய்வது . அப்போதுதான் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் அவர்களை சந்தித்தோம் .
அடுத்த நாளே படம் பார்க்க வந்தார் . படத்தைப் பார்த்தார் . மனதாரப் பாராட்டியதோடு , படத்தை வாங்கி வெளியிட சம்மதித்தார் .
இப்போது என் சுமையை அவர் மேல் சுமத்தி விட்டு நான் இப்போது நிம்மதியாக இருக்கிறேன் ” என்றார்
லட்சுமி பிரியா தன் பேச்சில்
” நல்ல கதை . நல்ல படம் .இதில் நடித்தது நல்ல அனுபவம் . உதாரணமாக நீங்கள் பார்த்த — ஒரே நாற்காலியில் அமர்ந்து பாடும் அந்தப் பாட்டு ..
இது போல படத்தில் பல சிறப்பான , ரசிகர்களைக் கவரும் விஷயங்கள் இருக்கு ” என்றார் .
பூஜா பேசும்போது ஓர் இடைவேளைக்குப் பிறகு நான் தமிழில் நடிக்கும் படம் இது . செம ஸ்கிரிப்ட் . நல்ல மேக்கிங். இது தவிர படத்தின் ஹீரோ சீனிவாசன் , லட்சுமி இவர்களோடு பழகியது நல்ல அனுபவம் .
லட்சுமி சோ ஸ்வீட் . ஒரு டாம் பாய் கேர்ள் . படம் எல்லா ரசிகர்களுக்கும் பிடிக்கும் ” என்றார் .
கபிலன் வைரமுத்து பேசும்போது ” எதிர்பாராமல் அச்சப்படுவது என்பதை யாரும் விரும்புவது இல்லை . ஆனால் திட்டமிட்டு விரும்பி பயப்படுவதை மக்கள் ரொம்பவே விரும்புகிறார்கள் .
ஹாலோவீன் பார்ட்டிகள் , தீம் பார்க்குகளில் உள்ள ஹாரர் அரங்குகள் இதற்கு உதாரணம் . சினிமா அதன் உச்சம் . எனவேதான் பேய்ப்படங்கள் நன்றாக ஓடுகின்றன.
அந்த வகையில் இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவரும் ” என்றார் .
கலை இயக்குனர் செந்தில் திரவியம் பேசும்போது ” ஒரு பங்களா , சில இடங்கள் என்று மிகக் குறைவான ஏரியாவில் படம் நடக்கும்போது கலை இயக்கத்தின் பங்கு மிக முக்கியமானது .
அதை உணர்ந்து பணியாற்றி இருக்கிறேன் . படம் நன்றாக வந்துள்ளது” என்றார் .
இசையமைப்பாளர் பேசும்போது ” மிக வித்தியாசமான திரைக்கதை என்பதால் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மிக சிறப்பாக அமையவேண்டும் . அமைந்து இருக்கிறது ” என்றார்
படத்தின் நாயகன் சீனிவாசன் பேசும்போது
” மிக நல்ல கதை . நல்ல ஸ்கிரிப்ட். ஒளிப்பதிவாளர் , கலை இயக்குனர் எல்லோரும் நன்றாக பணியாற்றினர்.
எனக்கு நல்ல கேரக்டர் . படம் நன்றாக வந்திருக்கிறது ” என்றார் .
இயக்குனர் சுசீந்திரன் பேசும்போது ” கலை இயக்கம் , ஒளிப்பதிவு, இசை , நடிப்பு, இயக்கம் எல்லாவற்றையும் பார்க்கும்போது இந்தப் படம் வெற்றி பெறும் என்பது உறுதியாகத் தெரிகிறது .
அதையும் மீறி இந்தப் படம வெற்றி பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன் . அதற்குக் காரணம் உண்டு .
விஜய் சேதுபதி, விஷ்ணு, இந்தப் படத்தின் ஹீரோ சீனு எல்லோரும் ஒரே நேரத்தில் போராடத் துவங்கியவர்கள் . இதில் விஜய் சேதுபதி சிறந்த இடத்துக்குப் போய் விட்டார் . விஷ்ணுவும் உயர்ந்து விட்டார் .
ஆனால் அவர்களைப் போல உயர வேண்டிய சீனு இன்னும் உயரவில்லை . இந்தப் படம நன்றாக ஓடவேண்டும் . சீனு பெரிய ஹீரோவாக உயர வேண்டும் என்று நான் மனதார விரும்புகிறேன்” என்றார் .
நாயகன் ஆரி பேசும்போது ” படத்துக்கு முதலில் என்னை ஹீரோவாகக் கேட்டு சுபிஷ் வந்தார் . அப்போது நான் மாயா படத்தில் நடித்திருந்த நிலையில் அடுத்து உடனே ஒரு பேய்ப்படம் வேண்டாமே என்றேன் .
சரி பொருத்தமான ஹீரோவை தேடுவோம் என்று சொன்னார் சுபிஷ் . எனக்கு முழு கதையும் தெரியும் என்ற நிலையில் அவர் கேட்ட மாதிரி தோற்றத்துக்கு நான் சொன்ன ஒரு சிலரில் சீனுவும் ஒருவர் .
அவரை பார்த்த உடன் எல்லோருக்கும் பிடிக்க அவரே ஹீரோவானார் . தவிர இன்னொரு பவர்ஃபுல்லான பெண் கதாபாத்திரம் படத்தில் உள்ளது . அதற்கு கனி என்று ஒரு நடிகையை தேர்வு செய்து கொடுத்தேன் .
கடைசியில் பார்த்தால் அந்த நடிகை சுபிஷுக்கும் அவர் தந்தைக்கும் முன்பே தெரிந்தவர் . .
இப்படி எல்லாம் படத்தில் நடிக்காத நானே ஆர்வத்துடன் செயல்படக் காரணம் , படத்தின் அருமையான ஸ்கிரிப்ட்தான் .
இப்போது மேக்கிங்கை பார்த்தால் சொன்னதை விட படம் நன்றாகவே வந்துள்ளது தெரிகிறது ” என்றார்
எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் தன் பேச்சில்
” பல ஹாரர் படங்கள் வந்தாலும் இந்தப் படம் திரைக்கதை , படமாக்கிய விதம் ஆகியவற்றில் சிறப்பாக இருந்தது . மிஸ் பண்ண விரும்பவில்லை .
அதனால்தான் நாங்கள் வெளியிடுகிறோம் ” என்றார் .
நிறைவுரையாற்றிய இயக்குனர் ராபர்ட் ராஜ்
” சந்திரன் சாரின் அருள் அப்பளத்துக்கு விளம்பரப் படம் எடுத்துக் கொடுத்தேன் . அது சந்திரன் சாரின் பாராட்டுக்களை பெற்றுக் கொடுத்தது. அப்படித்தான் பழக்கம் ஏற்பட்டது .
படம் பண்ணலாம் என்று முயன்றபோது சுபிஷ் இந்த கதையை சொன்னார் . நல்லா இருக்கு என்றேன் . நீங்கதான் டைரக்ட் பண்ணனும் என்றார் .
பொதுவா எல்லரும் கதை திரைக்கதை வசனம் இயக்கம்னு பேக்கேஜோடுதான் வருவாங்க .
ஆனா , அவர் சொன்ன கதை எனக்கு மிஸ் பண்ணக் கூடாத ஒண்ணுன்னு தோணுச்சு.
சரி , தயாரிப்பாளர் தேடுவோம்னு சொன்னேன் . சுபிஷ் என்கிட்டே ‘ அதான் என் அப்பா இருக்காரே .. அப்புறம் என்ன?’ ன்னு சிரிச்சார் . நல்ல கதையும் அமைஞ்சு தயாரிப்பாளரும் கிடைச்சப்ப ஏன் தயங்கணும் ?
சந்திரன் சார் கிட்ட பேசினோம் . ஆரம்பிச்சோம் . நல்லபடியா எடுத்தோம் .
முடிந்தவரை குறைவான செலவுல பண்ணனும் என்பதால யாருக்குமே ஒய்வு இல்ல. டெக்னீஷியன் , நடிக நடிகையர் எல்லாரும் கடுமையா உழைச்சாங்க.
ஷூட்டிங் ஆரம்பிக்கிற நேரம் மட்டுமே எல்லோருக்கும் தெரியும். முடியும் நேரம் யாருக்குமே தெரியாது . ஒரு நாள் நேரம் கடந்து போய்ட்டு இருந்தது .
கடைசியில் கேமரா மேன் கிட்ட இன்னும் ஒரே ஒரு ஷாட் னு நான் சொல்ல, அப்படியே களைப்புல அவன் கேமரா மேல சாஞ்சு படுத்துட்டான் . அப்புறம் ஒரு சின்ன வாக்கிங் போயிட்டு வந்து எடுத்துக் கொடுத்தான் .
நான் இந்த மேடையில் எங்கம்மாவை கூப்பிட்டு கவுரவப்படுத்த விரும்பறேன் . என் அப்பா இப்போ இல்ல . நான் டைரக்டர் ஆவேன்னு காத்திருந்தாரு. ஒரு நிலையில் உடம்பு சரி இல்லாம போய்டுச்சு .
எனக்கு வாய்ப்பு கிடைச்சது . படம் ஆரம்பிச்சு ஷூட்டிங் போகும்போது ஒரு சீன் எடிட பண்ணி போட்டுக் காட்டினேன் .
சும்மா கண்ணால பார்த்தாரு. நினைவு எல்லாம் இல்ல . அப்படியே செத்துட்டார் . …” என்று கலங்க , மேடைக்கு வந்த அந்தத் தாய் அழ ,
படத்தின் வெற்றி இதை எல்லாம் ஆனந்தக் கண்ணீராக மாற்றட்டும் !
வரும் 29 ஆம் தேதி திரைக்கு வருகிறது , களம்