T- Series சார்பில் பூஷன் குமார் தயாரிப்பில் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்து, பாடல் வரிகள் எழுதி, பாடி, நடனம் அமைத்து, நடித்து, இயக்கி இருக்கும் பாடல் “ஓ பெண்ணே” .இந்த பாடல் ஒரு பான்-இந்திய பாப் பாடலாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாடலின் ஹிந்தி பதிப்பை ரன்வீர் சிங்கும் . தெலுங்கு பதிப்பை நாகார்ஜூனாவும் வெளியிட தமிழ் பதிப்பை அதற்கான விழாவில் கலந்து கொண்டு, கமல்ஹாசன் வெளியிட்டார்.
நிகழ்வில் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் பேசியபோது, ““கமல் சாருக்கு எனது அன்புகளும் நன்றிகளும். நான் எந்தப் பணியை மேற்கொண்டாலும் அவர் எனக்கு உறுதுணையாகவும், உத்வேகம் கொடுக்க கூடியவராகவும் எப்போதும் இருக்கிறார். இந்த சர்வதேச பாடல் ஐடியாவை முதன் முதலில் அவரிடம் தான் கூறினேன். அவருடைய உத்வேகம்தான் நான் இந்த பாடலை முடிக்கக் காரணமாக இருந்தது. அவருக்கு இசையின் மேல் இருக்கும் பிரியம்தான், என்னையும் அவரையும் ஒன்றிணைத்தது. அதனால்தான் அவர் இதை வெளியிட வேண்டும் என்று விரும்பினேன்.

சுயாதீனக் கலைஞர்கள் வெளியே வர வேண்டும் என்பதற்காகத்தான் கொரோனா காலத்தில் ராக் ஸ்டார் என்ற நிகழ்வை நடத்தினேன். இந்த பாடலின் நோக்கமே சுயாதீனக் கலைஞர்கள் எல்லா மொழிகளிலும் தங்கள் திறமையைக் காட்ட வேண்டும் என்பதுதான். இனிமேல் வரும் சுயாதீனக் கலைஞர்களும் பல மொழிகளில் தங்கள் பாடல்களை உருவாக்க வேண்டும். பல மொழிகளை கற்று கொண்டு, பல மொழிகளில் இசையமைக்க வேண்டும்.
இந்த பான் இந்தியன் பாப் ஆல்பத்திற்கு உங்கள் ஆதரவு தேவை. . T Series-க்கு இந்த நேரத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன். பூஷன் குமார் அவர்களுக்கும் எனது நன்றிகள். உங்களது அன்பும் ஆதரவும் எங்களுக்கு தேவை. “என்றார். .
சிறப்புரையாற்றிய கமல்ஹாசன் , “தேவி ஸ்ரீ பிரசாத்தை எனக்கு பல காலமாகத் தெரியும். இவர் என்னை அதிகமாக வியக்க வைத்துக்கொண்டே இருக்கிறார். பல சாதனைகள் படைத்து அடுத்து அடுத்து என உத்வேகமாக நகர்ந்து கொண்டே இருக்கிறார், அது சிறந்த இசைக் கலைஞர்களுக்கே உண்டான சிறப்பம்சம் இது . இவருக்கு வெற்றி கண்டிப்பாக வந்தே தீர வேண்டும், இவருக்கு வெற்றி தாமதாகிறது என்று எண்ணி நான் வருத்தப்பட்டு இருக்கிறேன். இவருக்கு உங்களது ஆதரவு கண்டிப்பாக தேவை.

திரை இசை பாடல்களைத் தாண்டி, சுயாதீனப் பாடல்கள் நிறைய வர வேண்டும், இசைக் கலைஞர்கள் அதைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. திரை இசை அவர்களுக்கு ஒரு கட்டுப்பாடுதான், சுயாதீனப் பாடல்கள்தான், இசைக் கலைஞர்கள் தங்களுடைய முழுத் திறமையும் வெளிக்காட்ட ஒரு பாதையாக இருக்கும். மற்ற நாடுகளில் திரைப் பிரபலங்களை விட சுயாதீனக் கலைஞர்கள் பிரபலமாகி இருக்கிறார்கள்.
திரைப்படங்களை விட மிகப்பெரிய துறையாக இசைத் துறை வளர வேண்டும், அதற்கு உண்டான தகுதி அதில் இருக்கிறது. அதனால் அதற்கு உங்கள் அனைவரது ஆதரவு தேவை. பழைய காலத்தில் இது அதிகமாக இருந்தது, இப்போதும் மீண்டும் அது வர வேண்டும். தேவிஶ்ரீ பிரசாத்தின் இந்தப் பாடல் பெரும் வெற்றி பெற வேண்டும், தமிழ் சினிமாவிலும் இவர் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்ய வேண்டும். இந்தப் பாடலுக்கு உறுதுணையாக இருந்த பூஷன் குமாருக்கு நன்றி. இந்த பாடலுக்கு உங்கள் ஆதரவை தாருங்கள் “என்றார்.