ஒன் மேன் புரடக்ஷன்ஸ் சார்பில் புவனேஸ்வரி சாம்பசிவம் தயாரிக்க மெட்ரோ சிரிஷ், அருந்ததி நாயர் , மிருதுளா முரளி, சதீஷ், யோகிபாபு நடிப்பில் ரமேஷ் பாரதி இயக்கி இருக்கும் படம்.
காதல் ஜோடிகளுக்கு உதவ, கட்டாயக் கல்யாணங்களை கடைசி நிமிடத்தில் நிறுத்தி, அதன் மூலம் பெற்றோர்களின் எதிர்ப்புக்கு ஆளாகும் நாயகனுக்கும்( சிரிஷ்) குடும்பக்கட்டுப்பாடு பிரச்சார நாடகம் போடும் பெண்ணுக்கும் (மிருதுளா முரளி ) காதல் . தனது செயல்பாடுகளால் பல பெற்றோர்களின் சாபத்துக்கு ஆளாக, அதை விரும்பாத நாயகி இனி அப்படிச் செய்யாதே என்கிறாள்.
பெரும் எதிர் வாதத்துக்குப் பிறகு ஒத்துக் கொள்ளும் நாயகன் கடைசியாக நண்பனுக்கு (யோகிபாபு) மட்டும் உதவப் போக, அது போலீஸ் கேஸ் வரை போகிறது , நாயகி கோபம் கொண்டு பிரிகிறாள். அவளது இளம் விதவை அக்கா (அருந்ததி நாயர் ) நாயகனின் சூழல் பற்றி எவ்வளவோ சொல்லியும் அவள் வேறு கல்யாணத்துக்கு சம்மதிக்கிறாள் .
இன்னும் சில நாட்களில் நாயகனுக்கு கல்யாணம் நடக்காவிட்டால் குடும்பத்துக்கே ஆகாது என்று குடும்ப ஜோசியர் சொல்ல மணமகள் கிடைக்காத நிலையிலும் கல்யாணத்துக்கு நாள் குறித்து ஏற்பாடுகள் நடக்கின்றன. அந்த நாள் வரை பெண் அமையாத நிலையில் நடந்தது என்ன என்பதே படம்.
சிரிஷ் இயல்பாக நடிக்கிறார் . அருந்ததி அழகு . மிருதுளா யதார்த்தம் . சதீஷ் , யோகி பாபு ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார்கள் . தரன் குமார் இசையில் பாடல்கள் கேட்கும்படி இருக்கின்றன . விஜய்யின் ஒளிப்பதிவும் ஒகே .
இரண்டாம் பகுதியின் இரண்டாம் பகுதியும் கிளைமாக்சும் அட்டகாசம் . நகைச்சுவை தெறிப்புகள், ஏற்றுக் கொள்ள வைக்கும் நெகிழ்வான திருப்பம் இவற்றில் கவர்கிறார் எழுதி இயக்கி இருக்குனர் ரமேஷ் பாரதி.
ஆனால் விட்டேத்தியான முதல் பகுதியும் லாஜிக் இல்லாத காட்சிகளும் படத்தை முன்கூட்டியே பஞ்சர் பண்ணி விட்டதால் கடைசியில் ஆக்சிலேட்டரை முறுக்கியும் பலன் இல்லை .
