ஸ்ரீ தக்ஷா இன்னோவேஷன்ஸ் தயாரிக்க யுவன், ஸ்ரீராம், ரக்ஷா ராஜ் , மனிஷா ஜித் ஆகியோர் நடிப்பில், கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி கலை இயக்கம் செய்து ராம்கி ராம கிருஷ்ணன் இயக்கி இருக்கும் படம் கமரகட்டு.
கிராமத்து இனிப்பான கமர்கட்டின் பேச்சு வழக்குப் பெயர்தான் கமரகட்டு என்கிறார் இயக்குனர் .
இருக்கட்டும் .
படத்தின் கதை என்ன? என்று இயக்குனரிடம் கேட்டால் ,” பள்ளிப் படிப்பு முடிந்து கல்லூரிப் படிப்புக்குள் நுழையும் காலகட்டம் என்பது படிப்பு விசயத்தில் மட்டுமல்லாது எல்லா விசயங்களிலும் சுயமாக சிந்திக்கும் வாய்ப்பை ஒவ்வொருவருக்கும் தரும் காலகட்டம் . அதனால்தான் அதில் கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள் . அப்படிப்பட்ட சூழ் நிலையில் இருக்கும் சில கதாபாத்திரங்களின் செயல்பாடுகளும் அவற்றால் நிகழும் விளைவுகளுமே கதை
அக்காள் தங்கை இருவரும் ஒரே நேரத்தில் காதல் வயப்படுகிறார்கள் (சேச்சே ! அப்படி இல்லை ). இருவரின் காதலர்களும் நண்பர்கள் . அந்தக் காதலும் அவற்றின் விளைவுகளும் அவர்களின் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கமே இந்தப் படம் ” என்கிறார் .
இப்படி காதல் சம்மந்தப்பட்ட கதையாக இருந்தாலும் ஒரு நிலையில் திருவண்ணாமலைப் பின்னணியில் சித்தர் கதாபாத்திரம் மட்டுமல்லாது , சிவபெருமானே படத்தில் வருகிறாராம் . “கடவுள் எப்படி வருகிறார்?” என்று கேட்டால் , புராணப் படங்களில் வருவது போல அல்ல .. ஒரு உருவகமாக வருகிறார் . எப்படி என்பது சஸ்பென்ஸ் படத்தில் பாருங்கள் ” என்கிறார் ராம்கி , புன்னகையோடு .
“பயபுள்ளைக ஸ்கூல் யூனிபார்மில் லவ் பண்ணுகிற மாதிரியெல்லாம் காட்சிகள் வருகிறது போலிருக்கே ?” என்று கேட்டால் ” பள்ளிக் கால காதல் என்பதால் யூனிபார்ம் தவிர்க்க முடியவில்லை . ஆனால் அந்தக் காட்சிகளை நட்பு ரீதியான குணாம்சத்துடன்தான் வைத்திருக்கிறேன் ” என்கிறார் அழுத்தமாக !
ஆர். பார்த்திபன் இயக்கத்தில் அண்மையில் சிறப்பாக பேசப்பட்ட கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தை தயாரித்தது இந்தப் படத்தின் தயாரிப்பாளர்தான். “ஒரு பிரபல இயக்குனர் ஹிட் கொடுத்த கம்பெனியில் உங்களுக்கு எப்படி வாய்ப்புக் கொடுத்தார்கள் ?”‘ என்ற கேள்விக்கு நிதானமாக பதில் சொல்லும் ராம்கி ராமகிருஷ்ணன்,

” உண்மைதான் . படத் தயாரிப்பாளர் நினைத்தால் இன்னும் பெரிய இயக்குனர் நடிகர் என்று போயிருக்கலாம். ஆனால் அவரைப் பொறுத்தவரை கதைதான் ஹீரோ . எனக்கும் முன் 23 கதைகளை கேட்டிருந்த தயாரிப்பாளர் எனது கதையில் கவரப்பட்டார் . அவரது நம்பிக்கையை நான் காப்பாற்றுவேன் ” என்கிறார் .
வாழ்த்துகள் !





