கங்காரு @ விமர்சனம்

kangaroo 4
வி ஹவுஸ் புரடக்ஷன் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்து ஒரு முக்கிய வேடத்திலும் நடிக்க, அர்ஜுனா, வர்ஷா , ஸ்ரீ பிரியங்கா , தம்பி ராமையா நடிப்பில் சாமி இயக்கி இருக்கும் படம் கங்காரு . ரசிகர்கள் தங்கள் மடியில் சுமக்கும்படி இருக்கிறதா படம்? பார்க்கலாம் .

ஒரு கைக் குழந்தையை தூக்கிக் கொண்டு பிழைப்பு தேடி கொடைக்கானலுக்கு வரும் பத்து வயதுக்குட்பட்ட சிறுவனான முருகேசன் , நாடர் என்பவரின் (தம்பி ராமையா) உதவியோடு உழைத்து , பிழைத்து அந்தக் கைக்குழந்தையான தங்கை அழகுவை  வளர்த்து இளம் பெண்ணாக்கி (ஸ்ரீ பிரியங்கா) , உழைப்பதுவும் தங்கை மீது பாசமாக இருப்பதுவும் குடிப்பதுவும் மூக்கு முட்ட தின்பதுவும் தவிர வேறேதும் தெரியாத முரட்டு இளைஞனாக (அர்ஜுனா) மாறிக் கிடக்கிறான் .

அழகுவின் தோழி செல்லம் (வர்ஷா) முருகேசனை விரும்புகிறாள். செல்லத்தின் அக்கா செல்லத்தை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி பணம் சம்பாதிக்க விரும்புகிறாள். அந்த ஊரின் மிகப்பெரிய விபச்சார புரோக்கரான டிக்கட் ரெங்கநாதன் (கலாபவன் மணி ) அழகுவை கல்யாணம் செய்து கொள்ளவும் செல்லத்தை விபச்சாரத்தில் ஈடுபடுத்தவும் தொடர்ந்து முயல்கிறான்.

kangaroo 2

விஷயம் உணர்ந்த முருகேசன் வெகுண்டு  ரங்கநாதன் அன் கோ வை அடி பின்னி எடுக்கிறான். அவர்கள் அழகுவை வாழ விடக் கூடாது என்று சபதம் எடுக்கிறார்கள்.

இந்த நிலையில் அழகு ஒரு இளைஞனை காதலிக்க , அவனோடு திருமணம் நிச்சயம் ஆன நிலையில் அவன் கொல்லப்படுகிறான். அடுத்து ஒருவனோடு நிச்சயம் நடக்க, அந்த மாப்பிள்ளை முன்பே ஒருத்தியை காதலித்து ஏமாற்றி இருப்பவன் என்ற நிலையில் அவனும் கொல்லப் படுகிறான்.

அடுத்து முருகேசனின் நலம் விரும்பியான விஸ்வநாதனின் (ஆர். சுந்தர்ராஜன்) உறவுக்காரப் பையனும் கல்யாணம் ஆன சில மாதங்களில் மனைவியை இழந்தவனுமான கணேசனுக்கும்  (சுரேஷ் காமாட்சி )  அழகுக்கும் திருமணம் நடந்து விடுகிறது .

ஆனால் கணேசனை கொல்லவும் முயற்சிகள் நடக்கின்றன.

விசாரிக்க வரும் இன்ஸ்பெக்டர் (சாமி) குற்றவாளியைப் பிடிக்க முயல , எதிர்பாராத திருப்பத்தொடு திகிலும் திகைப்புமாய் கதை சொல்லி,  கடைசியில் செண்டிமெண்ட் கலந்து கனத்து,  படம் முடிகிறது .

kangaro0 5

முருகேசன் முதல் கணேசன் வரை பாத்திரங்களை குணாதிசயப் படுத்தியதில் ஈர்க்கிறார் இயக்குனர் சாமி .

அஜித் ரசிகர்களான அழகுவும் அந்த வீடியோ கடை இளைஞனும் அஜித் நடித்த படங்களின் பெயர்களைப் பயன்படுத்தியே காதலை புரிய வைத்து கல்யாணம் வரை போவது ரசனை .

இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி இருக்கும் பாடகர் சீனிவாசின் இசையில் வைரமுத்துவின் வரிகளில் பாடல்கள் மிக மிக அருமை . ”தாயும் கொஞ்ச காலம்” பாடல் வாழ்வை  தத்துவ முத்துக்களாக கொட்டிக் கொடுக்கிறது . பேஞ்சாக்கா மழைத்துளியும் பாட்டில் காதலோடு ”என் ஏத்தத்துக்கும் ஏறக்கத்துக்கும் ஏன்னா கொற?” போன்ற வரிகளில் இளமை மழை பொழிந்திருக்கிறார் வைரமுத்து .

ராஜ ரத்னத்தின் ஒளிப்பதிவு நம்மையும் கொடைக்கானலுக்குள் வாழ வைக்கிறது. மிக சிறப்பு ராஜ ரத்தினம் !

படத்தின் வேகம் நம்மை அசையாமல் கட்டிப் போடுகிறது . காரணம் படத் தொகுப்பு . யெஸ் ! மணியின் படத்தொகுப்பு படத்தை சுவாரஸ்யமாக கொண்டு போவதில் பெரும்பங்கு வகிக்கிறது .

சூப்பர் சுப்பராயனின் சண்டைக் காட்சிகளில் அவர், ஒளிப்பதிவாளர், படத் தொகுப்பாளர் , இயக்குனர் எல்லோரும் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார்கள் .

kangaroo7நாயகன் அர்ஜுனா மிகவும் உடல்,அளவில் கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார் . அவருக்கான உடல் மொழிகளை சிறப்பாக அமைத்திருக்கிறார் இயக்குனர் .  தங்கையாக வரும் ஸ்ரீ பிரியங்கா ஹோம்லி . வர்ஷா கவர்ச்சிப் பூ . மழையில் நெளிந்து வளைந்து அவர் நடிக்கும்போது மழையே சூடாகிறது.

தம்பி ராமைய்யா காமெடி , நெகிழ்ச்சி என்று  இரண்டு ஏரியாவிலும் ஸ்கோர் செய்கிறார் .

ஆர். சுந்தர்ராஜன் , கஞ்சா கருப்பு , கலாபவன் மணி ஆகியோர் கதாபாத்திரங்களுக்கு பொருத்தம் .

பொதுவாக இயக்குனர்கள் நடிக்க விரும்பும் கதாபாத்திரத்தில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் தயாரிப்பாளர்கள் நடிக்க முயலும் கதாபாத்திரத்தில் இயக்குனர் சாமியும் நடித்துள்ளனர் . இருவருமே  மிக இயல்பான நடிப்பால் கவர்கிறார்கள் .

கங்காரு … தாவும் .

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →