3 படம் மாபெரும் வெற்றி பெறவில்லை என்றாலும் ரொமான்ஸ் காட்சிகளை எடுப்பது , வித்தியாசமான கதைக் களத்தில் இயங்குவது , நடிகர்களிடம் மிக சிறப்பாக நடிப்பை வாங்குவது ஆகிய விதங்களில் சிறப்பான இயக்குனராக தன்னை நிரூபித்து இருந்தார் ஐஸ்வர்யா தனுஷ் .
அடுத்து இப்போது ஏ ஜி எஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிக்க கவுதம் கார்த்திக், பிரியா ஆனந்த் , டாப்சி ஆகியோர் நடிப்பில் அவர் இயக்கி இருக்கும் ‘வை ராஜா வை’ படம் அவருக்கு ஒரு மாறுபட்ட களம் .
கேம்ப்ளிங் எனப்படும் நம்பர் சூதாட்டத்தை களமாகக் கொண்டு அதில் நிலவும் அரசியல் , தாதாயிசம் , மற்ற சூழல்கள் ஆகியவற்றின் பின்னணியில் முரட்டுத் தனமான ஒரு ஆக்ஷன் படமாக இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார் ஐஸ்வர்யா .
பல நடிகர் நடிகைகளை உருவாக்கிய இயக்குனர் வசந்த் இந்தப் படத்தில் கவுதமின் அப்பாவாக நடித்துள்ளார் . பத்திரிக்கையாளர் சந்திப்பில் சக கலைஞர்கள் அனைவரும் ”இனி தமிழ்ப் படங்களில் ஹீரோ ஹீரோயின்களுக்கு ஒரு அழகான அப்பா கிடைத்து விட்டார்” என்று பாராட்டினார்கள். ”இவ்வளவு நாள் எப்படி இது நிகழாமல் இருந்தது” என்றும் வியந்தார்கள்.
படத்தில் விவேக் ஒரு சிறிய பாத்திரமாவது செய்ய வேண்டும் என்று ஐஸ்வர்யா விரும்ப, அவர் சொன்ன விஷயத்தை விவேக்கே டெவலப் செய்ய , இப்போது அது படம் முழுக்க வரும் கேரக்டராகி விட்டதாம் .
நடிகர் இயக்குனர் எஸ் ஜே சூர்யா ஆட்டோ டிரைவர் தோற்றத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடிவிட்டுப் போகிறார். இதை வைத்து விவேக் சூர்யாவை ”ஐட்டம் சாங் நடிகர்” என்று கலாய்க்க,
கல கல களேபரம். ”இரண்டே இரவுகளில் அந்தப் பாட்டை சிறப்பாக எடுத்தார் ஐஸ்வர்யா ”என்று பாராட்டினார் சூர்யா .
தவிர, தனுஷ் இந்தப் படத்தில் கொக்கி குமார் என்ற பெயரில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கிறார்.
யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்களை வெகுவாக சிலாகித்தார் ஹீரோ கவுதம் . “பொதுவா பாட்டு ஹிட் ஆகும் படங்களில் கூட சில பாட்டுதான் சூப்பர் ஹிட் ஆகும். சில பாட்டு சுமாராத்தான் இருக்கும் . ஆனா இந்தப் படத்தில் யுவன் ஷங்கர் ராஜா போட்டு இருக்கிற எல்லா பாடல்களுமே சூப்பரா இருக்கு ” என்று காரணமும் சொன்னார் .
“நான் நடித்த காஞ்சனா படத்தின் வெற்றி மிக சந்தோஷமா இருக்கு. இந்தப் படமும் அதே மாதிரி வெற்றி பெறும்” — இது டாப்சி .
“படம் முழுக்க வரும் ஒரு அற்புதமான ரோல் எனக்கு . எல்லாருக்கும் படம் ரொம்பவே பிடிக்கும் ” — இது பிரியா ஆனந்த்
படத்தை தமிழகம் முழுக்க வெளியிடும் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா “ஏ ஜி எஸ் நிறுவனத்துடன் இணைவது சந்தோஷமாக இருக்கிறது ” என்றார் .
படம் சம்மந்தப்பட்ட எல்லோருமே ஒளிப்பதிவாளர் வேல்ராஜை பாராட்டினார்கள். “வேகமாகவும் நேர்த்தியாகவும் வேலை செய்யக் கூடியவர் அவர் ” என்று விவேக் கூற ” அவர் இல்லை என்றால் என்னால் இந்தப் படத்தை உருவாக்கி இருக்கவே முடியாது ” என்றார் ஐஸ்வர்யா .
படத்தை அப்பா ரஜினியும் கணவர் தனுஷும் பார்த்து விட்டார்களா? என்ன சொன்னார்கள்? என்ற கேள்விக்கு பதில் சொன்ன ஐஸ்வர்யா “தனுஷ் இல்லன்னா நான் டைரக்டர் ஆகி இருக்கவே முடியாது . முதல் படத்தில் என்னை நம்பி கால்ஷீட் கொடுத்து நடித்து என்னை இயக்குனர் ஆக்கியவர் அவர் . அவர் இல்லாமல் இந்தப் படமும் சாத்தியமே இல்லை. குடும்ப அளவில் அவரோட ஒத்துழைப்பு இல்லன்னா நான் டைரக்ட பண்ணவே முடியாது .
அப்பாவோட ஆசீர்வாதம் எப்பவும் என் கூட இருக்கு. ரெண்டு பேரும் படம் பார்த்துட்டாங்க . ரெண்டு பேருக்கும் படம் பிடிச்சு இருக்கு ” என்றார் .
வித்தியாசமான வண்ணக் கலைவைகளில் நிழல் உலக நபர்கள் நிகழ்வுகளை படத்தில் ஐஸ்வர்யா வைத்திருப்பது முன்னோட்டத்தில் தெரிந்தது. மேக்கின் வீடியோவில் அவரது ஆர்வமும் உழைப்பும் தெரிந்தது. ஒரு பாடல் காட்சியை ஜப்பானில் படம் பிடித்து இருக்கிறார்கள் .
மே 1 ஆம் தேதி திரைக்கு வருகிறது வை ராஜா வை .
சக்சஸ் ராணியாகட்டும் ஐஸ்வர்யா தனுஷ்