எஸ் ஜி பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் புன்னகைப் பூ கீதா தயாரித்துக் கதாநாயகியாக நடிக்க, விமல் , சமுத்திரக்கனி இவர்கள் நடிப்பில் சுசி கணேசனின் உதவியாளரும் சீமானுக்கு நெருக்கமானவருமான வி.ஆர். நாகேந்திரன் இயக்கி இருக்கும் படம் காவல் .
“ஒரு காலத்துல மதுரையில நட்புக்காக கொலை பண்ணாங்க . திருச்சியில் ரவுடியிசத்துகாக கொலை பண்ணாங்க. திருநெல்வேலியில் சாதிக்காக கொலை பண்ணாங்க . கோயம்புத்தூரில் தொழிலுக்காக கொலை பண்ணாங்க . கடலூரில் அரசியலுக்காக கொலை பண்ணாங்க. ஆனா சென்னையில் மட்டும்தான் பணத்துக்காக கொலை பண்ணாங்க .
(இது நம்ம கருத்து இல்லீங்கோ.. சம்மந்தப்பட்ட ஊர்க்காரர்களுக்கு இதில் ஏதாவது மாற்றுக்கருத்து இருந்தால் எழுதி இயக்கி இருக்கும் நாகேந்திரனையோ படத்தில் பின்னணிக் குரலில் இதை பேசி இருக்கும் சமுத்திரக் கனியையோ பார்த்துப் பேசிக்கங்க. ரெண்டு பெரும் மதுரைக்காரப் பய புள்ளைக என்பதை மட்டும் முதல் வரியிலேயே புரிந்து கொள்க ! )
ஆனா இப்போ … தமிழ் நாடு முழுக்க பணத்துக்காக கொலை பண்ற கலாச்சாரம் வளந்துருக்கு. கொலை பண்ணப்படுபவனுக்கு தான் எதுக்காக கொலை செய்யப்படுகிறோம் என்பதை தெரிஞ்சுக்க அவகாசம் கூடக் கொடுக்கப் படறது இல்ல . கொலை செய்யறவனும் கூலிக்காக தான் செய்யும் கொலைக்கு பின்னால் உள்ள அநியாயத்தை உணர்வது இல்ல .
இதன் பின்னால் இருக்கும் அரசியலை பேசும் இந்தப் படம், ஒவ்வொரு தனி மனிதனுக்கும் இதை தட்டிக் கேட்க வேண்டும் என்ற எண்ணம் வரணும் என்பதை பேசுகிறது ” என்கிறார்கள் படத்தில் நடித்திருக்கும் சமுத்திரக் கனியும் இயக்கி இருக்கும் நாகேந்திரனும் .
“ஆரம்பத்தில் இந்தப் படத்துக்கு நீயெல்லாம் நல்லா வருவடா என்றுதான் பெயர் வைத்து இருந்தோம். அது பலருக்கும் பிடிக்காத நிலையில் காவல் என்று மாற்றி விட்டோம் “என்றார், கூடுதல் நாகேந்திரன் .
“இதுவரை ரொம்ப சாப்ட்டான கேரக்டர்கள்ல நடிசுட்டு வந்தேன் . இந்தப் படத்தில் வேற மாதிரி கம்பீரமான ஆக்ஷன் பண்ணி நடிச்சு இருக்கேன் ” என்றார் வேட்டி கட்டிய விமல்
“படத்தோட டிரைலர்லயும் பாடல்களிலும் போலீசே வரலியே . ஆனா படத்துக்கு காவல்னு பேரு இருக்கேன்னு யோசிக்காதீங்க. அங்கதான் டுவிஸ்டு வச்சிருக்கோம் ” என்று அபிநயித்த கீதா , “விமல் ஆக்ஷன் சீன்ல நடிச்சாலும் அவர் கூட நடிச்ச எனக்குத்தான் அதிக காயம் . ரொம்ப அடி பட்டுது ” என்றார் . (புரடியூசரா அடிபடாம இருந்தா போதும் விடும்மா !)
“படத்தில் நடிக்க வந்த சமுத்திரக் கனியிடம் நீங்க மேக்கப் போடவே கூடாதுன்னு சொல்லி அப்படியே நடிக்க வச்சேன் . அப்பதான் அவரோட ரியல் டோன் வரும்னு ” என்றார் , ஒளிப்பதிவில் அசத்தி இருக்கும் ஏகாம்பரம் (ஏதாவது வித்தியாசம் தெரிஞ்சுதா ஏகா சார் ?)
டிரைலரிலும் ஜி வி பிரகாஷ் குமார் இசையில் உருவான பாடல்களிலும் ஆக்ஷனும் , காதலும் மாறி மாறி வழிகிறது .
“இந்தப் படம் நாகேந்திரனுக்கு நல்ல அறிமுகமாக அமையும் ” என்றார் எடிட்டர் கே எல் பிரவீன் .
வாழ்த்துகள் !