கர்ணன் @ விமர்சனம்

வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க, தனுஷ், ரஜிஷா விஜயன், லால், நட்டி நடராஜ், யோகி பாபு, கௌரி கிஷன், லட்சுமி பிரியா நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கி இருக்கும் படம் கர்ணன். கர்ணன்  வள்ளலா ? கஞ்சனா? பார்க்கலாம். 

தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டுமே வாழும் – அடிப்படை வசதி ஏதும் இல்லாத ஒரு கிராமம். பக்கத்து ஊரில் உள்ள வேற்று சாதி நபர்களால் இவர்கள் மனிதர்களாகக் கூட நடத்தப்படுவதில்லை . 

தாழ்த்த்தப்பட மக்கள்  வாழும் இந்தக் கிராமத்தில் இருந்து  கல்விக்கோ மருத்துவத்துக்கோ  வெளியூர் போவதென்றால் கூட , பக்கத்து ஊர் போய்தான் பேருந்து ஏற வேண்டும். 

பெண் என்பதே பலாத்காரத்துக்கு ஆளாவதற்குப் போதும். அதுவும் தாழ்த்தப்பட்ட சமுதாயப் பெண் என்றால்? கேட்கவா வேண்டும்? பக்கத்து ஊருக்குப் போய் பஸ் ஏறினால் அவமானம் அடி உதை. சண்டை . இதனால் ஆண்கள் பெண்கள் பல  பேரின் படிப்பு , தொழில் பாழாகிறது  மருத்துவ இழப்பால் பாதிப்புகளும் மரணங்களும் ஏராளம் . 

இந்த நிலையில் தமது ஊருக்கு என்று பேருந்து நிறுத்தம் ஒன்றை அமைக்க, ஊர் இளைஞன் கர்ணன் ( தனுஷ்) உறவு முறையில் தாத்தா( லால்), ஊர்ப் பெரியவர் (ஜி எம் குமார் ) உட்பட பலரும் முயல, பஸ் ஸ்டாப் வந்தால் படித்து வேலைக்குப் போய் முன்னேறி விடுவார்கள் என்ற கெடு மத்தியில் பேருந்து நிறுத்தம் வர விடாமல் பக்கத்து ஊர் ஆட்கள் தடுக்கின்றனர் . 

ஒரு பிரசவ அவசர சூழலில் பேருந்தை தங்கள் பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்கள் நிறுத்த முயல, அது  நிற்காமல் போக, ஒரு சிறுவன் கல்லை எடுத்து அடித்து கண்ணாடியை உடைக்க, அப்போது பஸ் நிற்க, 

கண்டக்டர் டிரைவர், – மக்கள் சண்டையில் , அந்த பஸ்ஸை சில்லு சில்லாக அடித்து நொறுக்குகின்றது கர்ணன் தலைமையில் ஆன இளைஞர் படை . 
போலீஸ் வருகிறது . போலீஸ் உயர் அதிகாரி ( நாட்டி நடராஜ்) தாழ்த்தப்பட்ட மக்களை , உயர் சாதி ஆட்களை விடவும் கேவலமாக நடத்துகிறார். எனவே பிரச்னை இந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் போலீசுக்குமான போராக மாறுகிறது . முடிவு என்ன என்பதே கர்ணன் .

கொடியன் குளம் – மணியாச்சி சம்பவத்தின் கால கட்டத்தையும் புவியியல் சூழலையும் எடுத்துக் கொண்டு  அதில் போராளி மேலவளவு முருகேசனின் படுகொலை சம்பவத்தை சேர்த்து , முடிவை மாற்றி அமைக்கும் வகையில் எழுதப்பட்டிருக்கும் படம்! 

பரியேறும் பெருமாள் படத்தில் எட்டடி பாய்ந்த இயக்குனர் மாரி செல்வராஜ், இந்தப் படத்தில் முப்பத்தி ரெண்டு அடி பாய்ந்து இருக்கிறார்.  மிக அற்புதமான படமாக்கலால் கர்ணனை கம்பீரமாகப் படைத்து இருக்கிறார்.  

கதாபாத்திரத் தேர்வுகள், நடிக நடிகையருக்கான தோற்ற அமைப்பு, படம் முழுக்க எளிய  கிராமிய முகங்களைப் பயன்படுத்தி இருப்பது , அட்டகாசமான கவிதைப் பூர்வமான குறியீட்டுக் காட்சிகள் என்று மேட்டிமையான இயக்கத்தை கொடுத்து இருக்கிறார் .

படம் பார்க்கிற- மன சாட்சியுள்ள – எல்லோரையும்,  கிராமத்து ஏழை எளிய தாழ்த்தப்பட்ட மக்களில் ஒருவனாக மாற்றி ஆயிரமாண்டுகள் கடந்த அந்த வலியை உணர வைப்பதில் அட்டகாசமான ஜெயித்து இருக்கிறார் மாரி செல்வராஜ்  பாராட்டுகள். வாழ்த்துப் பூங்கொத்து . 

உணர்வின் உருவமாக/ ஆன்மாவாக  வரும் மறைந்த தங்கையின் தோற்றம், கனவில் வரும் தங்கையின் புதையல் தொடர்பான காட்சிகள் நெகிழ்வின் சிகரம். 

தாழ்த்தப்பட்டதின் இழப்புகளை அவமானத்தை அறிவுப் பூர்வமாகவும் உணர்வுப் பூர்வமாகவும் அறிந்த ஓர் ஆக்ரோஷமான  தென்மாவட்ட கிராமிய தாழ்த்தப்பட்ட இளைஞனை அச்சு அசலாக தனது தோற்றப் பொருத்தம், முக பாவனை, மற்ற உடல் மொழிகள், குரல் நடிப்பு மூலம் கொண்டு வருகிறார் தனுஷ். சபாஷ்.

கதையின் வாழ்வியலுக்கான பாடல், காட்சிகளுக்கு ஏற்ற உணர்வுகளை திரை எங்கும் தெறிக்க விடும் பின்னணி இசை…… என்று படத்துக்கு பலம் சேர்த்து இருக்கிறார் இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.

கண்டா  வரச் சொல்லுங்க காலத்தால் நிலைக்கும். காரணம் அந்த பாடகியின் குரலும் ஆலாபனையும். 

அந்த கிராமத்துக்குள் நம்மையும் ஒருவராக  இறக்கி மட்கிய குடிசைகள், இடிந்த வீடுகள் , முள் காடு, ஒற்றையடிப் பாதை ,  ஊர்ப் பகுதியில் உள்ள – ஆனால்  ஊரில் நிற்காத பேருந்துகள் போகும் தார்ச்சாலை, கரிமூட்டக் கால் சூடு, அனைத்தையும் அச்சு அசலாக உணர வைக்கிறது தேனி ஈஸ்வரின் சிறப்பான ஒளிப்பதிவு .

சற்றே வில்லத்தனம் கலந்த குணச்சித்திர நடிப்பில் அசத்துகிறார் யோகி பாபு. 

இதுவரை தன்னால் யோசித்துக் கூடப் பார்த்திராத ஒரு கதாபாத்திரத்தில் வியப்பூட்டும் விஸ்வரூபம் என்று பாராட்டும் அளவுக்கு நடித்து இருக்கிறார் லக்ஷ்மி பிரியா சந்திர மவுலி.

தாத்தா கேரக்டரில் லால் சிறப்பு, 

எல்லோரையும் கொன்றொழித்த காலரா தாழ்த்தப்பட்ட ஏழை மக்களை எப்படி பாதித்து  இருக்கும் ? லால் பாடும் பாடல் உருக்குகிறது 

நாயகியாக வரும் ரெஜிஷா விஜயன் பொருத்தம்.  

த. ராமலிங்கத்தின் கலை இயக்கம் அபாரம். தாழ்த்தப்பட்ட அந்த மக்களின் கடவுளர் தோற்றம், காட்டுப் பேச்சி உருவம்,  பக்தி வழி பாடுகள் குறித்த அமைப்புகள் , கர்ணனின் மறைந்த தங்கையின் முக மூடித் தோற்றம், , அந்த மக்கள்  வாழும் சிதில வீடுகள்  யாவும் அருமை. 

சுரேன் ஜி – அழகிய பெரியவன் ஆகியோரின்  ஒலியியல் படத்துக்கு யதார்த்த உணர்வை கொட்டிக் கொடுக்கிறது .

படத் தொகுப்பாளர் ஆர் கே செல்வாவின் கைகளை  கொஞ்சம் சுதந்திரமான விட்டிருக்கலாமே மாரி.  எங்கெங்கோ  தேவையின்றி நீளும் காட்சிகள் கிளைமாக்சில் தேவையான ஏதோ ஒன்றைத் தரத்  தவறி இருக்கிறது.

.”அய்யயோ.. டைம் ஆச்சு” என்று அவசரமாக முடிகிறது படம்.

 ஊரில் உள்ள வீடுதான் உனது சொந்தம் . பேருந்து நிறுத்தம் என்பது நாட்டு மக்கள் அனைவருக்கும்  உரிமைப்பட்டது  தாழ்த்தப்பட்ட மக்கள்  அங்கே வரும்போது வன்முறை மற்றும் பாலியல் வக்கிரங்களை பிரயோகிப்பதுதான் படத்தில் காட்டப்படும் பிரச்னைக்கு துவக்கம் . அதன் தீர்வு எங்கே?

என்னதான் உயர்சாதி ஆதிக்கத்தின் முயற்சி காரணமாக  பேருந்து நிறுத்தம் அமைக்கப்படவில்லை என்றாலும் அது யாருடைய குற்றம். அரசின் குற்றம்தானே? அங்கே A 1 அரசுதானே? இந்தப் படத்தின் அடிப்படை நோக்கத்துக்கு அது எந்த வகையில் உதவுகிறது ?

படம் சொல்லும் காலத்தில் கட்ட பொம்மன் போக்குவரத்து நஷ்டத்தில்தான் இயங்கியது.  அப்படி இருக்க , ஒரு பேருந்து நிறுத்தம் வந்தால் அதை தவிர்க்க வேண்டிய அவசியத்தில் அரசு , தனியார்  பேருந்துகள்  அன்று இல்லை. அங்கே பேருந்து நிற்காதது யார் குற்றம். பஸ்ஸை உடைப்பது என்ன நியாயம்? பஸ்ஸை கல்லால் அடிப்பதை ஒரு  சின்னப் பையன் துவங்குவதாக காட்டுவது ஒரு வித எஸ்கேபிசம் இல்லையா?

சமூகத்துக்கு சரியான குற்றவாளிகளை ஒரு நல்ல படைப்பாளி  அடையாளம் காட்ட வேண்டாமா?

பணம் இல்லாத எல்லோரையும் போலீஸ்காரன் கேவலமாகத்தான் நடத்துவான் . இதில் சாதி விஷயம் எப்படி வருகிறது?

நேரடியாக இன்னொரு சாதியை அழுத்தமாக முன்னிறுத்தினால் இந்தப் படமே சாதிச் சண்டையை உருவாகும் எனவே அது வேண்டாம் என்ற மாறி செல்வராஜின் அக்கறையைப் பாராட்டுகிறோம் . 

அதற்காக எய்தவன் இருக்க அம்பை நோவும் செயலாக படம் முடிவது எந்த வகையில் தீண்டாமைக்கு எதிரான நேர்மை? 

எல்லா மட்டத்திலும் உள்ள சாதி ஆணவத்தை பரியேறும் பெருமாள்  அளவுக்காவது மென்மையாக சொல்லி இருக்கலாமே ? ஏன்  சொல்லவில்லை?

இந்தப் படத்தைப் பார்க்கும் தாழ்த்தப்பட்ட சமூக சகோதரர்கள் நம்ம எதிரி போலீஸ்தான் என்று எண்ணினால் அது எப்படி சரியான வழி நடத்தல்?  போலீசில் தாழ்த்தப்பட்ட சாதி ஆட்கள் இல்லையா? அப்படி இருக்க அவனும் சேர்ந்து அடிக்கிறான் எனும்போது அங்கே உள்ள நுட்பமான அரசியல் என்ன ?

சாதி சண்டைகள் மட்டுமல்லாது ஜல்லிக்கட்டு மீத்தேன் பிரச்னை வரை போலீசின் மிருகத்தனத்துக்குக் காரணமான  உண்மையான குற்றவாளிகளை அல்லவா ஒரு நல்ல படம் அடையாளப் படுத்த வேண்டும்? அதை இந்தப் படம் மறைப்பது ஏன்?

போலீஸ் அதிகாரியை சிறைபிடிக்கும் கர்ணன்,  மந்திரி, எம் எல் ஏ எம்பி  எல்லோரையும் வரச் சொன்னானே.. சரியான நோக்கத்தில் துவங்கிய அந்த கதைப் பகுதி ஏன் முறைப்படி நீளவில்லை?

வெளியே கர்ணன் தன் கழுத்தில் கத்தி வைத்தபோது பயந்து போய் எல்லா போலீஸ் அதிகாரியையும் கத்தியைப் போடச் சொல்லும் போலீஸ் அதிகாரி , தனி ரூமுக்குப் போனபிறகு என்னை வெட்டினாலும் நீ தப்பிக்க முடியாது என்று வீரம் பேசுகிறார். எதற்கு அந்த கதாபாத்திரச் சீர்குலைவு? அவன் அப்படி சொன்ன பிறகு கர்ணனின் எதிர் வினையில் வீரம் எங்கே? அட விவேகம்தான் எங்கே ?

இப்படி சில  திரைக்கதை பலவீனம், கருத்தியல் குழப்பங்கள், பாதை மாறிய கதைப் பயணம், தேவைக்கு மேல் நீளும் காட்சிகள் என்று சில குறைபாடுகள் இருந்தாலும்…

 எடுத்துக் கொண்ட கதை, தாழ்த்தப்பட்ட  மக்களுக்கான ஆதரவு, சிறப்பான படமாக்கல் இவற்றால் மனத்தைக் கொள்ளை கொள்கிறான் கர்ணன் .

கர்ணன் – ஒரு வரலாற்றுச் செந்நீர்   நதியின் காயாத தடம் 

 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *