ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா ஆகியோர் நடிப்பில் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா பட இயக்குனர் கோகுல் இயக்கி இருக்கும் படம் காஷ்மோரா .
காஷ்மோரா என்றால் கொலைகார ஆவி , கொடிய ஆவி என்று பொருள்
இந்தப்படத்திற்காக ஒரு முக்கியமான காட்சி ஒன்றை கிராபிக்ஸை பயன்படுத்தி எடுத்துக்கொள்ளலாம் என முதலில் கோகுல் முடிவு செய்திருந்தார்.
ஆனால் அதன்பின் 36௦ டிகிரியிலும் படம் பிடிக்கும் வகையிலான ஆம்னி டைரக்சனல் கேமரா டெக்னாலஜி ஒன்று இருப்பது தெரியவந்ததும் அதனை வைத்து சம்பந்தப்பட்ட காட்சியை படமாக்கியுள்ளார்களாம்.
இந்த கேமரா டெக்னாலஜி மிகப்பெரிய இடங்களில் வைட் ஆங்கிளில் காட்சிகளை படமாக்க பயன்படும் ஒரு டெக்னிக் ஆகும். இந்திய சினிமா வரலாற்றில் இந்த டெக்னாலஜியை பயன்படுத்துவது இதுவே முதன்முறை.
இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்திய ஒளிப்பதிவாளர் என்கிற பெருமை ஓம் பிரகாஷையே சேரும். இசை சந்தோஷ் நாராயணன்
படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய கார்த்தி “இவ்வளவு பெரிய படத்தில் முழுக்க நம்ம ஊரில் உள்ளவர்களே பணியாற்றி இருக்கிறார்கள் என்பது எனக்கு ரொம்ப பெருமையாக உள்ளது.
அப்பாவின் படங்களில் முருகரின் வீடு என்று காட்டுவார்கள். அதில் அவ்வளவு கலை நயம் இருக்கும். அந்த மாதிரி பணியாற்றியவர்கள் எல்லாம் இன்று இல்லை.
அந்த காலத்தில் பண்ணியது போன்று லெதர் ஷூ பண்ண இப்போது ஆட்கள் இல்லை. இன்று 84 வயது நிரம்பிய ஒருவர் பண்ணித் தரும் லெதர் ஷூவை அணிந்து கொண்டு ஓட முடிகிறது,சண்டையிட முடிகிறது.
மற்றவர்கள் பண்ணித் தருவது காலைப் பிடிக்கிறது. இப்படத்தில் அரண்மனை, உடைகள், நாற்காலிகள் என செய்தவர்கள் அனைவருமே வயதானவர்கள்.
எப்போது ஒருபுறம் நாட்டுபுறக் கலைகள் அழிகிறது என்கிறோமோ, அதே போல சினிமாவில் ஒரு புறத்தில் உள்ள கலைகள் அழிந்து கொண்டே இருக்கிறது.
இந்தப் படம் மூலமாக அவர்களை மறுபடியும் கொண்டு வந்ததில் ரொம்ப சந்தோஷம்.” என கலை இயக்குனர்களுக்கு உற்சாகம் தரும் வகையில் பேசினார் கார்த்தி.