ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் , கல்பாத்தி எஸ் அகோரம் , , எஸ் கணேஷ், எஸ் சுரேஷ் மற்றும் அர்ச்சனா ஆகியோர் தயாரிக்க, விஜய் சேதுபதி, டி.ராஜேந்தர், ஆர். பாண்டியராஜன், விக்ராந்த், மடோன்னா செபாஸ்டியன் ஆகியோர் நடிக்க
இரட்டை எழுத்தாளர்கள் சுபா , மற்றும் கபிலன் வைரமுத்து ஆகியோருடன் சேர்ந்து கதை திரைக்கதை வசனம் எழுதி, கே .வி ஆனந்த் இயக்கி இருக்கும் படம் கவண்.
ஒளிப்பதிவு அபிநந்தன் ராமானுஜம். படத் தொகுப்பு ஆன்டனி , இசை ஹிப் ஹாப் ஆதி .
படத்தின் முன்ன்னோட்டதையும் இரண்டு பாடல்களையும் பார்க்க அமைந்தது.விஜய் சேதுபதி — மடோன்னா செபஸ்டியன் காதல், ஊடல், பிறகு, கூடல் என்று ஒரு டிராக் போக, இன்னொரு பக்கம் டி. ராஜேந்தர் அந்த இருவரையும் கலாய்ப்பதாக இருக்கிறது முன்னோட்டம் .
அருண் ராஜா காமராஜ் எழுத டி. ராஜேந்தர் பாடி விஜய் சேதுபதியுடன் சேர்ந்து நடிக்கும் ” ஹேப்பி நியூ இயர்” என்ற பாடலில் டி ஆர் , சேதுபதி இருவரும் ஆடிக் கலக்குகிறார்கள் .
”நீதான் என் தலைவன்” என்று விஜய் சேதுபதி பாட, டி.ராஜேந்தர் தனக்கே உரிய பாணியில் மறுத்துப் போவது ரகளை . கபிலன் வைரமுத்து எழுதிய ஆக்சிஜன் தந்தாயே என்ற டூயட் பாடல் அழகான பிரேம்களோடும் சிறப்பான மயக்கும் ஒளிப்பதிவோடும் படமாக்கப் பட்டுள்ளது .
இதோடு ”மாத்துறாங்களாம்…” என்ற பாடலையும் , “யாரோ ஆப்பு வைக்கப் போவது ?” என்ற பாடலையும் கபிலன் வைரமுத்துவே எழுதி இருக்கிறார்

எல்லாவற்றையும் விட சிகரமாக , மகாகவி பாரதியாரின் மூன்று பாடல்களை இணைத்து ஒரு பாடலாக்கி ” பாயும் ஒளி நீ எனக்கு ” என்ற முதல் வரியோடு,
பாடலை அமைத்து மிகப் பெரிய பொருட்செலவில் வன்னமயமாகப் படமாக்கி இருக்கிறார்களாம் . “கடந்த ஆண்டு அநேகன் , தனி ஒருவன் ஆகிய வெற்றிப் படங்களைக் கொடுத்த ஏ ஜி எஸ் நிறுவனம் இந்த ஆண்டு கொண்டு வரும் முதல் படம் இது.” என்கிறார் கல்பாத்தி அகோரம் .

“கே வி ஆனந்த் , சுபா அடங்கிய அனுபவம் வாய்ந்த கதை திரைக்கதை வசனகர்த்தாக்கள் குழுவில் புதியவனான என்னையும் ஏற்றுக் கொண்ட அன்புக்கு நன்றி ” என்று கபிலன் வைரமுத்து கூற, “தனி ஒருவனுக்கு அடுத்து மீண்டும் ஏ ஜி எஸ் நிறுவனத்தின் படத்தில் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்ததும் அது கே வி ஆனந்த் சாரின் படமாக அமைந்ததும் ரொம்ப சந்தோசம் ” என்று ஆதி கூற
படம் பற்றி உற்சாகமாக உரையாடுகிறார் இயக்குனர் கே வி ஆனந்த். ” முன்னோட்டத்தில் நீங்கள் பார்த்தது படத்தின் ஒரு பகுதிதான் . நிஜமான கதை வேறு .

ராட்சஷ பலம் கொண்ட கோலியாத் என்ற கொடூரனை டேவிட் என்ற சிறுவன் உண்டி கோலால் வீழ்த்திய — பிரபலமான டேவிட்- கோலியாத் கதையை கேள்விப்பட்டு இருப்பீர்கள் . அப்படி அனைத்து தீமையும் செய்யும் ஒரு நபரை ஓர் எளிய மனிதன் குயுக்தியால் வீழ்த்தும் கதைதான் இந்தப் படம் . அந்த உண்டி கோலின் செந்தமிழ்ப் பெயர்தான் கவண்.
(இல்லை இயக்குனரே . உண்டி கோலும் கவணும் ஒன்று அல்ல .உண்டி வில் அல்லது உண்டி கோல் என்பது சிறுகல்லை வைத்து இழுத்து விடுவது .
கவண் என்பது சிறு தூளி போன்ற அமைப்பில்கல்லை வைத்து சுழற்றி வேகம் ஏற்றி குறி பார்த்து வீசுவது . இது வேறு . அது வேறு )
பொதுவாக இயல்பான பேச்சு வழக்கு காரணமாக வசனத்தில் நிறைய ஆங்கில வார்த்தைகள் இருந்தாலும் பெயரையாவது,

நல்ல தமிழில் வைக்க வேண்டும் என்பது என் எண்ணம் . எனவேதான் என் முதல் படம் முதல் நல்ல தமிழ்ப் பெயர்களையே வைத்து வருகிறேன் . சவால் , காதல், அவமானம் மீண்டு எழுதல், கொண்டாட்டம் அனைத்தும் கலந்த ஒரு சுவாரஸ்ய சினிமாவாக , அதே நேரம் இன்றைய சமூக சூழலுக்கு ஏற்ப இந்தப் படம் உருவாகி இருக்கிறது .
கார்ப்பரேட் பலத்துக்கு எதிரான சில எளிய மனிதர்களின் போராட்டமும் அவர்களுக்கு ஏற்படும் நிகழ்வுகளுமே இந்தப் படம் . இதற்கு மேல இப்போது கதையை சொல்ல முடியாது .
சொன்னால் விளைவுகள் எங்களுக்கு நல்லதாக இருக்காது . ஆனால் படம் வரும்போது ரசிகர்களைப் பெரிய அளவில் கவரும். அந்த எளிய மனிதனாக இருந்து போராடும் கேரக்டருக்கு விஜய் சேதுபதியை விட பொருத்தமான் நடிகர் என்று யாரும் எனக்கு படவில்லை . எனவே அவர் ஹீரோவானார் .
வழக்கமான வார்த்தை என்றாலும் உண்மையாக சொல்கிறேன்… இது விஜய் சேதுபதிக்கு ஒரு வித்தியாசமான படமாக இருக்கும் .
அவருக்கு இணையாக — பார்த்தாலே நம்பிக்கையும் துணிச்சலும் நிறைந்த ஒரு கேரக்டருக்கு , யார் என்று யோசித்தபோது டி. ஆர் சார்தான் பெஸ்ட் என்று உணர்ந்தேன் . ஆரம்பத்தில் அவர் நடிக்க விரும்பவில்லை . இரண்டு மூன்று சந்திப்புகளுக்கு பிறகு ஒத்துக் கொண்டார் .
ஷூட்டிங் வந்த பிறகு அவர் காட்டிய எனர்ஜி அபாரமானது . ஒரு ஷாட்டில் காரின் மேல் இருந்து சுழன்று கொண்டே குதித்தார் டி.ஆர்.

அந்தக் காட்சியை பார்த்த எடிட்டர் ஆன்டனி தனது நெருங்கிய நண்பரான சிம்புவுக்கு போன் செய்து ‘ அப்பாகிட்ட இருந்து நீங்க கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு “என்று சொன்னார்.
அப்படி ஓர் அசத்தல் அசத்தி இருக்கிறார் டி.ஆர் அவரது அடுக்கு மொழி வசனமும் அடங்காத நடிப்பும் , விஜய் சேதுபதியோடு அவர் இணைந்து நடித்திருக்கும் காட்சிகளும் ரசிகர்களை கவரும் .

காதலும் கடந்து போகும் படத்தில் மடோன்னா செபாஸ்டியன் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. எனவே அவர் கதாநாயகியாக ஆனார் .
விக்ராந்த், நண்டு ஜெகன், போஸ் வெங்கட் ஆகியோர் சிறப்பான கேரக்டர்களில் வருகிறார்கள் . விறுவிறுப்பான படத்தொகுப்புக்கு பெயர் பெற்ற ஆன்டனி படத்தின் வேகத்தை இரண்டு மடங்கு ஆக்கி இருக்கிறார்.

ஆக்சிஜன் தந்தாயே பாடலை புனே மாவட்டத்தில் உள்ள லோனாவாலா பகுதியில் ஒரு குறிப்பிட்ட பருவத்தில் மட்டும் மலரும் மஞ்சள், ஊதா பூக்கள் பின்னணியில் படமாக்கி இருக்கிறோம் .படத்தின் இறுதிக் காட்சி அடர்ந்த காட்டுப் பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது . அபிநந்தன் ராமானுஜத்தின் ஒளிப்பதிவு சிறப்பாக வந்துள்ளது .
வழக்கமான என் படங்களின் கதை திரைக்கதை வசனத்தில் எழுத்தாளர்கள் சுபா மட்டுமே இருப்பார்கள் . இந்தப் படத்தில் கபிலன் வைரமுத்துவும் இணைந்தார் .

ஒரு பாடலில் பாவை என்பது போன்ற அழகான தமிழ் சொற்களை எல்லாம் போட்டு எழுதி இருக்கிறார் கபிலன் வைரமுத்து .
அதற்கு நேரமாக ”ஆப்பு வைக்கப் போவது ..” என்ற பாடலை படு லோக்கலாக — ஜாலியாக சொல்ல வேண்டும் என்றால் அவங்க அப்பா பேரை கெடுக்கும் வகையில் எழுதி இருக்கிறார் . படப் பிடிப்பும் படத் தொகுப்பும் முடிந்து விட்டது . பின்னணி இசை வேலைகள் நடந்து வருகிறது .

படம் திரைக்கு வரும்போது எல்லோரும் ரசிக்கும்படி இருக்கும்” என்றார் .கே வி ஆனந்த் அசத்துங்க !