வெங்கடேஷ் குமார் ஜி என்பவர் தயாரித்துக் கதை திரைக்கதை வசனம் எழுதி உருவாக்க,
கார்த்திக் நாகராஜன் — ஜெனிஃபர் ஆகியோர் இணையராக நடிக்க,
ராகுலின் ஒளிப்பதிவில் , டோனி பிரிட்டோவின் இசையில் , பிப்ரவரி 10 ஆம் தேதி வெளிவரும் ஆவண சித்தரிப்புத் திரைப்படம் ‘லைட்மேன்’
படத்துக்கு வெளிச்சம் கிடைக்குமா ? பார்க்கலாம்
தெருக்கூத்துக் கலைஞனான குணா (கார்த்திக் நாகராஜன்) , தன் இளம் மனைவி சித்ராவுடன் (ஜெனிஃபர்) , சினிமாவில் நடிக்கும் ஆசை உந்தித் தள்ள சென்னை வருகிறான் .
பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பளர்களை சந்தித்தும் வாய்ப்புக் கிடைக்காத நிலையில் , ஒரு லைட் மேனின் ஆலோசனைப்படி லைட் மேனாக வேலைக்கு சேர்கிறான் .
லைட் மேனாகி அப்படியே நடிகனாக ஆக வேண்டும் என்பது அவர்கள் திட்டம் . ஆனால் அவனால் நடிகனாக முடியவில்லை. . தவிர லைட் மேன் வாழ்வும் மிக வறுமையும் துயரமும் கொண்டதாக இருக்கிறது
என்று சொல்லி விட்டு இந்த இடத்தில் இருந்து நிஜ லைட் மேன்களை பேச வைத்து லைட்மேன் வாழ்வின் துயரங்களை சொல்கிறார் வெங்கடேஷ் குமார் ஜி.
பின்னர் குணாவின் நிலையை சொல்லி படம் முடிகிறது .
சினிமாவில் உள்ள இருபத்தி நான்கு தொழில் நுட்பத் துறைகளில் , சண்டைக் கலைஞர்களுக்கு அடுத்தபடியாக ஆபத்தான் துறை — மற்ற எல்லா வேலைகளை விடவும் உடல் உழைப்பு உள்ள வேலை லைட்மேன் வேலைதான் .
இதை அழுத்தமாக பதிவு செய்கிறது படம் .
படத்தில் நிஜ லைட்மேன்கள் தங்கள் தொழிலின் சிரமங்கள் வாழ்வின் நீங்காத ஏழ்மை பற்றி சொல்லும் விஷயங்கள் கனமானவை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியவை
* ஒன்பது மணிக்கு ஷூட்டிங் துவங்க வேண்டும் என்றால் நாங்கள் காலை ஐந்தரை மணிக்கு வீட்டில் இருந்து கிளம்ப வேண்டும் ஆறு மணிக்குள் எங்கள் அவுட் டோர் யூனிட்டுக்கு போய் விட வேண்டும் .
ஷூட்டிங் எவ்வளவு தூரம் என்றாலும் எட்டு மணிக்குள் போய் விட வேண்டும் . ஷூட்டிங் ஆறு மணிக்கு முடிந்தால் நாங்கள் அதன் பிறகு லைட்களை அனைத்து சரி பார்த்து ஏற்றி கம்பெனிக்கு வந்து ,
கணக்கு கொடுத்து விட்டு வீட்டுக்குப் போக மணி பத்தரை ஆகி விடும் . மீண்டும் காலை ஐந்தரை மணிக்கு கிளம்ப வேண்டும் .
* முப்பது வருடத்துக்கு முன்பு எங்களுக்கு ஒரு நாள் சம்பளம் பதினைந்து ரூபாய் . அதில் எல்லா குடும்ப செலவுகளும் போக குறைந்தது மூன்று ரூபாயாக சேமிக்க முடியும் .
அப்போது நிறைய ஷூட்டிங் நடக்கும். ஆனால் இத்தனை வருடத்தில் எங்கள் சம்பளம் ஐநூறு ரூபாயாக மட்டுமே உயர்ந்து உள்ளது . மாசம் பதினைந்து நாள் ஷூட்டிங் கிடைத்தாலே பெரிய விஷயம் .
அதனால் நாங்கள் வறுமையில் உழல்கிறோம் .
* லைட் மேன் என்றால் பொண்ணு கிடைக்காது . கடன் கிடைக்காது . மாசத்துக்குன் பத்து நாளைக்கு மேல வேலை கிடைக்காதவன் எப்படி சமாளிப்பான்னு எல்லாரும் ஒதுக்குவாங்க .
* ஷூட்டிங் நாட்களில் பிள்ளைகளின் முகம் பார்த்துப் பேச முடியாது . நல்லது கெட்டதுக்கு போக முடியாது. உடம்பு சரி இல்லை என்றால் கூட ஒய்வு எடுக்க முடியாது ஒரு டி வி எஸ் வாங்கக் கூட முடியாது .
அதிகபட்சம் சைக்கிள் வைத்து இருப்போம் .
* குறைந்தது ஐம்பது அறுபது கிலோ எடை கொண்ட லைட்டை தூக்கிக் கொண்டு பத்து மாடி பனிரெண்டு மாடி ஏற்றி இறக்க வேண்டும் . வலியில் எலும்பு நொறுங்கும் .
இதற்கெல்லாம் எந்த கூடுதல் வருமானமும் இல்லை . ஒரு நாளைக்கு ஐநூறுதான் சம்பளம்.
^ மின்சாரம் தாக்கியோ தவறி விழுந்தோ லைட் மேலே விழுந்தோ இறந்து போனால் படத் தயாரிப்புக் கம்பெனி 50, 000 , சக ஊழியர்கள் போட்டு தரும் பணம் 50, 000 , எங்கள் அவுட்டோர் யூனிட் மூலம் 50, 000 ஆக
1, 50, 000 மட்டுமே எங்கள் குடும்பத்துக்கு கிடைக்கும் .
* வெகுதூரம் அவுட் டோர் போகும்போது சரியான உணவு இன்றி பட்டினி கிடந்த அனுபவமும் எதிர்பாராத நபர்களால் உயிராபத்தில் சிக்கிய அனுபவம எங்களில் பலருக்கும் உண்டு
* மூணு வருடத்துக்கு ஒருமுறை சம்பளம் உயர்த்த வேண்டும் . ஆனால் ஒரு ஐம்பது ரூபாய் உயர்த்த நாங்கள் நான்கு ஆண்டுகள் கூட காத்திருக்க வேண்டும் . அப்படி ஒரு முறை கேட்டபோதுதான்
ஸ்ட்ரைக் கொண்டு வந்தார்கள் . படைப்பாளி அமைப்பு எல்லாம் வந்தது
* 1996 ஆண்டு ஸ்ட்ரைக் வந்த போது பட்டினியில் செத்துப் போன ஒருவரை , மக்கள் எங்கள் நிலையை அறிய வேண்டும் என்பதற்காக பெரிய ஊர்வலமாக எடுத்துப் போனோம் .
அதைக் கூட பொம்மையை வைத்து நடிப்பதாக சொன்னார்கள்
* எங்கள் மேல் அதிக அன்பு காட்டியவர் எம்ஜிஆர் தான். எங்களுக்கு வெறும் சாம்பார் சாதம் கொடுத்த காரணத்துக்காக ஒரு படப்பிடிப்பையே கேன்சல் செய்து விட்டுப் போயிருக்கிறார் .
1996 ஆண்டு ஸ்ட்ரைக் சமயத்தில் ஜெயலலிதா , அஜித் இருவரும் அரிசி கொடுத்து உதவினார்கள் . மற்ற யாரும் அப்போது உதவவில்லை
* ஆனால் அண்ணா, கலைஞர், எம் ஜி ஆர் , ஜெயலலிதா என்று பலரும் சினிமாவில் இருந்து முதல்வர் ஆனார்கள் . ஆனால் யாருமே எங்களுக்கு அரசு ரீதியாக எந்த பாதுகாப்பையும் ஆதரவையும் தரவில்லை .
* ஒரு முறை கமலிடம் ஒரு லைட்மேன் வணக்கம் வைத்தபோது ‘ நானும் டெக்னீசியன் . நீயும் டெக்னீசியன் . ரெண்டு பெரும் சமம் . எனக்கு ஏன் நீ எழுந்து வணக்கம் சொல்லணும் . உட்கார்’ என்றார் .
கமல், பிரபு, நெப்போலியன் அஜித் ஆகியோர் லைட்மேன்களிடம் அன்பாக இருப்பார்கள் . உதவ செய்வார்கள் . மற்றவர்கள் எல்லாம் ஷாட் முடிந்ததும் கேரவனுக்கு போய் விடுவார்கள் .
* ஏ வி எம் தயாரிப்பில் சிவாஜி பிரபு நடித்த நாம் இருவர் படத்தின் படப்பிடிப்புக்கு முதுமலை போனபோது , வழியில் வந்த காட்டு யானைகள் எங்களுக்கு முன்பு போன லாரியை புரட்டிப் போட்டது .
நாங்கள் மயிரிழையில் தப்பினோம் . இந்த விசயத்தை நாங்கள் போய் சொன்னோம்.
அடுத்த சில நாளில் சிவாஜி போன காரை யானை துரத்தியது . சிவாஜி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் என்று பேப்பரில் செய்தி போட்டு , படத்தை விளம்பரப்படுத்திக் கொண்டார்கள் .
எங்களுக்கு பைசா பிரயோஜனம் இல்லை .
* என் மகன் லைட் மேனாக ஆக விரும்பியபோது நான் தடுத்து விட்டேன் . அவனிடம் ஆர்ட் டைரக்சன் டிபார்ட்மென்ட் அல்லது உணவு படைக்கும் வேலைக்குப் போ என்று சொல்லி விட்டேன் .
அந்த இரண்டு துறையிலும் வாங்கும் பொருளுக்கு நாம் தருவதுதான் பில் . எனவே சம்பளத்துக்கு மேல் கொஞ்சம் பணம் எடுக்கலாம் . ஆனால் எங்களுக்கு ஐநூறு ரூபாய்க்கு மேல் பைசா பெயராது .
* நடிக நடிகையர் ஒரு ஷூட்டுங்குக்கு வருவார்கள் . இரண்டு மணி நேரம் , சில ஷாட் மட்டும் நடிப்பார்கள் . நாலாயிரம் ஐந்தாயிரம் என்று பணம் வாங்கிக் கொண்டு அடுத்த ஷூட்டிங் போவார்கள் .
அங்கும் பல ஆயிரம் பணம் வரும் . இப்படி ஒரே நாளில் பல ஷூட்டிங்குகளில் கலந்து கொண்டு சம்பாதிக்க முடியும் . ஆனால் நாங்கள் காலை ஐந்தரை மணிக்கு போனால்
இரவு பத்தரை மணி வரை ஒரே ஷூட்டிங்தான் . வெறும் ஐநூறே ரூபாய்தான்
— இப்படி இந்தப் படத்தின் ஆவணப் படப் பகுதியில் அனுபவம் வாய்ந்த லைட்மேன்கள் கூறும் பல கருத்துகள் ஆழமானவை .. அதிரடியானவை
இந்த விசயங்களை எல்லாம் படத்தில் சொன்னது போல வாக்கு மூலமாக சொல்வதை தவிர்த்து நாயகன் குணாவின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களாக கதைப் பகுதியில் அமைத்து இருந்தால்
இன்னும் வலுவாக படம் அமைத்து இருக்கும் .
ஆனால் அது படத்தின் தயாரிப்பு செலவு சம்மந்தப்பட்ட விசய்ம் என்பதால் அதையும் படத்தின் காட்சித் தரத்தையும் விமர்சிப்பதில் பலன் இல்லை .
ஆனால் ஆவணப் பகுதியில் பலரும் ஒரே விசயத்தை திருப்ப திரும்ப சொல்வதை கத்திரி போட்டு இருக்கணும்ப்பா !
அதே போல நடிகர்களின் நடிப்பு , வசனம் இரண்டடிலும இருக்கும் அதீத செயற்கைத் தன்மையயையும் தவிர்த்து இருக்க வேண்டும் .
எனினும் லைட் மேன்களின் வாழ்க்கை இவ்வளவு ஏழ்மையானதா என்று சினிமாவில் உள்ள பலரே பதறும் அளவுக்கு அழுத்தமாக பதிவு செய்திருக்கும் வகையில் கவனம் கவர்கிறது லைட்மேன் படம்