பேரல்லல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ZEE ஸ்டுடியோஸ் சார்பில் ஜி வி பிரகாஷ்குமார் , உமேஷ் கே ஆர் பன்சால், பவானி ஸ்ரீ ஆகியோர் தயாரிக்க, ஜி வி பிரகாஷ், திவ்ய பாரதி, சேத்தன், அழகம்பெருமாள், குமரவேல் நடிப்பில் கமல் பிரகாஷ் என்ற அறிமுக இயக்குனர் இயக்கி இருக்கும் படம்.
கிங்ஸ்டன் என்பது படத்தின் நாயகனின் பெயர் .
திருநெல்வேலி மாவட்ட கடலோரக் கிராமம் ஒன்று. காலகாலமாக கடலாடி சரித்திரம் படைத்த அந்தக் கிராமத்தில் ஒரு நிலையில் யார் கடலுக்குள் போனாலும் அவர்கள் பிணமாகவே திரும்ப வந்தார்கள். கடலுக்குள் இருக்கும் கெட்ட ஆவிகளே இதற்குக் காரணம் என்று நம்பும் ஊர், அந்த ஊரில் இருந்து யாரும் கடலுக்குள் போகக் கூடாது என்று முடிவெடுக்கிறது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது .
எனினும், பக்கத்து ஊரில் ஆட்களை வைத்து மீன் பிடிக்கும் நபரிடம் , இந்த கிராமத்து இளைஞர்கள் – கிங்க்ஸ்டன் (ஜி வி பிரகாஷ்) உட்பட – பலர் வேலை செய்கின்றனர் . ஆனால் அந்த நபர் மீனவர்களை வைத்துக் கடத்தல் செய்து , மாட்டிக் கொண்டால் இந்த ஊர் மீனவர்கள் கொல்லப்படுவது நடக்கிறது.
கடத்தலுக்கு மீனவர்கள் வேண்டும் என்பதால்தான் அந்த நபர் , இவர்கள் ஊருக்கு பேய்க் கதை ஒன்றைக் கட்டி விட்டான் என்று நம்பும் கிங்ஸ்டன், தைரியமாக தனது நண்பர்களுடன் கடலுக்குள் போக, காதலியும் (திவ்ய பாரதி) வம்படியாகச் சேர்ந்து கொள்ள
அங்கே முன்பே இறந்து போன மிலிட்டரி வீரர் (அழகம்பெருமாள்) , தனது தாத்தா (சேத்தன்) உட்பட பலரையும் கொடூரமான பேய்களாக இவர்கள் பார்க்கிறார்கள். நடந்தது என்ன என்பதே படம்.
தான் தயாரிக்கும் படம் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று தமிழின் முதல் SEA FANTASY படத்தை பொருட் செலவில் எடுத்துள்ளார் ஜி வி பிரகாஷ் குமார்
வட்டார வழக்கு மொழியில் எல்லோரும் பேசும் படம்.
கடல்புற உணர்வு , அந்த மண்ணும் மக்களும் என்று, சூழலைத் திரைக்குள் கொண்டு வந்து இருக்கிறார் அறிமுக இயக்குனர் கமல் பிரகாஷ். பாராட்டுகள்.
கெத்தான மீனவ இளைஞன் கிங்ஸ்டனாக…. தோற்றம் , ஆட்டம் , நடிப்பு என்று உற்சாகமாக வளைய வருகிறார் ஜி வி பிரகாஷ்குமார்
என்ன ஆச்சு திவ்ய பாரதிக்கு? கடலுக்குள் வரும் பேய்களின் முகத்தை ஜஸ்ட் ஒரு மஞ்சள் துணியால் மூடினால் எப்படி இருக்குமோ அப்படியே தோன்றுகிறார் திவ்யா பாரதி .
அழகம்பெருமாள் , சேத்தன் , குமாரவேல் பொருத்தம் .
எனினும் படத்தின் ஆகப் பெரும்பலம் என்றால் அது ஜி வி பிரகாஷின் இசையும் , கோகுல் பினாயின் அற்புதமான ஒளிப்பதிவும்தான் .
படத்தில் பேய்களை விட மிரட்டுவது ஒளிப்பதிவும் பின்னணி இசையும்தான் . அப்படி இரு அசத்தல் . டைட்டானிக் படப் பாணியில் பிரம்மாண்டமான ஹைட்ராலிக் செட், குறைசொல்ல முடியாத சி ஜி , தயாரிப்புத் தரம் … யாவும் சிறப்பு.
எஸ் எஸ் மூர்த்தியின் கலை இயக்கமும் சிறப்பு .
இரண்டாம் பகுதியில் கடல் பேய்கள் மிரட்டும் சில காட்சிகள் அசத்தல்.
இவ்வளவு சிறப்புகள் இருந்தும் கதை திரைக்கதையில் கோட்டை விட்டுவிட்டார் அறிமுக இயக்குனர் கமல் பிரகாஷ் . கடல் பேய்கள் என்ற சிறப்பான பின்னணியைப் பிடித்தவர்கள் அதற்கேற்ற கதையைப் பிடிக்காமல் அந்தப் ;பின்னணியே போதும் என்று வழக்கமான கதை பண்ணி விட்டார்கள் .
முதல் பாதி முழுக்க கொத்து பரோட்டா போட்ட மாதிரி காட்சிகள் தெறிக்கின்றன. அந்த ஸ்லாங் எல்லோருக்கும் புரியும்படி எழுதப்படவில்லை. அந்த ஸ்லாங் பழகாதவர்கள் விஷயத்தை உள்வாங்க போதுமான இடைவெளி இல்லை. படம் பார்ப்பவர்களுக்கு புரிகிறதா இல்லையா என்ற கவலையே இல்லாமல் கசகசவென்று குட்டி குட்டிக் காட்சிகள் அடுக்கப்படுகின்றன .
மிக பலவீனமான இந்த முதல் பாதி காரணமாக இரண்டாம் பாதியில் பேய்கள் மிரட்ட ஆரம்பிக்கும்போது காலம் கடந்து போயிருக்கிறது .
பேய்கள் இருப்பது பொய் என்று நம்பி கடலுக்குள் செல்லும் கிங்ஸ்டன் அங்கே இடைவேளைக்குப் பிறகு பேயைப் பார்த்தான் என்பதில் என்ன பெரிய சுவாரஸ்யம் இருக்க முடியும்?
ஒரு நிலையில் கடல் பேய்கள் ஊருக்குள் இறங்கி விடுகின்றன. கிங்ஸ்டனிடம், ” நீ கடலுக்குள் வா.. வராவிட்டால் ஊரையே அழித்து விடுவோம்” என்கின்றன .
ஊரைக் காப்பாற்ற உச்ச பட்ச பயத்தோடு கடலுக்குள் இறங்கும் கிங்ஸ்டனுக்கு என்ன நடந்தது என்பதுதானே எழுதப்பட்டிருக்க வேண்டிய திரைக்கதை ?
மொத்தத்தில் படம்……
மேக்கிங் மற்றும் தொழில்நுட்பத்தில் கிங்ஸ்டன் .
கதை திரைக்கதையில் பழைய குண்டு பல்பின் பிஞ்சு போன டங்ஸ்டன் .