எஸ் கே பி பிக்சர்ஸ் மற்றும் ஸ்டேண்ட் அலோன் இன்டர்நேஷனல் சார்பாக பிரபாகரன் தயாரிக்க, புதுமுகங்கள் நடிப்பில் ஹேமந்த் நாராயணன் எழுதி இயக்கி இருக்கும் படம்.
மர்மர் என்ற ஆங்கில வார்த்தைக்கு முணுமுணுப்பு என்று பெயர் .
தமிழின் முதல் கண்டெடுக்கப்பட்ட காட்சிகள் படம் (FOUND FOOTAGE FILM) என்று உரிமை கொண்டாடுகிறது படக் குழு . அதாவது சினிமாப் படப்பிடிப்புக்காக அல்லாமல் , ஆவணமாக்குதல், வெளிக்கொண்டு வருதல் , பிரபலப்படுத்துதல் போன்ற வேறு காரணங்களுக்காக படமாக்கப்பட்ட காட்சிகளை வைத்து ஒரு திரைக்கதையை எழுதி அதைப் படமாக்கினால் அதுவே கண்டெடுக்கப்பட்ட காட்சிகள் படம் (FOUND FOOTAGE FILM)
அப்படிப் பார்த்தால் ஹரி ஹரீஷ் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வந்த ஓர் இரவு படம்தான் தமிழின் முதல் கண்டெடுக்கப்பட்ட காட்சிகள் படம் (FOUND FOOTAGE FILM).
சரி போகட்டும்
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலைப்பகுதியில் காத்தூர் என்ற கிராமத்தை ஒட்டிய காட்டுப்பகுதியில் கன்னி குளம் என்ற குளத்தில் சப்த கன்னிகள் இரவில் நீராடுவது வழக்கம். மனிதர்கள் பார்க்கக் கூடாத நிகழ்வு அது.
காத்தூரைச் சேர்ந்த இளைஞன் ஒருவனைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட ஒரு வடக்கத்திப் பெண், சூனியக்காரியாகி மந்திர தந்திர நம்பிக்கையில் அந்த கிராமத்து குழந்தைகள் பலரை நரபலி கொடுக்க,ஒரு நிலையில் அவளை ஊர் மக்கள் கொல்கின்றனர் . அவள் காட்டில் பேயாக அலைகிறாள் . அவளுக்கு ஊர் மக்கள் மங்கை என்று பெயர் வைக்கின்றனர்.
ஊரில் உள்ள ஒவ்வொருவரையும் அது கொல்ல முயல, ஒவ்வொரு வீட்டிலும் ‘உன் பலி நான் அல்ல. இங்கே வராதே போ’ என்று சிவப்பு நிறத்தில் (ரத்தம் என்று சொன்னால் லாஜிக் இடிக்கும்) எழுதி வைக்கின்றனர் .
காட்டுக்குள் நுழைபவர்கள் ரத்தம் சிந்தி விட்டால் போதும் அந்த நபரை மங்கை கொன்று விடுவாள் .
ஒரு வடக்கத்திய இளைஞன், ஒரு தென்னிந்திய இளைஞன், ரெண்டு நவநாகரீக பப்பரப்பா பெண்கள் அடங்கிய ஒரு குழு , இந்த விசயங்களைப் படம் பிடித்து வலை குழாய்க் காணொளியில் ஏற்றி லாபம் சம்பாதிக்க, ஒரு தயாரிப்பாளரிடம் பெரும் பணம் பெற்று காட்டுக்கு வருகின்றனர்.
உள்ளூரில் உதவுவதாக சொன்ன நபர் பாம்பு கடித்து மருத்துவமனைக்குப் போய் விட , அவரது மகளான சிற்றிளம் பெண் ஒருத்தி, உடன் காட்டுக்கு வருகிறாள் .
காட்டுக்குள் இரவில் அவர்கள் ஒய்ஜா போர்டு முறையில் ஆவிகளுடன் பேச முயல, ஆவிகள் வராத நிலையில் வடக்கத்தி இளைஞன் கிராமத்துப் பெண்ணின் கையில் ஊசியால் குத்தி ரத்தம் வர வைக்கிறான் . அப்புறம் என்ன நடக்கிறது என்பதுதான் படம் .
இது பின்பணியாக்கத்தில் (POST PRODUCTION) உருவான படம் . அவ்வளவு அட்டகாசமான கெவின் பிரட்ரிக் கெவின் ஒலி வடிவமைப்பு மற்றும் பலரின் கை வண்ணத்தில் காட்சி மேம்படுத்தல் வேலைகள்.
உரித்த கோழிகள் போல, வேண்டும் என்றே உலா வரும் கதாநாயகிகள் தண்ணி அடிக்கிறார்கள் . தம் அடிக்கிறார்கள். ‘நாந்தான் உன் டைப்’ என்று பிடித்த ஆண் மீது ஏறி..
ஒரு சிகரெட்டுக்காக மணிக் கணக்கில் நடக்கிறார்கள்
அதிலும் ஒரு பெண் முன்னாடி முனிசிபாலிட்டி போல இருந்தாலும் பின்னாடி பர்சனாலிட்டியாக இருக்கிறார். படத்தில் அவருக்கு அங்கிதா என்று பெயர் வைத்ததற்குப் பதில் தம்புரா என்று பெயர் வைத்து இருக்கலாம் . அப்படி ஒரு பின்னழகு. அதற்கேற்ற உடை வடிவமைப்பு. (பெரிய ரசிகன்/ ரசிகை அய்யா நீ)
இன்னொரு பெண்ணை அவ்வளவு கொசுக்கடியிலும் ஜட்டியை விட சின்ன ஷார்ட்ஸ் போட வைத்து பல காட்சிகளில் கேமராவுக்கு முன்னால் பாதம் முதல் பாதி வரை சொறிந்து கொண்டே உட்கார வைத்த டைரக்டருக்கு, அந்தப் பெண்ணின் ‘மனசு’ களை விட பெரிய மனசு .
இவர்கள் நம்பிய இரவுக் காட்சிகளை விட பகல் நேரக் காட்சிகளில்- இன்டோர் உட்பட- ஜேசன் வில்லியம்சின் ஒளிப்பதிவு வண்ணமயமாக அருமையாக இருக்கிறது
கேட்பதற்கு கதை நன்றாக இருந்தாலும் காட்சிகள் எழுதியதில் ரொம்பவே பலவீனம் . முதல் பாதியை மேற்சொன்ன விசயங்களால் கிளுகிளுப்பாகக் கடக்க முடிகிறது . ஆனால் இரண்டாம் பகுதி ரொம்ப நீளமான, பெரிய, அசைவற்ற காட்சிகளால் பொறுமையை சோதிக்கிறது.
இது போன்ற பேய்ப் படங்களில் வரும் நண்பர்கள் கதாபாத்திரங்கள் தேவை இல்லாமல் அல்லது சில்லுண்டிக் காரணங்களுக்காக அடித்துக் கொள்வார்கள் . அந்தப் பழைய முறம் இந்தப் படத்திலும் இருக்கு.
அப்பாவி கிராமத்துப் பெண்ணை அழைத்து வந்து அவளது நேர்மையின் மேல் வன்மம் வைத்து அவளை மங்காவிடம் சிக்க வைக்கும் இந்த நபர்கள் ஒரு பக்கம் என்றால்
மற்றவர்களை விட முதலில் அந்தப் பெண்ணைப் பழிவாங்கும் மங்கா இன்னொரு பக்கம். மனசாட்சி அற்ற பேய். ஒரு வேளை சங்கிப் பேய் என்பதால் அப்படி நடந்து கொள்கிறதோ என்னவோ ?
அல்லது அந்த கிராமத்துப் பெண் கதாபாத்திரம் முழு உடம்பை மூடிய கதாபாத்திரம் என்பதால் எதுக்கு அந்தக் கருமம் என்று டைரக்டர் சீக்கிரம் காலி பண்ணி விட்டாரா தெரியவில்லை.
உண்மையில் அந்த கிராமத்துப் பெண் கதாபாத்திரத்தை நீட்டித்து அட்டகாசமான திரைக்கதை அமைத்து அலற விட்டிருக்கலாம் . அதான் சவுண்ட் இருக்கே… அப்புறம் எதுக்கு சவுண்ட் ரைட்டிங் ? அதான் சதை இருக்கே .. அப்புறம் எதுக்கு கதை என்று நினைத்து விட்டார்கள் போல.
போகப் போக, ‘சீக்கிரம் எல்லாத்தையும் கொன்னு படத்தை முடிச்சு விடு மங்கை ..’ என்று படம் பார்ப்போர் மைன்ட் வாய்சில் கதறுகிறார்கள்.
மர்மர் … பேரு பெத்த பேரு.. தாக நீலு லேது