கிஸ்@ விமர்சனம்

ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் தயாரிக்க, கவின்,  பிரீத்தி அஸ்ராணி, ஆர் ஜே விஜய், வி டி வி கணேஷ், இளைய திலகம் பிரபு நடிப்பில் நடன இயக்குனரும் நடிகருமான சதீஷ் கிருஷ்ணன் முதன் முதலாக இயக்கி  இருக்கும் படம்.  

முன்னொரு காலத்தில் காதல் பிடிக்காத ஓர் அரசன் காதலர்களை கொல்வதும் காதல் ஜோடிகளை நெருப்பில் எரித்துக் கொடுமைப்படுத்துவதுமாக இருக்கிறான் (  அனிமேஷன் கவின்) 

நிகழ்வில் அம்மாவை (தேவயானி)  ஏமாற்றி விட்டு அப்பா (ராவ் ரமேஷ்)  வேறு ஒரு பெண்ணோடு (கவுசல்யா) குடும்பம் நடத்துவதாக  நம்பும் மகனான ஓர் இளைஞன் (கவின் ) காதலையும் காதலர்களையும் வெறுக்கிறான் . அவன்  நண்பன் ஒருவன் ( ஆர் ஜே விஜய்) அந்த நண்பனின் அப்பா ஒருவர் (வி டி வி கணேஷ்)

மேற்படி  அரசனுக்கு சம்மந்தப்பட்ட புத்தகம் ஒன்று யாரோ ஒரு பெண் மூலம் இப்போது இவனுக்குக் கிடைக்க, அதன் பிறகு காதல் ஜோடி யாராவது  முத்தமிட்டுக் கொள்வதை அவன் பார்த்தால் அவனுக்கு ஒரு ஈ எஸ் பி பவர் வந்து அந்தக் காதல் ஜோடி வருங்காலத்தில் நன்றாக வாழுமா ? இல்லை பாதியில் பிரியுமா? இல்லை அகால மரணமா  என்பது காட்சியாக தெரிந்து விடும் . பெரும்பாலும் அந்தக் காதல் ஜோடிகள் சேர்ந்து வாழ்வதாக இல்லை . ஆரம்பத்தில் இதை அவன் ரசித்தாலும் போகப் போக பெரும் சுமையாக அது மாறுகிறது . 

அதில் இருந்து விடுபட அவன் முயல, ஒரு சாமியார் ”புத்தகத்தை கொடுத்த பெண்ணை கண்டு பிடித்தால்  பிரச்னைக்கு தீர்வு வரும்” என்கிறார் . 

அவள் யார் என்று தெரியாத நிலையில் அவளைத் தேடும் முயற்சியில் சல்சா நடன மங்கை ஒருத்தியின் (பிரீத்தி அஸ்ராணி) டான்ஸ் கிளாசுக்குப் போக ஆரம்பிக்கிறான் . 

ஆரம்பத்தில் நட்பு அப்புறம் காதலாகிறது . அவனுக்கும் காதல் பிடிக்கிறது . ஒரு நிலையில் இருவரும்  விரும்பி முத்தமிட்டுக் கொள்ள. அப்போது வரும் ஈ எஸ் பி மூலம் அவள் பெயர் போட்ட கல்லறை ஒன்றை பார்க்கிறான்அவன்  . 

எனவே இந்தக் காதல் நிறைவேறினால் அவள் செத்து விடுவாள் என்று நம்புகிறான் . அவளுக்காக அவளைப் பிரிய,  அவள் தவறாக நினைக்க, அரசன் விஷயம் முற்பிறவி எல்லாம் திரைக்கதையில் வர , காதல்  என்ன ஆச்சு. ஈ எஸ் பி பவர் என்ன ஆச்சு? நடந்தது என்ன என்பதுதான்  இந்த கிஸ். 

ஆனால் ஒரு ஃபேண்டசி ரொமான்ஸ் படத்துக்கான அடையாளங்கள் தெரியுதே ஒழிய திரைகதையில் அதற்கான அடர்த்தியும் சுவாரஸ்யமும் இருக்கிறதா?

நடன இயக்குனர் கம் நடிகர் என்பதால் சதீஷ் கிருஷ்ணனின் இயக்கம் டெக்னிகலாக , மேக்கிங்கில் சிறப்பாக இருக்கிறது . 

ஹரீஷ் கண்ணனின் ஒளிப்பதிவு அருமை . அடர்த்தியான இருள் வண்ண ஒளிப்பதிவு அருமை . சென் மார்ட்டின் இசையும் ஒகே 

தற்கொலை செய்து கொள்ள எப்படி எப்படி எல்லாமோ முயலும் இளைஞனைக் காப்பாற்ற வி டி வி கணேஷ் போராடும் அந்த காமெடி ஏரியா எழுத்து மேக்கிங் இரண்டிலும் அசத்தல். அந்த பையன் அச்சு அசல் பெண் வேடத்தில் வந்து உட்காருவது,  பெண் உடையிலே  வெற்றி பெறுவது என்று ரசிக்க சில விசயங்களும் உண்டு . ஆனால் மொத்தப் படமும் இப்படி  இல்லை என்பதுதான் பிராப்ளம்.

உற்சாகமான நடிப்பும் ஒல்லி தேகமும் என்று…  சல்சா டான்ஸ் டிரைனர் பாத்திரத்தில் உற்சாகமாக நடித்துள்ளார் பிரீத்தி அஸ்ராணி. ஆனால் குளோசப் கொஞ்சம் ஷாக் கொடுக்கிறது என்றால் அதே குளோசப்பில் அவர் பல் தெரிய சிரிக்கும்போது வயிற்றுக்குள் பயப் பட்டாம்பூச்சியே பறக்கிறது 

குழப்பமும் ஈர்ப்புமான உணர்வுகளை வெளிப்படுத்தி அந்த கேரக்டரை  ரசிகர்கள் பின்பற்றும்படி செய்ய முயலாமல் , வேண்டா வெறுப்பாக  நடிப்பது போல விட்டேத்தியாக நடித்து இருக்கிறார் கவின் 

“மூஞ்சப்பாரு .. கழட்டி போட்ட ஜட்டி மாதிரி இருக்கு ..” என்று ஒரு காட்சியில் வி டி வி கணேஷ் சொல்லும்போது தியேட்டரே சிரிப்பதற்குக் காரணம் அந்த வசனம் இல்லை. அவர் நடித்திருக்கும் விதமும்தான் .அவர் முகத்துக்கு என்ன நல்லாத்தான் இருக்கு  . 

ஆனால் கவினுக்கு ஒரு இளம் ரசிகர்கள் ஒப்பனிங் இருக்கும் என்ற நம்பிக்கையும் முறிந்து ”அய்யய்ய..”  என்று இளைஞர் சமுதாயம் பின் வாங்கி ஓடி விட்டது என்றால் அவரது நடிப்பும் திரைக்கதையும் எப்படி இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம் . 

போரடிக்கிறார் ஆர் ஜே விஜய் . பெரிய பெரிய படங்களுக்கு கம்பயர் செய்தே பெரிய அளவில் கல்லா கட்டுவதால், இப்பி யாராவது நடிக்க அழைத்தல் ஒரு எட்டு வந்து மீட்டர் வாங்கிக் கொண்டு போவார் போல .  

வி டி வி கணேஷ் அக்குள் கேமரா பக்கம் இருக்கும்படி  முழு உடம்பு காட்டி நிற்பது,  மார்பு வரை துண்டு கட்டிக் கொண்டு பேசுவது….  அப்படியே டான்ஸ் ஆடுவது….  இதை எல்லாம் காமெடி என்று நம்பும் அளவுக்கு சிந்தனை வறண்டு கிடப்பதுதான் பரிதாபம் . 

கடைசியில் பிரபு சொல்லும் டுவிஸ்ட் ஒகே என்றாலும் சரியாக சொல்லப்படவில்லை. அதற்குள் நிறைய சேதாரம் . SOME TIMES  NEVER IS BETTER THAN TOOOOOO LATE. 

கட்சி அரசியல் , சமூக அரசியல், பண அரசியல் , பிரபலங்கள் அரசியல் என்று படங்கள் வந்து கொண்டு இருக்கும்போது கிஸ் படத்தின் ஜானரில் ஒரு உருப்படியான கதை சொல்லல் இருந்து இருந்தால் இந்தப் படம் இந்த வாரத்தின் கமர்ஷியல் வெற்றிப் படமாக மாறி இருக்கும் வாய்ப்புக் கூட வந்திருக்கும் . 

ஆனால் ஏசி அறையில் பட்டினி போட்டுக் கொல்வது போல,  நல்ல மேக்கிங் என்றாலும்  இந்தப் படத்தின் கிரியேட்டிவ்வறட்டுத் தன்மை மற்ற படங்களை விட கீழாக இந்தப் படத்தைக்  கொண்டு போய் விட்டது . 

மொத்தத்தில் கிஸ்… உதடு கிழிஞ்சது போங்க

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *