மீரா விஜய் ஆண்டனியின் விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்க,
விஜய் ஆண்டனி, திருப்தி ரவீந்திரா, சுனில் கிருபளானி என்ற பெயரில் நடித்திருக்கும் காதல் ஓவியம் கண்ணன், வாகை சந்திரசேகர், செல் முருகன், கிரண் ரத்தோட் மேலும் பலர் நடிப்பில் அருவி புகழ் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் இருக்கும் படம் .
சமூக விரோத காமுகர்களால் பாலியல் பலாத்காரத்தில் சூறையாடப்பட்ட ஓர் அநாதை அம்மாவுக்குக் குழந்தையாகப் பிறந்து, குற்றவாளிகளுக்குத் துணை போகும் போலீசால் – ஒரு குப்பை என் பெரும் குப்பை மேட்டில் குழந்தையாக வீசப்பட்டு , சக்தித் திருமகன் முத்துக் குமரன் அருளால் அதிசயமாக உயிர் பிழைத்து ,
திராவிட இயக்கப் பெரியவர் ஒருவரால் (வாகை சந்திரசேகர்) படிப்பறிவு , நிஜமான உண்மையான சமூக அறிவு பெற,
நல்லதை இந்த உலகம் ஏற்காது என்பதை களைப்போடு உணர்ந்து அறிவும் அது தரும் பணம் மட்டுமே இங்கு ஆயுதம் என்ற கசப்பான உண்மையை உணர்ந்து ..
சென்னை வாழ் மேட்டுக் குடி உயர்சாதி நபரும் , பெரும் முதலாளிகள், கார்ப்பரேட் நிறுவனங்கள், அரசியல்வாதிகள், பிரபலங்கள் இவர்களின் கணக்கு வழக்காளரும்…
எந்த தத்துவம் தங்களை எதிர்க்கிறதோ அந்த தத்துவத்து ஆட்களையே கைக்குள் போட்டு வைத்துக் கொண்டு அவர்களால் தவிர்க்கவே முடியாத நபராக ஆகி ,ஒரு நிலையில் அவர்களையே கைக்குள் போட்டுக் கொண்டு , கோடி கோடிகளில் குளித்தபடி , தன் சமூகத்து ஆட்களை மட்டும் வளர்ந்து விடும் அபயங்கர் சீனிவாச சுவாமி (சுனில் கிருபளானி எனப்படும் காதல் ஓவியம் கண்ணன் )கணக்கு வழக்காளர் மற்றும் பவர் புரோக்கர் வீட்டில் வேலையாளாக சேர்கிறான் .
கற்றுக் கொள்கிறான் .
வளர்ந்து (விஜய் ஆண்டனி) தானும் அந்த வழியே மீடியேட்டர் , பவர் புரோக்கிங் , பிம்ப் என்று எல்லாவகையிலும்ஆகி , போலீஸ் எஸ் பிக்கே இல்லீகலாக டிரான்ஸ்பர் வாங்கிக் கொடுக்கும் அளவுக்கு , காரியம் சாதிக்க தன்னை தேடி வந்து பணம் கொட்டிக் கொடுப்போருக்கு ஆதரவாக பத்திரப் பதிவு அலுவலகம் , பல்வேறு அரசு நிறுவனங்களில் இல்லீகலாக காரியம் முடித்து , கொடுத்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறான் . ஒரு அமைச்சரால் சாதிக்க முடியாத விசயங்களைக் கூட சாதிக்கிறான்.
ஆனால் அந்தப் பணத்தை அரசுத் திட்டங்கள் போய்ச் சேர வேண்டிய அல்லது அரசுத் திட்டங்கள் தொடாத ஏழை எளிய மக்களுக்குப் பணமாகவே போய்ச் சேரும்படி செய்கிறான் .
மகளிர் சுய உதவிக் குழு நடத்தி பெண்களுக்கு உதவுகிறான் .
குடும்பத்தின் பின்பற்றும் தர்மத்தின் ஆணாதிக்க மனோபாவத்தால் பெண்ணடிமை வெறியால் கணவனால் பல கொடுமைகளுக்கு ஆளாகி , விவாகரத்து மூலம் உயிர் பிழைக்க நினைத்து இன்று புயலில் சிக்கிய மான் குட்டி போல அல்லாடும் வேம்பு என்ற பிராமணப் பெண்ணை மறுமணம் செய்து கொள்கிறான் .
சாய் அப்யங்கரின் சமூகமும் மேட்டுக்குடி ஆட்களும் சனாதன தர்மமும் மேட்டுக்குடி அரசியலில் வடக்கே உச்சம் பெற , வெளியே எதிர்த்தாலும் உள்ளுக்குள் அவர்கள் கேட்பதை அடிமைகளாக நிறைவேற்றிக் கொடுக்கும் நிலையில் மாற்றுக் கருத்து அரசியலும் போய் விட,
இன்று மத்தியில் சக்தி வாய்ந்த பெண் அமைச்சராக இருக்கும் நபருக்கு முப்பது வருட அரசியல் ராஜகுருவாக இருக்கும் அப்யங்கருக்கு, அரசியல்வாதிகளின் கப்பம், கோடிகளில் பணம், சாமி என்ற மரியாதை, மண மூட்டப்பட்ட ஏ சி வாழ்க்கை, கைப்பிடியில் தண்ணீர் என ஓடும் உயர்ரக மது வகைகள் இவற்றையும் மீறி … மக்களை சந்திக்காமலே பெறக் கூடிய பெரும் அதிகாரமுள்ள அரசியல் பதவி ஆசை வருகிறது .
அதன் மூலம் தனது சமூக ஆட்களையும் தனது அடிமைகளையும் மட்டுமே இயல்பாக வாழும் சூழலை உருவாக்கி மற்றவர்களை மற்ற சமூக மக்களை சோற்றுக்கு அலைய வைக்கும் நோக்கமும் அவருக்கு இருக்கிறது .
ஜனாதிபதி பதவியை அவருக்கு தங்கத் தட்டில் தாம்பாளத்தில் வைத்துத் தர மத்திய பெண் அமைச்சரும் மத்திய அரசும் தயாராக இருக்கிறது .
மத்திய பெண் அமைச்சரின் சகோதரி மகன் ஒருவர் தான் எவ்வளவோ சேவை செய்து தன்னை அமைச்சர் கண்டு கொள்ளவில்லை என்றும் ,
வெளிநாட்டுக் கம்பெனி சுமார் எட்டு நூறு கோடிக்குக் கேட்கும் பெண் அமைச்சருக்கு சொந்தமான தமிழ்நாட்டில் உள்ள நிலத்தை தனக்கே எழுதி வைக்கும் சூழலை உருவாக்கினால் பல கோடி கமிஷன் தருவதாகவும் மீடியாட்டார் ஹீரோ விடம் சொல்கிறார் .
அதற்கேற்ப பெண் அமைச்சரின் ஒரு திராவிட அரசியல் அடிமையைப் பிடித்து அவன் மூலமே அமைச்சருக்கு சிக்கலை உருவாக்கி மீடியாவை வைத்து பிரச்சனையை மீடியேட்டர் பிரபலம் செய்ய , பெண் அமைச்சர் தன்னிடமும் தனக்கு நெருக்கமான முக்கிய நபர்களிடம் அந்த நிலம் இருக்க கூடாது என்று எண்ணி, வேண்டா வெறுப்பாக தனது சகோதரி மகனுக்கே எழுதி வைக்கிறார் .
”ஆனால் முடிவுகள் எல்லாம் என்னுது ; ஆனா அதை உருவாக்கும் சிச்சுவேஷன் எதுவும் எனக்கு இல்லை ” என்று எண்ணும் பெண் அமைச்சர் ஏதோ தப்பு என்பதை உணர்ந்து அபயங்கர் சாமியிடம் சொல்ல அவர் சென்னையிலேயே தனக்கு அடிமையாக இருக்கும் அரசு எந்திரத்தை வேட்டை நாயகப் பயன்படுத்த , அவருக்கு மீடியேட்டர் ஹீரோ என்ன செய்கிறார் . என்பது புரிகிறது .
” காலகாலமாக சாதிப் பெருமிதம் , ராஜ தந்திரம் , சாணக்கியத்தனம் , அறிவு என்ற பெயரில் நாம் என்ன செய்து கொண்டு இருந்தோமோ அதையே தன்னால் புரோக்கர் என்றும் பிம்ப் என்றும் மாமா என்று சொல்லப்பட்ட நாயகனும் மலிவுப் பதிப்பாக செய்கிறான் . நம் செல்வம் தன்னுடைய ஆதிக்க சாதி ஆட்களுக்கும் தன்னிடம் அடிமை சாசனம் எழுதிக் கொடுத்த அரசியல்வாதிகளுக்கும் போகிறது .
ஆனால் மீடியேட்டர் நாயகனின் பணம் தனது ஆயிரக்கணக்கான எதிரிகளும் , “பாக்கெட்ல பத்து லட்ச ரூபாய் இல்லைன்னா நீ ஏன் மருத்துவ சிகிச்சைக்கு ஆசைப்படற ; நீயே செத்துடு ” என்று அலட்சியமாக தன்னால் புறக்கணிக்கப்படும் ஏழை எளிய மக்கள் தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கும் போய் சேருகிறது தன் சமூகத்து நியாயமாக ஏழை குருக்களுக்கும் அவன் நல்லவனே ‘ என்பதை உணர்த்துகிறது .
‘த்தா ஃபுரபஷனலா நானும் நீயும் ஒண்ணுதான்டா… ” என்று நாயகன் பூடகமாக உணர்த்துவதும் அவன் பிற சமூக ஏழை மக்களுக்கு செய்யும் உதவிகளும் அவரை தீயாக்குகிறது .
பவர் ஃபுல் மத்திய அமைச்சரே தனது சிஷ்யை என்ற சக்தி ,
ஆளும் மாநில அரசுகள் கொள்கை என்ற பெயரில் எதிர்த்தாலும் அப்யங்கர் வீட்டு புழக்கடையில் கிடக்கும் அடிமைகள் என்ற நிலையில் அரசு , அரசியல்வாதிகள் , அதிகாரிகள் ,
ரவுடிகள் எல்லோரும் மீடியேட்டர் நாயகனுக்கும் அவனது அப்பாவிப் பிராமண மனைவிக்கும் எதிராக இறங்க ..
என்ன நடந்தது என்பதே சக்தித் திருமகன் .
இந்தக் கதையை இப்படி எளிமையாக விளக்கமாக யாருக்குப் புரிய வேண்டுமோ அவர்களுக்குப் புரியும்படி சொல்ல வேண்டி இருக்கிறது . ஆனால் சக்தித் திருமகன் அப்படி சொல்லி இருக்கிறதா மில்லியன் .. பில்லியன்.. டிரில்லியன் டாலர் கேள்வி.. கேள்விக் கணைகள்
இதுவரை தமிழ் சினிமா சொல்லாத – ஆனால் சொல்ல வேண்டிய புதிய கதை இது . மணி லாண்ட்ரிங் என்பது பழைய விஷயம் என்றாலும் அதன் சமூக அரசியல் காரணிகளான உண்மைகளை பூடகமாக வேணும் சொல்லும் இயக்குனர் அருண் பிரபுவின் சமூகம் அரசியல் அறிவு, அக்கறைப் பார்வை போற்றத்தக்கது . இந்த உணர்வும் அறிவும் கொஞ்ச பேருக்குத்தான் இருக்கும் என்ற நிலையில் அருண் பிரபு போன்றவர்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் ; பலப்படுத்தப்பட வேண்டியவர்கள் .
சமூகத்தின், அரசு எந்திரங்களின், அரசியலின் மேட் டுக்குடி கட்சி அரசியல் சமூக அரசியல் பண அரசியல் இவற்றின் சந்து பொந்து இந்து இடுக்குகளில் நுழைந்து அருண் பிரபு திரட்டி திரட்டி இருக்கும் இன்றைய உண்மைகள் அபாரமானவை. நமக்கே ஆர்வம் தூண்டுபவை .
குறிப்பிட்ட மேட்டுக்குடி சமூகங்களைச் சேர்ந்த மனசாட்சி உள்ள நண்பர்களாலேயே , படத்தில் சொல்வதெல்லாம் உண்மைதான் என்று ஏற்றுக்கொண்டார் கொள்ளும்படி இருக்கிறது என்பதுதான் அபாரம் .
மனைவி கதாபாத்திரத்தை பிராமணப் பெண் போல சித்தரிப்பதும் அந்த ஏழை அப்பாவி கிராம கோயிலில் குருக்கள் பேச்சும் அருண் பிரபுவின் சமன் செய்யும் புத்திசாலித்தனததையோ அல்லது தான் மேட்டுக்குடி தரப்பு போல் தனிப்பட்ட வன்மமாக இருக்க வேண்டும் என்பதையோ உணர்த்துகிறது. எது என்றாலும் பாராட்டுகள் .
படத்தில் காட்டப்படும் முருக பக்தியும் இன்றைய சூழலில் அவசியமான ஒன்று .
இப்படி ஒரு படத்தை தயாரித்த விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷனுக்கு பாராட்டுகள்; நன்றிகள்
சினிமா என்பது வியாபாரம்தான். ஆனால் அரிசி விற்றும் சம்பாதிக்கலாம் . கள்ளச்சாராயம் காய்ச்சியும் கூ ட்டிக் கொடுத்தும் சம்பாதிக்கலாம் . மனசாட்சியுடன் தரமான அரிசி விற்று சம்பாதிக்க நினைக்கிறது விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் .
விஜய் ஆண்டனி தனக்கே உரிய பாணியில் நடித்து இருக்கிறார். இவ்வளவு செய்பவனுக்கு என்ன எல்லாம் தெரியும் . அவன் மனது ஆழ்கடல் போல அமைதியாக ஆழமாக கனமாக அழுத்தமாக தடிமனாக இருந்தாலும், எப்போது கரையோரம் அலையடிக்க வைத்து அலற விட வேண்டும் என்பது அவனுக்கு தெரியும்.
அதை உணர்ந்து மென் மொழிகள் நிதானப் பேச்சு , கூர்மையான பார்வை என்று பொருத்தமாக நடித்து இருக்கிறார் . அது அவரது இயல்பான நடிப்புப் பாணிக்கு ஏற்றபடி இருப்பது அருண் பிபுவின் புத்திசாலித்தனம்.
விஜய் ஆண்டனியின் பின்னணி இசையும் பாடலிசையும் கூட சிறப்பாக கனமாக இருக்கிறது .
ஷெல்லி காலிஸ்ட் டின் ஒளிப்பதிவு கிராண்ட் ஆகவும்காட்சிகலின் சூழல் மற்றும் நோக்கத்துக்கு பொருத்தமாகவும் இருக்கிறது .
கட்டுப்பெட்டியாக இருந்து குடும்பத்தின் ஆணாதிக்க மனோபாவத்தால்- பெண் வெறுப்பு குணத்தால் புயல் கடந்த பூமியான ஒரு பெண் இப்படி இருப்பாள். அப்படியே பிரதிபலிக்கிறார் மனைவியாக வரும் திருப்தி ரவீந்திரா .
வெடவெட தோற்றம், காற்றின் போக்கில் செல்லும் பலவீனப்பட்ட இலை போன்ற நடை , ஏலியன் போல பெரிய மண்டை , முட்டைக் கண்கள் , கன்னமும் வாயு கழண்டு விழுந்து விடுமோ என்பது போன்ற வாய், தாவாய் என்று… அவரை செலக்ட் செய்தது மிகப் பொருத்தம் .
அரசியல் மேட்டுக்குடி ராஜ குருவாக அசத்தி இருக்கிறார் சுனில் கிருபளானி எனப்படும் காதல் ஓவியம் கண்ணன் . பெயர் மூலம் ஓர் அரசியல்வாதியை நினைவுபடுத்தினாலும் வெகு காலம் இந்த வேலை பார்த்து மறைந்த ஒருவரின் வாரிசாக இப்போது தனது திராவிடம் அரசியல் அடிமைகள் மூலம் காரியம் சாதிக்கும் ஒருவர்.. அவர்களை ஞாபகப் படுத்தும் கேரக்டரில் அவர் அப்படி பொருந்துகிறார் .
பெண் அமைச்சர் பாராளுமன்றத்தில் வன்மமாக முழங்குவதை ஒரு காட்சியாக வைக்காமல் விட்டுவிட்டார்களே என்ற குறையை அல்லது சூழலை தீர்க்கும்படி சிறப்பாக இருக்கிறார் கிரண் ரத்தோர் , பின்னணிக் குரலும பொருத்தம் .
காரணம் எதுவாக இருந்தாலும் இப்படி ஒரு படத்தை இந்த அளவுக்கு அனுமதித்த சென்சாருக்கு நன்றி பாராட்டுக்கள் .
இன்றைய திராவிடம் கேள்விக் கூறியதாக கேலிக்குரியதாக போய்க் கொண்டிருந்தாலும் அந்தக் காலக்கட்டத்தில் அது ஏற்படுத்திய சரியான அரசியல் தாக்கம் நேர்த்தியாகப் பயன்படுத்தியதும் மேட்டிமைத் தனம் . அந்த ஏரியாவிலும் அதோடு அப்யங்கர் சீனிவாச சாமியின் சாதி ஆணவத்தை சொல்லும் வசனங்களும் அருமை
ஆனால் எதைச் சொல்ல வேண்டும் என்று தெரிந்த அளவுக்கு எப்படி சொல்ல வேண்டும் என்ற புரிதல் படக் குழுவுக்கு இல்லை .
நாம் சொல்வது, நாம் யாருக்கு சொல்கிறோமோ அவர்களுக்கு புரியும்படி சொல்ல வேண்டும். யாருக்கு எதிராகச் சொல்கிறோமோ அவர்களுக்குத்தான் முழுசாகப் புரியும் என்ற வகையால் பலன் யாருக்கு?
நல்ல ஆங்கிலம் தெரியாமல் இந்தப் படத்தை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது . யதார்த்தம் என்ற பெயரில் வெகு ஜன ரசிகனின் கண்ணை இப்படி கட்டாமல், டெக்னிகல் வார்த்தைகளை மட்டும் வைத்து தமிழில் பேச வைக்கலாம் . என்னமோ தப்பு நடக்குது என்ற ரசிகனின் தோராயப் புரிதல் இந்தப் படத்தின் வெற்றிக்கு உதவாது .
பொதுவாக கதை சிம்பிளாக இருந்தால் திரைக்கதை கிம்மிக்ஸ் , மாத்தி யோசி வகை காட்சிகள் , வித்தியாசமான வசனங்கள், சுவையான குணாதிசய சித்தரிப்புகள் என்று சொல்லலாம். வேண்டும் .
கதையே புதுசு , கொஞ்சம் காம்ப்ளிகேடட் ஆனது என்றால், வேம்பு மாதிரி நல்ல பிள்ளையாய் சமத்தாய் சொன்னதை மட்டும் செய்து விட்டு மட்டும் போக வேண்டும் .
அதே போல திரைக்கதையில் வேம்புவின் கதாபாத்திரம் ஒரு நிலையில் பத்து சீன் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் போல ஓரமாக நின்றது கொடுமை . அதை வைத்து நல்லவிதமாக சித்தரித்தும் கூட வீடுகட்டி விளையாடலாம் . சாதியாவது மதமாவது . மனுஷன் மனுஷன் தானே . எந்த சமூகத்தில் இருந்தாலும் அப்பாவிப் பெண்கள் தாழ்த்தப்பட்டவர்கள்தானே .
இன்னொன்று….. ஆரம்பத்தில் அசத்தும் அதீத விவரணைகள் ஒரு நிலையில் அயற்சியை உண்டு பண்ணுகின்றன . அருவியில் அது ஒர்க் அவுட் ஆனது . காரணம் அந்த பெண் கதாபாத்திரம், அதன் வித்தியாச குணாதிசயம் காரணமாக ஒரு டிரைவ் இயல்பாகவே இருந்தது . LAG கூட BUILD UP ஆக மாறியது .
ஆனால் சக்தித் திருமகன் அப்படி அழ. அறிவின் வழியாக இயக்கப்படும் உணர்வின் விளையாட்டு . இதில் டிரைவ் எல்லாம் தானா வராது . நாம்தான் ஜாக்கி போட்டுத் தூக்கணும் .
ஒரு காட்சியை அல்லது ஒரு செக்மெண்டை படத்தின் ஆரம்பத்தில் வைத்தால் எவ்வளவு நேரம் எவ்வளவு விலாவாரியாக வைக்க வேண்டும் . இடைவேளைக்கு முன்போ வைத்தால் எப்படி சுருக்க வேண்டும் . இடைவேளைக்குப் பிறகு எப்படி மூச்சு வாங்கலாம் . . அதுவே கிளைமாக்ஸ் பக்கம் என்றால் எப்படி நறுக்குத் தெறிக்க வேண்டும் என்பது முக்கியம் .
படத்தின் ஆரம்பத்தில் சொல்லும் அதே வேகத்தில் கடைசிவரை வைத்தால் எப்படி? நச்சென்று நாலு விஷயம் போதும் .
ஆரம்பத்தில் எடிட்டிங்கில் ஆர்டர் மட்டும் செய்த காட்சிகளை செதுக்காமல் அப்படியே திரைக்கு அனுப்பி விட்டார்களோ என்ற எண்ணத்தை சில காட்சிகள் அதுவும் இரண்டாம் பாகத்தில் ஏற்படுத்துவது சோகம் .
படத்தின் முடிவு மேக வெடிப்பு போன்ற பாய்ச்சல் .
சக்தித் திருமகன் … திருமகன் இருக்கிறார் , சக்தி எங்கே?