இன்ஃபினிட்டி மற்றும் லோட்டஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், மீனாட்சி சவுத்ரி, ராதிகா, முரளி சர்மா நடிப்பில் பாலாஜி குமார் இயக்கி இருக்கும் படம் கொலை .
பிச்சைக்காரன் 2 படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய் ஆண்டனிக்கு வரும் படம் இது.
இதற்கு முன்பு விடியும் முன் என்ற நியோ நாய்ர் கிரைம் திரில்லர் படத்தை இயக்கியவர் பாலாஜி குமார் . (NEO NOIR என்றால் இருட்டு மற்றும் மர்மங்களின் ஆளுமை கொண்டது என்று பொருள்) 2013 ஆம் ஆண்டில் வெளியான அந்தப் படத்தின் மேக்கிங் பெரிதாக சிலாகிக்கக்கப்பட்டது
அதன் பிறகு BMW கார் உட்பட சில ராயலான கம்பெனிகளுக்கு விளம்பரப்படம் எடுத்த இவர், இயக்கி இருக்கும் இரண்டாவது படம் இது .
விடியும் முன் படத்தில் தனக்கு துணை நின்ற ஒளிப்பதிவாளர் சிவா குமார் விஜயன், இசை அமைப்பாளர் கிரிஷ் கோபால கிருஷ்ணன் ஆகியோருடன் இந்த ‘கொலை’யைச் செய்திருக்கிறார் பாலாஜி குமார் .
ஒரு கொலை , அதை விசாரிக்க வரும் இரண்டு அதிகாரிகள் ஒருவர் ஆண் .. விஜய் அன்டனி. இன்னொருவர் பெண்… ரித்திகா சிங், இருவருக்குள் நடக்கும் எலியும் பூனையும் விளையாட்டையும் மீறி , கொலையைச் செய்தது யார் எப்படி ஏன் ? யார் மேல் எல்லாம் சந்தேகம் என்ற வகையில் விரியும் கதையாம் இது .
அட்டகாசமான அழுத்தமான ஷாட்கள், மயக்கும் இருள்- ஒளிப் பயன்பாடு , வண்ண ஆளுமை என்று படத்தின் முன்னோட்டம் மிரட்டுகிறது .
ஒரு மாதிரி ராயலான சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் வித்தியாசமான தோற்றத்தில் முற்றிலும் புதிய விஜய் ஆண்டனி !
புதிய பறவை படத்தில் இடம் பெற்ற காவியப் பாடலான பார்த்த ஞாபகம் இல்லையோ பாடலை இன்னும் மெதுவான மெலடியாக்கி ஷ்ரேயா கோஷல் பாட, மயக்கும் சிவப்பு வண்ண ஆளுமையில் அந்தப் பாடலை விழிகள் விரியும்படி படமாக்கி இருக்கிறார் பாலாஜி குமார் .
படம் பற்றிப் பேசும் இயக்குனர் பாலாஜி குமார் “விடியும் முன் படத்துக்குப் பிறகு ஒரு படம் இயக்க தயார் ஆனேன். சில காரணங்களால் அது மாறியது . விளம்பரப்படங்கள் எடுத்தேன் .
கொலை மற்றும் விசாரணை தொடர்பான படங்கள் எத்தனையோ வருகிறது . அது பற்றிய ஓர் ஆழமான சிந்தனையில் சட்டென்று பிளாஷ் ஆகிக் கற்பனையில் வந்தது இந்தக் கதை .
நண்பர் ஒருவர் மூலமாக விஜய் ஆண்டனியிடம் சொல்ல, கதை பிடித்துப் போய் அவர் இன்பினிட்டி நிறுவனத்திடம் அனுப்பினார். லோட்டஸ் அவர்களோடு இணைந்து தயாரித்தது . கொலை என்ற அழுத்தமான பெயரை இதுவரை ஏன் எந்த படத்துக்கும் வைக்க வில்லை என்பதே எங்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது
பார்த்த ஞாபகம் இல்லையோ பாடலின் சிறப்பு அறிவேன் . அதற்கு களங்கம் இல்லாமல் ரீமிக்ஸ் செய்து இருக்கிறோம்
ரசிகர்களுக்கு புது வித அனுபவம் தர வேண்டும் என்பதற்காக நார்மலாக நீங்கள் பார்ப்பதில் இருந்து வித்தியாசமான புலன் விகிதத்தில் ( ASPECT RATIO) இந்தப் படத்தை எடுத்துள்ளோம்
இதற்காக போடப்பட்ட செட் மட்டுமே மூன்று கோடி ரூபாய் . படம் ரசிகர்களுக்குப் புது அனுபவமாக இருக்கும் ” என்றார் .
ஜூலை 21 ஆம் நாள் முதல் திரையில் நடக்கிறது கொலை !