எய்ன்ஃபாக் ஸ்டுடியோஸ் சார்பில் பிரதாப் கிருஷ்ணா , மனோஜ் குமார், ஆகியோர் தயாரிக்க வரலக்ஷ்மி, சந்தோஷ் பிரதாப், ஈஸ்வரி ராவ், சார்லி, சென்றாயன் நடிப்பில்
தயாள் பத்மநாபன் தனது டி பிக்சர்ஸ் மூலம் சேர்ந்து தயாரித்து, எழுதி இயக்கி இருக்கும் படம் கொன்றால் பாவம் .
விழுப்புரத்தில் பிறந்து பெங்களூர் போய் கன்னட சினிமாவில் நுழைந்து, பதினெட்டு கன்னடப் படங்களையும் ஒரு தெலுங்குப் படத்தையும் இயக்கி விட்டு, பனிரெண்டு படங்களுக்கு கதை திரைக்கதை வசனமும் இரண்டு படங்களுக்கு திரைக்கதையும் எழுதி விட்டு, இரண்டு படங்களை தயாரித்தும் விட்டு …..
தனது படங்கள் நன்றாக இருந்தும் விருதுப் பரிந்துரைகளில் புறக்கணிக்கப்படுவது கண்டு கோர்ட்டுக்குப் போய் நீதி பெற்று, தேசிய விருதுகளில் நடைபெறும் வரம்பு மீறல்களைத் தட்டிக் கேட்டு..கர்நாடகாவில் உள்ள மல்டிப்ளெக்ஸ் தியேட்டர்களில் டிக்கட் விலை 120 ரூபாய்க்கு மேல் போகக் கூடாது என்று கர்நாடக மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்திப் போராடி ….

இப்படி பல சாதனைகளை செய்து விட்டு தனது தாய்மொழி சினிமாவான தமிழில் இப்போது முதல் படத்தை இயக்கி இருக்கிறார் இவர் . அவரை வாழ்த்தி சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுப்போம்.
தொண்ணூறுகளில் நடக்கும் கதை .
தருமபுரி மாவட்டத்தின் வறண்ட பகுதியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வீடுகள் இருக்கும் ஒரு உள்ளடங்கிய கிராமத்தில் வறுமை காரணமாக தங்களுக்கு இருந்த புஞ்சை நிலத்தையும் அடமானம் வைத்து விட்டு , தங்கள் நிலத்திலேயே கூலி வேலை செய்தபடி, அடமானம் வாங்கியவன் (சுந்தர்ராஜன்) கொடுக்கும் பலவித அவமானங்களையும் பொறுத்துக் கொண்டு வாழும் ஒரு எளிய – வறிய குடும்பம் .
அப்பா (சார்லி) , அம்மா( ஈஸ்வரி ராவ்) மகள் (வரலக்ஷ்மி)
வீட்டில் பிரசவம் பார்ப்பதையும் அம்மாவின் ஜாடையில் ஆண் குழந்தை பிறந்தால் அதிர்ஷ்டம் என்று சொல்லி மகிழ்வதையும் புனிதப் பணியாகச் செய்யும் அந்தப் பெண்மணிக்கு மனசுக்குள் ஒரு தீரா இழப்பும் வருத்தமும் உண்டு.

மாற்ற முடியா வறுமையை எரிச்சலோடு ஏற்றுக் கொண்டு வாழும் அந்த வீட்டுக்கு வரும் ஒரு குடுகுடுப்பைக்காரன் , வீட்டுக்கு மகாலட்சுமி வரப் போவதாகக் கூறுகிறான்.
அந்தப் பகுதி பணக்காரர் நஞ்சே கவுடா என்பவர் வீட்டில் பணமும் நகையும் கொள்ளை அடிக்கப்பட்ட நிலையில் அது குறித்து போலீஸ் விசாரணையும் நடக்கிறது
இந்தச் சூழலில் அந்தப் பகுதிக்கு புதிதாக வரும் இளைஞன் (சந்தோஷ் பிரதாப்) அவர்கள் வீட்டில் ஒருநாள் தங்கிக் கொண்டு போக அனுமதி கேட்கிறான். அவர்களும் சம்மதிக்க, தங்குகிறான் . அவனிடம் பல்லாயிரம் ரூபாய் பணமும் நிறைய நகையும் இருப்பதை அவனே காட்டி, ” நானும் வறுமையில்தான் இருந்தேன். இப்போது இப்படி சம்பாதித்து இருக்கிறேன். நீங்களும் வறுமையை வெல்வீர்கள் . கவலை வேண்டாம்” என்று நம்பிக்கை ஊட்டுகிறான்.
அதே நாளில் நில அடமானம் பெற்றவன் , பெட்டிக்கடைக்காரன் ஆகியோரின் பேச்சுக்களால் மனம் உடையும் குடும்பம் , உடனடியாக வறுமையை வெல்ல , எங்கிருந்தோ வந்த அந்த இளைஞனை கொலை செய்ய முடிவு செய்கிறது .

புல்லாங்குழல் விற்கும் ஒரு மாற்றுத் திறனாளி (சென்ட் ராயன்) , ஒரு டீக்கடைக்காரர் ( சுப்ரமணிய சிவா) , கொள்ளையடித்தவனை தேடும் போலீசார் ( கவிதா பாரதி, தங்கதுரை) ஆகியோரும் கதைக் களத்தில் வினை புரிகின்றனர்.
நடந்தது என்ன ? அந்தக் குடும்பம் கற்றது ?என்ன பெற்றது என்ன? என்பதே படம்.
ரூபர்ட் புரூக் என்ற இங்கிலாந்து கவிஞர் மற்றும் நாடக ஆசிரியர் எழுதிய சோல்ஜர் என்ற கதையை தழுவி கன்னட எழுத்தாளர் மோகன் பப்பு என்பவர் எழுதிய நாடகத்தை வைத்து,
தயாள் பத்மநாபன் கன்னடத்தில் ஆகரால ராத்திரி என்ற பெயரிலும் தெலுங்கில் அனகனக ஓஅத் திடி என்ற பெயரிலும எழுதி இயக்கி, இரண்டு மொழிகளிலும் வெற்றிகளையும் விருதுகளையும் பெற்ற படத்தை தமிழுக்கு ஏற்ற மாற்றங்களோடு அவரே எழுதி இயக்கி இருக்கிறார் .
இந்தப் படம் பதினான்கு நாட்களில் எடுக்கப்பட்ட படம் என்பது இன்னொரு சாதனை .
ஆனால் அப்படி குறைவான நாட்களில் எடுக்கப்பட்ட படம் என்பதற்கான எந்த அறிகுறியும் தெரியாத படமாக்கலில் தயாள் பத்மநாபனின் அனுபவமும் திறமையும் ஜொலிக்கிறது சபாஷ்

நாம் பார்க்க இருப்பது வழக்கமான படம் இல்லை என்பதை படத்தின் ஆரம்பத்திலேயே நிறுவும் வகையிலும் இயக்குனருக்கு பெரிய வெற்றி .
அப்படி ஓர் ஆரம்பத்தைக் கொடுக்கும் அசுனமா பறவை பற்றிய கதையே அசத்துகிறது . சுவாரஸ்யமான திரைக்கதை எழுதியதோடு நடிக நடிகையரிடம் வேலை வாங்கிய விதத்திலும் சிறப்பான இயக்கத்திலும் அசத்துகிறார் தயாள் பத்மநாபன்.
சிறுசிறு தவறுகள் இருந்தாலும் காலகட்டத்தை சரியாகப் பிரதிபலிக்கும் பின்புலத்தை அட்டகாசமாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர்.
இரண்டாம் முறை ஆட்சி அமைத்த எம் ஜி ஆர், தன் பங்குக்கு சாராயக் கடைகளைத் திறந்து விட்டதை லைட்டாக கிண்டல் அடிக்கும் காட்சியில் இயக்குனரின் குறும்பு தெரிகிறது
மின்சாரம் இல்லாத வீட்டின் உள்பகுதியின் இரவைக் காட்ட இன்னும் கொஞ்சம் ஒளி அளவைக் குறைத்து இருக்கலாமா என்ற உணர்வு ஏற்பட்டாலும் செழியனின் ஒளிப்பதிவு, காட்சிகளும் நடிகர்களும் தரக் கூடிய உணர்வை சிந்தாமல் சிதறாமல் ரசிகனுக்குக் கொண்டு வந்து சேர்க்கிறது . குளோசப்களில் ஜாலம் .

சாம் சி எஸ் ஸின் இசை பரபரப்பு, படபடப்புக் கூட்டுவதில் படத்துக்கு பெரும் துணையாக இருக்கிறது .
பண்பட்ட நடிப்பை சார்லியும் , கண்ணியமான நடிப்பை ஈஸ்வரியும், ஆவேசமான நடிப்பை வரலக்ஷ்மியும் இயல்பான நடிப்பை சந்தோஷ் பிரதாப்பும் வழங்கி உள்ளனர் .
கவிதா பாரதி சிறப்பு, சுப்ரமணிய சிவா, சென்ட்ராயன் ஆகியோரும் கவனிக்க வைக்கின்றனர்
முதல் காட்சியில் சாமியாராக மனோபாலா பேசுகையில் இடையில் நீண்ட நேரம் ஈஸ்வரி ராவும் வரலக்ஷ்மியும் பேசிக் கொண்டு இருக்கும்போது, மனோபாலாவின் பேச்சு தொடர்ந்து மென்மையாக ஒலிப்பது போல காட்டாமல் சைலன்ட்டாக விட்டது ,

அத்தனைக்கும் ஆசைப்படு ஆனால் அளவோடு ஆசைப்படும் என்ற வசனம் ( அத்தனைக்கும் ஆசைப்பட்டால் அப்புறம் அது எப்படி அளவோடு ஆசைப்படுவதாக இருக்கும் ? அளவோடு ஆசைப்படுபவன் எப்படி அத்தனைக்கும் ஆசைப்பட முடியும். அத்தனை விசயங்களிலும் அளவோடு ஆசைப்படுவதே அளவுக்கு மீறிய ஆசைதானே?)
ஒரு இடத்தில் நாயகன் சந்தோஷ் பிரதாப் உத்தேசம் என்ற வார்த்தையை தமிழுக்குப் பொருத்தமில்லாத இடத்தில் சொல்வது
கிளைமாக்சில் கலாச்சார அதிர்ச்சியாக சொல்லப் படும் ஒரு விசயம் …. இப்படி சில குறைகள் தெரிந்தாலும்
மனிதர்களின் குணாதிசயங்களையும் சூழலையும் எளிமையையும் இயல்பாக நிதானமாக அழுத்தமாக காட்டி முதல் பாதி படம் நம்மையும் திரைக்குள் இழுத்துக் கொள்ள ,
இரண்டாவது பகுதியில் ஜெட் வேகம் எடுக்கும் படம் ஒரு நிலையில் நம் இதயத்துடிப்பு நம் காதுக்கே கேட்கும் படபடப்பைக் கொடுத்து அதன்பிறகும் வெகுஜன ரசிகர்களால் யூகிக்க முடியாத ஓர் அதிரடி கிளைமாக்சை கொடுத்து அதிரவும் நெகிழவும் வைக்கிறது .

பணம், நகை, கொள்ளை போன்றவை நடக்கும் காட்சிகள் மூலம் தொடர்பான் நேர்மைக்கு எதிரான உணர்வுகளை பலப்படுத்தும் படங்கள் வந்து கொண்டிருக்கும் இந்தச் சூழலில் இந்தப் படம் முடியும் போது,
‘நேர்மை தவறினா நம்ம கணக்குகளுக்கும் மீறி இப்படி எல்லாம் பிரச்னை வர வாய்ப்பு இருக்கா? ஐயோ சாமி.. பேசாம நேர்மையவே வாழ்ந்துடலாம்’ என்ற உணர்வை தோற்றுவிக்கும் ஒரு படத்தைக் கொடுத்த காரணத்துக்காகவே, தயாள் பத்மநாபன், பிரதாப் கிருஷ்ணா, மனோஜ் குமார், ஆகியோரை கட்டித் தழுவிப் பாராட்டலாம் .
மொத்தத்தில்,
கண்ட கண்ட படங்களையும் பார்க்கும் பாவம் … இந்தப் படம் பார்த்தால் தீரும்.