நடிகர் சிவகார்த்திகேயனின் எஸ் கே புரொடக்ஷன்ஸ் , லிட்டில் வேவ் புரடக்ஷன்ஸ் உடன் இணைந்து தயாரிக்க, சூரி மற்றும் அன்னா பென் நடிப்பில் , இதற்கு முன்பு கூழாங்கல் படம் மூலம் பேசப்பட்ட பி எஸ் வினோத் ராஜ் இயக்கி இருக்கும் படம்.
கொட்டுக்காளி என்றால் அடங்காத விடாப்பிடியான நபர் என்று பொருள்.
முறைமாமன் (சூரி), உரிமை மற்றும் ஆதிக்கத்தின் அடிப்படையில் கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்படும் ஒரு பெண் ( அன்னா பென் ), வேறொருவனைக் காதலித்து அவனைத்தான் கல்யாணம் செய்து கொள்வேன் என்று பிடிவாதம் பிடிக்கிறாள் .
அவள் மனதை மாற்றவும் அந்தக் காதலால் குடும்பத்துக்கு வரும் அவப் பெயரை (?) ‘ சரி செய்யவும்’ அவளுக்குப் பேய் பிடித்து இருப்பதாக சொல்லி பூசாரி மூலம் அதை எடுத்து விட்டால் எல்லாம் ‘சரியாகி’ விடும் ;அதாவது அந்தக் காதலை அவள் மறந்து விடுவாள். சூழல் அழுத்தம் காரணமாக மாமனைக் கல்யாணம் செய்து கொள்ள சம்மதிப்பாள் என்று ஊர் வழக்கப்படி எண்ணி அவளை பூசாரி கம் வைத்தியரைப் பார்ப்பதற்கு,
அந்த முறைமாமன் , அவன் அப்பா, இரு சகோதரிகள், அவளது அம்மா , அப்பா , சில உறவினர்கள் எல்லோரும் ஷேர் ஆட்டோவில் அழைத்துப் போக குல தெய்வம் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு அவர்கள் பயணிக்க, நடக்கும் நிகழ்வுகளும் உணர்வுகளுமே இந்தப் படம் .
வழக்கமான கமர்ஷியல் சினிமாவுக்கான இலக்கணங்களைப் பற்றிக் கவலைப்படாமல் உலகப் பட விழா சினிமாக்கள் பாணியில் திரை மொழியில் படம் செய்திருக்கிறார் வினோத் ராஜ் .
மேலே சொன்ன கதையை ஒவ்வொரு இதழ் விரிப்பாக அவர் அவிழ்க்கும் விதம் மேட்டிமைத் தன்மையோடு இருக்கிறது. கண் மண் தெரியாமல் அடிக்கும் காட்சி படமாக்கலின் உச்சம். நிஜத்தில் நடப்பதை அருகில் இருந்து பார்க்கும் உணர்வு .
குரல் நலம் பாதிக்கப்பட்ட ஆணாதிக்க ஆணவ முறைமாமன் கேரக்டரில் சூரி . மேலே சொன்ன முக்கியக் காட்சியில் குரலின் தன்மையை மெயின்டைன் செய்வதில் பிசகி இருந்தாலும் மொத்தத்தில் சிறப்பு.
கொட்டுக்காளி கேரக்டருக்கு ஆர்டர் கொடுத்து செய்த மாதிரி இருக்கிறார் அன்னா பென். படத்தில் அவர் பேசுவது பத்து நொடிகளுக்குள் மட்டுமே . அதுவும் அவருக்குப் பேச வராது என்று ரசிகர்கள் நினைத்து விடக்கூடாது என்பதற்காக .
எல்லாருமே இயல்பாக சிறப்பாக நடித்துள்ளனர் . சூரியின் சிறிய தங்கையாக நடித்து இருப்பவர் அச்சு அசல் கிராமத்து யதார்த்த வார்ப்பு. பேரழகி கூட
இசையே இல்லாத படம். ஒலிகள் , பேச்சு இவையே இசையின் இடத்தில்!
சுரேன் ஜி மற்றும் அழகிய கூத்தனின் ஒலி வடிவமைப்பு அருமை
படத்தை முடித்த விதம் தரம் .
தேவைக்கு மேல் நீளும் நீள நீளமான பயண ஷாட்கள், வெவ்வேறு கோணங்களில் அவை மேலும் மேலும் நீள்வது , நேரத்தைக் கடத்தும் முயற்சியாக தெரிவது பெரும் குறை .
விளைவாக ரசிகனுக்கு கிடைக்க வேண்டிய கால அளவு உணர்வு ரொம்பவும் நீண்டு சலிப்பை ஏற்படுத்துகிறது .
அதைச் சலிப்பின்றி கடந்தால் ஒரு நல்ல படம் பார்த்த உணர்வு உறுதி