8 ஸ்டுடியோஸ் பிலிம் சார்பில் லோக பத்மநாபன் தயாரித்து இயக்கி, இசை அமைத்து , பாடல் எழுதி கதையின் நாயகனாக நடிக்க, கதாநாயகியாக அம்ச ரேகா, இவர்களுடன் ஜெய் பீம் மொசக்குட்டி, மணிமாறன் , ரெஜினா நடிப்பில் வந்திருக்கும் படம்
ஆரம்பத்தில் ஒரு கொடூரமான அரிவாள் வெட்டுக் கொலை.
செம்பியன் என்ற ஊரில் ஆண்ட சாதி இளைஞன் ஒருவன் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாதேவி என்ற பெண்ணைக் காதலிக்கிறான். சாதி வெறி பயம் காரணமாக ஆரம்பத்தில் அவள் மறுத்தாலும் பின்னர் ஏற்கிறாள். ஆனால் அவனுக்குச் சொந்தக்காரர்களாக இருக்கும் நபர்கள் தாழ்த்தப்பட்ட சமூக ஆட்கள் தங்கள் எதிரே வந்தாலே திட்டும் அளவுக்கு சாதி வெறியோடு இருக்கிறார்கள்
இந்த நிலையில் காதலன் வரம்பு மீற, காதலி கர்ப்பமாகிறாள் .
ஆரம்பக் கொலைக்கு பதிலாக ஓர் ஆண்ட சாதி அரசியல் நபர் கொல்லப்படுகிறார்.
கர்ப்பமான காதலி திருமணம் செய்து கொள்ள வற்புறுத்த, ” கருவைக் கலைத்து விட்டு , உன் அப்பா விருப்பப்படி படி . நீ படித்த பின் திருமணம் செய்து கொள்ளலாம்” என்கிறான் அவன்..கருவைக் கலைக்க அவள் மறுக்க, விஷயம் தெரிந்த ஆண்ட சாதி அரசியல் பலம் உள்ள ஆட்கள் அவளைக் கற்பழித்துக் கொல்ல முயல ,
நடந்தது என்ன என்பதே படம் .
படமாக்கலில் குறைகள் இருந்தாலும் இடைவேளைக்கு முன்பு வரை மிக இயல்பாக செல்லும் படம் பின்னர் தடம் மாறுகிறது .
சற்றே போதாமைகளுடன் இயல்பாக நடிக்கிறார் லோக பத்மநாபன்.
நாயகி அம்ச ரேகா தனுஷ் மாதிரி . பார்த்த உடனே எல்லாம் பிடிக்காது . ஆனால் பாக்கப் பாக்க பிடிக்கிறது .
ராஜ சேகரின் ஒளிப்பதிவில் கிராமிய சூழல் படத்தில் சிறப்பாக இருக்கிறது . ராஜேந்திர சோழனின் படத் தொகுப்பு, உள்ளதை ஒழுங்காக பரிமாறி இருக்கிறது
லோக பத்மநாபனின் பின்னணி இசை கவனிக்க வைக்கிறது .
நாயகியின் அப்பாவாக நடிப்பவர் உணர்ச்சிகரமாக நடிக்கிறார் .
ஆண்ட சாதி அரசியல்வாதியாக வரும் மணிமாறன் வில்லத்தனம் கட்டுகிறார் . மொசக்குட்டி சற்றே சிரிக்க வைக்கிறார்
செம்பியன் மாதேவி என்பது ஒரு வரலாற்றுக் கதாபாத்திரம் . இப்படி சம்மந்தா சம்மந்தம் இல்லாமல் செம்பியன் என்ற ஊரைச் சேர்ந்த மாதேவி என்ற பெண் என்று சொல்லிக் கொண்டு இந்தப் பெயரில் இப்படி படம் எடுத்து விட்டால், நாளைக்கு செம்பியன் மாதேவி வரலாற்றை யாராவது படமாக எடுத்தால் அதற்கு என்ன பெயர் வைப்பது ?
இத்தனைக்கும் எழுதி இயக்கி நடித்திருப்பவரே நாயகியை படத்தில் ”மாதவி…. மாதவி….” என்றுதான் அழைக்கிறார் . ”மாதேவி…..” என்று ஓர் இடத்தில் கூட அழைக்கவில்லை. அப்புறம் எதற்கு இந்தப் பெயர்?
எல்லா வகையிலும் இன்னும் சிறப்பான எழுத்தும் ஆக்கமும் தேவைப் படும் படம் .