ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் , அமோகோஸ் கிரியேஷன்ஸ் சார்பில் சுனியல் நரங், புஸ்குர் ராம் மோகன் ராவ், அஜய் கைக்கலா தயாரிப்பில் நாகர்ஜுனா, தனுஷ், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சேகர் கம்முலா இயக்கி இருக்கும் படம்.
நாட்டின் கனிம வளங்களை மக்களுக்கு பலன் தருவதாக நேரடியாக ஆக்குவதற்குப் பதில் அவற்றை அரசியல்வாதிகள் மூலம் தனியாருக்கு கொடுத்து அவர்களிடம் இருந்து அரசே வாங்கி மானிய விலையில் மக்களுக்கு கொடுத்தால் பெருமுதலாளிகளுக்கு லாபம் . அரசியல்வாதிகளுக்கும் பெரும் பங்கு . மக்களிடமும் நல்ல பெயர்
அப்படி வங்கக் கடலில் பெருமளவு கண்டு பிடிக்கப்படும் புதிய எண்ணெய்க் கடலை, தங்களுக்குள் பிரித்துக் கொள்ள முடிவு செய்கிறார்கள் ஒரு தொழில் அதிபரும் (ஜிம் சார்ப்) ஓர் அரசியல்வாதியும் ( ஹரீஷ் பெராடி)
இதில் பலபேருக்கு பங்கு போக வேண்டி இருக்க, அந்தத் தொகை ஒரு லட்சம் கோடியாக இருக்க, அதை சிக்கல் இல்லாமல் அனுப்புவது பெரும் சவாலாக இருக்கிறது .
நல்லது செய்த காரணத்தால் ஜெயிலில் அநியாயமாக தண்டனை பெற்று வரும் தீபக் என்ற சி பி ஐ அதிகாரியை ( நாகர்ஜுனா) மண்டையைக் கழுவி விடுதலை வாங்கித் தந்து அழைத்து வருகிறார் தொழில் அதிபர்
பணத்தின் மதிப்பு படிப்பறிவு ஏதும் இல்லாத நான்கு பிச்சைக்காரர்களை கண்டுபிடித்து அவர்கள் பெயரில் கம்பெனி ஆரம்பித்து பினாமி ஆக்கி அவர்கள் மூலம் அனுப்பினால் தொழில் அதிபருக்குப் பிரச்னை இல்லை என்கிறார் தீபக்.
கொண்டு வரப்பட்ட நான்கு பிச்சைக்காரர்களில் ஒருவன் தேவா (தனுஷ்)
ஒவ்வொருவர் மூலமும் பணம் அனுப்பப்பட்டு போய் சேர்ந்த பிறகு பிச்சைகாரர்களை உயிரோடு அனுப்பி விட வேண்டும என்கிறார் கொஞ்சம் நல்ல கெட்டவரான தீபக் .
ஆனால் ஒவ்வொருவரையும் கொன்று விட திட்டமிடுகிறது தொழில் அதிபர் டீம் . இருவரைக் கொன்ற நிலையில் தேவா தப்பிக்கிறான் .
எல்லோரும் அவனைத் துரத்த ,
வேண்டாத லக்கேஜாக , காதலனால் ஏமாற்றப்பட்டு தேவாவிடம் சிக்கி அதன் மூலம் வில்லன் கோஷ்டியிடம் மாட்டி தேவாவோடு சேர்ந்து கிளைமாக்ஸ் வரை வசனம் பேசும் மந்தமான கேரக்டரில் ராஷ்மிகா மந்தனா .
ஏமாயிந்திரா என்பதே குபேரா .
இரண்டு ஹீரோக்கள் இருக்கும் படத்தில் முதல் அரைமணி நேரம் யாருமே இல்லாமல் கதை சொல்கிற சேகர் கம்முலாவின் கெத்து பாராட்டுக்குரியது. கதையை துவங்கி கொண்டு போகும் விதம் , தெலுங்கு வாடையையும் மீறி அசத்தும் கிறிஸ்டல் கிளியர் வசனங்கள் , நிகேத் பொம்மியின் அசத்தலான ஒளிப்பதிவு , கடல் காட்சிகள், ஜிம் சார்பின் காஸ்மாபாலிட்டன் நடிப்பு என்று அசத்தலோ அசத்தல் . இந்தப் படம் அப்படியே போயிருக்கக் கூடாதா என்று இப்போது ஏங்கி அழுகிறது மனசு .
சுமார் அரை மணி நேரம் கழித்து நாகர்ஜுனா என்ட்ரி. சிப்பாய்களை வைத்தே சிலுப்பிக் கொண்டு போகும் படம் ‘கிங்’ வந்த உடன் அசத்தப் போகிறது என்றால் மாறாக ஆட்டம் காண்கிறது . ஆனா அப்போ அது தெரியல.
வரட்டும்ய்யா எங்க தனுஷ் . அப்புறம் பாருங்க ஆட்டத்தை என்று ஆர்வத்துடன் உட்கார்ந்தால் அவர் வந்த பிறகும் செல்ப் எடுக்கவில்லை. மாறாக ரிவர்ஸ் கியர் விழுந்து விட்டது .
தனுஷ் நன்றாக நடிக்கவில்லை என்றால்தான் அது செய்தி. நடிப்பு அரக்கன் இந்தப் படத்திலும் அசத்தி இருக்கிறார் . ஒரு பிச்சைக்காரனாகவே வாழ்ந்திருக்கிறார் . சின்னச் சின்ன உணர்வுகள் , உடல் மொழிகள் எல்லாம் அபாரம் .
நாகர்ஜுனா ஆரம்பம் அழகு . போகப் போக கேரக்டர் பர்சனாலிட்டி எதுவும் நிற்கவில்லை .
தீபாவளி சேல்ஸ் ஜவுளிக்கடையில் அழுகாச்சி பொம்மையை சேலை கட்டி நிற்க வைத்தால் எப்படி இருக்கும்? அப்படி இருக்கிறார் ராஷ்மிகா மந்தனா . இதுதான் கதாபாத்திரம் என்றால் இதற்கு இன்னும் சிறப்பான நடிகைகள் ஆந்திராவிலேயே உண்டு . கேரக்டருக்கு ராஷ்மிகாவும் ராஷ்மிகாவுக்கு கேரக்டரும் பொருத்தமாக இல்லை.
அழகம்பெருமாள் , பக்ஸ் இவர்களை விடுங்கள் பாக்யராஜ் , நாசர் கூட ஜூனியர் ஆர்ட்டிசஸ்ட்டுகளுக்கு கொஞ்சம் மேலான கதாபாத்திரத்தில்தான் நடித்து இருக்கிறார்கள் . என்ன காரணமோ தெரியவில்லை.
தப்பிய தனுஷை துரத்தும் காட்சியில் பின்னணி இசையில் செப்படி வித்தை காட்டுகிறார் தேவி ஸ்ரீ பிரசாத்
ஆனால் அங்கேயே படம் தப்ப முடியாமல் சிக்கி விட்டது . மொத்தமான மூணு மணி நேரப்படம் தர வேண்டிய களைப்பில் பாதி இடைவேளையிலேயே வந்து விட்டது . காரணம் இடைவேளைக்கு முன்பான அந்த துரத்தல் படலமே அவ்ளோ நீளம் .
நல்லா யோசிச்சுப் பாருங்க .
அரசியல் பண அயோக்கியர்கள் … அவர்களிடம் சிக்கிக் கொண்ட சூழல் கைதியாக நாகர்ஜுனா … பிச்ச்சைக்காரனாக தனுஷ் .
இந்த மடுவும் மலையும் போது வெடித்துச் சிதறும் பாறைகள் போல அட்டகாசமான ரகளையான சென்சேஷனல் ஆன ஒரு பிளே . அதில் அர்த்தமும் கனமும். அதற்குத்தானே ஆசைப்படுவோம் ரசிக குமாரா?
ஆனால் யதார்த்தம் சொல்கிறேன் என்று இழுக்க ஆரம்பித்தார்கள் . அது யதார்த்தம் என்ற பக்கமும் சின்சியராக நிற்கவில்லை.
சினிமாக் கதையில் ஒரு சீரியல் என்பது போல ஒரு நிமிடத்தில் முடிய வேண்டிய விஷயம் பத்து நிமிடம் எடுக்கிறது.. பத்து நிமிடத்தில் முடிய வேண்டிய விஷயம் இருபது நிமிடத்தை சாப்பிடுகிறது
இப்படி ஒரு படத்துக்கு இன்டர்வல் எப்படி இருக்க வேண்டும் ? ஆனால் எக்ஸ்ட்ரா லக்கேஜ் ராஷ்மிகா தங்கி இருக்கும் லேடீஸ் ஹாஸ்டலில் தனுஷ் மயங்கி விழும்போதே படமும் மயங்கி விடுகிறது .
இரண்டாம் பாதியில் ஒரு காட்சியில் கோட் போட்ட தனுஷ் பிச்சைக்காரர்கள் மத்தியில் உட்காரும்போது விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் படம் ஞாபகம் வந்தது. பிடித்த படம் என்பதால் நமக்கு வந்த பிரம்மையாக இருக்கும் என்று பார்த்தால் போகப் போக அந்தப் படத்தை ஊரே ஞாபகப்படுத்திக் கொள்ளும்படி காட்சிகள் .
கடைசியில் வில்லனுக்கு தனுஷ் வைக்கும் அந்த டிமாண்ட்டைக் கூட இங்கே ஆக்ஷனில் வேறு மாதிரியாக செய்து அசத்தி இருக்கலாம் . ஆனால் குப்பை மேட்டுக்குக் கொண்டு போய் கொட்டி விட்டார்கள்.
அநேகமாக இந்தப் படத்தால் பிச்சைக்காரன் மற்றும் தெலுங்கில் பிச்சிகாடு ரீ ரிலீஸ் செய்யப்படக் கூட வாய்ப்பு உண்டு .
ஒரு ஆக்ஷன் படத்தின் திரைக்கதை என்பது போகப் போக விரிவடைய வேண்டும் , புரஜக்டர் மெஷினில் இருந்து கிளம்பும் குறுகிய ஒளி அளவு எப்படி போகப் போக எப்படி பெரிதாக விரிந்து பரவி திரையில் விழுகிறதோ அப்படி .
ஆனால் பிரம்மாண்டமாக பிரம்மாதமாக ஆரம்பித்து கடைசிவரை கவுன்ட் டவுனிலேயே போய் முடிகிறது குபேரா
மொத்தத்தில் குபேரா .. ஜிகினா ட்ரெஸ் மட்டும் போட்ட குசேலா
