எம் சினிமா புரொடக்ஷன் சார்பில் ஸ்ரீ விஷ்ணு தயாரிக்க, விதார்த், ஸ்வேதா டோரதி, விபின், சஹானா நடிப்பில் சாஜி சலீம் எழுதி இயக்கி இருக்கும் படம்.
கோவையில் இரவு நேரங்களில் பார்க்கும் எல்லோரையும் கொடூரமாகத் தாக்கிக் கொல்லும் ஒரு சைக்கோ. அந்த சைக்கோ தாக்கும் பலம் மற்றும் வேகம் பார்த்தால், தனி மனிதரால் இப்படி தாக்க முடியுமா என்று சந்தேகம் எழும் அளவுக்கு இருக்கிறது . ஒரு போலீஸ் டீமே அந்த சைக்கோவிடம் சிக்கிச் சின்னாபின்னமாகிறது .
அங்கு ஏ சி பி யாக இருக்கும் அரவிந்தின் (விதார்த்) காதல் மனைவிக்கு (ஸ்வேதா டோரதி) இருட்டு, தனிமை என்றாலே பயம் ஏற்பட்டு ஒரு நிலையில் மயங்கி விழும் நோய். (அக்ரோபோபியோவோ என்னவோ படத்தில் சொன்னார்கள். ஆனால் அக்ரோபோபியா என்றால் உயரத்துக்குப் பயப்படுவது) . குடும்பத்தினர் ஆதரவு இல்லாத நிலையில் அவளைத் தனியே விட்டால் அவளுக்கு ஆபத்து என்பது ஏ சி பியின் பிரச்னை. அவள் கருவுற்றும் இருக்கிறாள்.

குடும்பத்தின் ஆதரவு இல்லாமல் கல்யாணம் செய்து கொண்டு கோவை வந்து வாழும் இன்னொரு காதல் ஜோடி (, விபின்- சஹானா). குழந்தை இல்லாத அவர்களுக்கு ஒரு மருத்துவம் தொடர்பான பிரச்னை . அந்தப் பெண்ணுக்கு பார்டர் லைன் பர்சனாலிட்டி டிஸ்ஆர்டர் ( அதிக அதிர்ச்சியில் தன்னிலை மறந்து செயல்படுவது) என்ற நோய். .
இந்த மூன்று நூல்களையும் கட்டி அவிழ்த்து விளையாடும் விளையாட்டுத்தான் இந்தப் படம்.
இயக்குனர் வைத்திருக்கும் ஷாட்கள், ஞான சவுந்தரின் ஒளிப்பதிவு , எம் எஸ் பிரவீன் இசை மூன்றும் அட்டகாசமான கமர்ஷியல் திரைப்பட உணர்வைத் தருகின்றன. இந்த மூன்றுமே படத்தின் அகப் பெரும் பலம் . சும்மா சொல்லக் கூடாது படத்தைப் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் இவையே காரணம் .
அவ்வப்போது வேகம் எடுத்து அப்புறம் ஆமை நடந்து இப்படியே மாற்றி மாற்றிப் போக்கும் போங்கும் காட்டுகிறது திரைக்கதை . இயக்குனருக்கும் குழுவுக்கும் நேரத்தின் அடிப்படையில் கதாபாத்திரங்களை இயங்க வைக்கத் தெரியவில்லை. சைக்கோவிடம் அடி வாங்கிய போலீஸ்காரர்கள் இடையில் பல காட்சிகள் போய் வந்த பிறகும் அடி வாங்கிய இடத்தில் அப்படியே படுத்த மாதிரியே இருக்கிறார்கள் .

ஒரு பிச்சைக்காரன் ரெண்டு இட்லி சாப்பிட ஆரம்பிக்கிறான். அதன் பின் பல காட்சிகள் நடந்து மீண்டும் அந்த இடத்துக்கு திரைக்கதை போகும்போதும் அந்த ரெண்டு இட்லி தின்னு முடியவில்லை. ( அவ்வளவு கல்லு இட்லியோ என்னவோ )
பல இடங்களில் பல கதாபாத்திரங்களின் உடல் மொழி, நகர்வு பேச்சு யாவும் படு செயற்கை . விதார்த்தையே செயற்கையாக நடிக்க வைத்து இருக்கிறார்கள் .
கிளைமாக்ஸ் முந்தைய டுவிஸ்ட் சிறப்புதான் . ஆனால் அதன் பிறகு படம் தடுமாறுகிறது . உலகத்துக்கே தெரிந்த கிளைமாக்ஸ் காட்சிகள் வருகின்றன.

ஒரு வீட்டில் இரண்டாம் குழந்தை பிறந்த நிலையில் பெற்றோர்கள் அந்தக் கைக்குழந்தைக்கு முதன்மை முக்கியத்துவம் தரும்போது, மூத்த குழந்தைக்கு ஒரு பொறாமை இருக்கும் . கைக் குழந்தை மேல் சற்று கோபம் கூட வரும். ஆனால் கொஞ்ச நாட்களில் சிறு குழந்தையின் அசைவு பார்வை சிரிப்பு, குரல் இவற்றைப் பார்க்கும்போது , அந்தக் கைக் குழந்தை மீது , முதல் குழந்தையின் மனதில் ஊறித் துளிர்த்து ஒன்று கூடி ஆடி ஓடி பொங்கிப் பாயும் உணர்வுக்குப் பெயர்தான் சகோதர பாசம் .
அந்த வாழ்வியல் அறிவு இல்லாமல், அந்தப் பொறாமை காரணமாக முதல் குழந்தை பச்சைக் குழந்தையின் முகத்தில் தலையணை வைத்து அழுத்திக் கொன்றது என்று காட்சி வைத்து அதற்கு ஒரு நோயின் பெயரைச் சொல்லி நியாயம் கற்பிப்பது சமூக விரோதம்
நான்சென்ஸ் .