லவ் டுடே (2022) @ விமர்சனம்

ஏ ஜி எஸ் என்டர்டைன்மென்ட் சார்பில் கல்பாத்தி அகோரம், கணேஷ் மற்றும் சுரேஷ் தயாரிக்க, யுவன் சங்கர் ராஜா இசையில் பிரதீப் ரங்கநாதன் பாடல்கள் உட்பட எழுதி இயக்கி நாயகனாக நடித்து இருக்கும் படம். 

அம்மா (ராதிகா)  , அக்கா (ரவீனா) இருக்கிற – அப்பா இல்லாத ஓர் மத்தியதர இளைஞனுக்கும் (பிரதீப் ரங்கநாதன் ), அப்பா (சத்யராஜ்) , தங்கை (அக்ஷயா) இருக்கிற ஓர் பிராமணப் பெண்ணுக்கும் (இவானா)  காதல் .
 
பையனைப் பிடிக்காத பிராமண அப்பா ஒரு கண்டிஷன் போடுகிறார் . காதல் ஜோடி 24 மணி நேரம் செல்போன்களை மாற்றிக் கொள்ள வேண்டும் . அந்த நேரம் முடிந்த பிறகும் அவர்கள் காதல் நீடித்தால் கல்யாணம் செய்து வைக்கத் தயார் என்கிறார் . வேறு வழியின்றி அப்படியே நடக்க, ஒருவரின் அந்தரங்க விஷயம்  இன்னொருவருக்கு தெரிய வருகிறது . 
 
அதே போல நாயகனின் அக்காவுக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை ( யோகி பாபு) தனது செல்போனை யாரும் பார்க்கக் கூடாது என்று பிடிவாதம் பிடிக்க, அக்காவும் கல்யாணத்துக்கு முன்பு மாப்பிள்ளையின் செல்போனை கைப்பற்ற  முயல  …
கடைசியில் இரண்டு ஜோடிக்கும் என்ன நடக்கிறது என்பதே படம் . 
 
 இந்தக் கதை திரைக்கதைக்குப் பொருத்தமாக , டைட்டில் போடப்படும் சமயத்தில் பின்னணியில் தயாரிப்புக் கம்பெனியில் இருந்து ஒரு செல்போன் பகுதி பகுதியாக தயாராகி இணைக்கப்பட்டு விற்பனைக்கு வந்து நாயகன் கைக்குப் போவது வரை காட்டும் இடத்திலேயே இயக்குனரின் செய் நேர்த்தி துவங்குகிறது . சிறப்பு . 
 
தமிழ் சினிமா கொஞ்ச காலமாக மறந்து விட்ட அற்புதமான இயக்க உத்தியான சிம்பாலிக் உத்தியை – காட்சிக்கு அப்பாற்பட்டு இல்லாமல் – படத்தின் காட்சியாகவே பயன்படுத்தும் விசயத்தில்  சபாஷ் போட வைக்கிறார் பிரதீப் ரங்கநாதன் . 
 
இதுவரை சொல்லப் படாத கதைக்கு ஜனரஞ்சக ரீதியில் சிறப்பான திரைக்கதை அமைத்து இருக்கிறார் . கிளைமாக்ஸ் பகுதிக்கு பயன்படும் என்ற முன் திட்டத்தில் அம்மாவின் பள்ளிக் காலக் காதலன் பற்றி சித்தி பேசுவதாகக் குறிப்பிடுவது சிறப்பு மியூட் செய்யப்பட்ட ஆபாச வசனங்கள் உண்டு  என்ற குறை இருந்தாலும் அதை சீரியஸ் காட்சிகளில் வைத்த விதத்திலும் மற்ற வகையிலும் அழுத்தமான வசனங்கள் எழுதியும் அதை காமடி சீரியஸ் என்று இரண்டு வகையிலும் சிறப்பாக எழுதி இருக்கிறார் . 
 
கதைக்காக அவர் செய்து இருக்கும் அப்சர்வேஷன் , விவரணைகள் , தகவல் திரட்டு எல்லாமும் அருமை . குறிப்பாக ஒரு பெண் இன்பாக்ஸில் பதில் சொல்லவில்லை என்றால் ஆண்கள் என்ன எல்லாம் சொல்லி எப்படி எல்லாம் மெசேஜ் செய்வார்கள் என்ற ஏரியா அதகளம். 
 
செல்போனின் தொழில் நுட்பங்களை கதைக்கு பொருத்தமாக பயன்படுத்திய அதே நேரம் கண்டு பிடிக்க முடியாத குற்றங்களும் இன்னும் நடந்து கொண்டு இருக்கின்றன என்ற ரீதியில் ஒரு விசயம் சொல்லி இருப்பது அவரது மெச்சூரிட்டிக்கு உதாரணம் . 
 
நாயகன் நாயகி இருவருக்கும் சபலங்களும் முன் காதலும் இருந்தததே ஒழிய இருவரும் ஏன் நாயகன் கூட தப்பே செய்தவன் இல்லை என்பது இன்றைய அளவில்  யதார்த்தம் இல்லை என்றாலும் ஒரு சினிமாவுக்கே அதுவே சரியானது என்ற அவரது தெளிவும் பாராட்டத்தக்கது. 
உடைந்து வரும் மகனுக்கு அறிவுரையாக ராதிகா பேசும் விசயங்கள் ஆண் பெண் இருவருக்குமான நம்பிக்கைப் பாடம் . 
 
நல்ல நட்பில் வரும்  ரகளை,  சந்தேகம், சண்டை, சந்தேகம் தீராத போதும் நட்பை உணர்ந்து நம்பி மீண்டும் இணைவது என்று அந்த நீட்சி மிக சிறப்பு 
 
ஒருவர் ஒரு விசயத்தை மறைப்பதாலேயே அவர் தப்புதான் செய்கிறார் என்று பொருள் அல்ல என்பதை யோகிபாபு மூலம் விளக்குவது இன்னொரு சிறப்பான திரைக்கதைப் பரிமாணம். 
 
ராதிகா, இவானா, ரவீணா , அக்ஷயா , தோழியாக வருபவர் என்று பெண்கள் இந்தப் படத்தில் அட்டகாசமாக நடித்து உள்ளனர் . 
யுவன் சங்கர் ராஜாவின் இசை, தினேஷ் புருஷோத்தமனின் இசை, பிரதீப் ராகவின் படத் தொகுப்பு, எம் கே டியின் கலை இயக்கம் , சிங்க் சினிமாவின் ஒலி வடிவம் தபஸ் நாயக்கின் ஒலிக்கலவை , பல்லவி சிங், ஷேர் அலியின் ஆடை வடிவமைப்பு யாவும் அருமை . 
 
 காதல் துவங்கும்  பாட்டு எடுக்கப்பட்ட விதம் அருமை 
 
பிரதீப் ரங்கநாதனும் அப்பாவித்தனம், நகைச்சுவை , சீரியஸ் என்று நடிப்பிலும் ஸ்கோர் செய்கிறார் . ஆனால் காதல் கொண்டேன் , துள்ளுவதோ இளமை  காலத்து தனுஷ் போல திட்டமிட்டு நடிக்கிறார் . அந்த இடத்துக்கு குறி வைப்பதில் தப்பில்லை. அவர்  மாதிரியே நடிக்க இவர் எதற்கு?
 
350 டிகிரி யோசித்து எழுதப்பட்ட திரைக்கதை .அப்போ இல்லாத பத்து டிகிரி ? செல்போன் ஒன்றும் குற்றப் பொருள் அல்ல. அதை பயன்படுத்தும்விதம்தான்  தப்பு . என்பதை கொஞ்சமாச்சும் சொல்லி இருக்கலாம். ஒரு கதைக்கு  வணிக ரீதியில் எப்படி பொருத்தமாக திரைக்கதை அமைக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் லவ் டுடே .
 
விஜய்,  சுவலட்சுமி நடிப்பில்  பால சேகரன் இயக்கி 1997 இல் வந்த முதலாம் லவ் டுடே படமும் அன்றைக்கு தெறிக்க விட்ட படம்தான் . 
 
 
 
 
 
 
 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *