சித்தாரா என்டர்டைன்மென்ட் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் சார்பில் சூர்யதேவரா நாகவம்சி மற்றும் சாய் சௌஜன்யா தயாரிக்க, துல்கர் சல்மான் , மீனாட்சி சவுத்ரி, ராம்கி, சாய் குமார், மாஸ்டர் ரித்விக் நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கி இருக்கும் படம்.
பங்குச் சந்தை ஊழலில் ஹர்ஷத் மேத்தா கொடிகட்டிப் பறந்த காலம்.
அரசுடமையாக்கப்படுவதில் இருந்து தப்பிய மும்பை வங்கி ஒன்றில் சின்சியர் பணியாளாக இருந்தும் போதுமான வருமானமும் பதவி உயர்வும் இன்றி கஷ்டப்படும் ஒருவன் (துல்கர் சல்மான்) , வங்கிப் பணத்தைத் திருடி வெளியே ரோட்டேஷனில் விட்டு ஆயிரம் கோடி ரூபாய் வரை சம்பாதிக்கிறான்.
பணத்திமிரால் வீட்டில் கணவன் மனைவிக்குள் பிரச்னை வர . நடந்த தவறுகளுக்கு எல்லாம் ஹர்ஷத் மேத்தா போன்ற ஒரு நபரும் அவர் சொல்படி ஆடும் வங்கி அதிகாரிகள் மற்றும் சி பி ஐ அனைவரும் அவனை மட்டும் குற்றவாளியாக்கித் தப்பிக்க முயல,
நடந்தது என்ன என்பதே படம்.
ஹர்ஷத் மேத்தா சம்மந்தப்பட்ட படம் என்றாலும் படத்தில் அவர் கேரக்டர் (படத்தில் பெயர் ஹர்ஷா பாய் என்கிற ஹர்ஷத் மெஹ்ரா) தோன்றாது . அவர் பெயர் பல முறை உச்சரிக்கப்படும் . ஒரு காட்சியில் அவர் அரெஸ்ட் செய்யப்பட்டு விட்டார் என்று சொல்லப்பட , அதிகாரிகள் அவர் ரூம் நோக்கிப் போவது போல மட்டும் ஒரு காட்சி .
அதாவது டீ மானிட்டைசேஷன் சமயத்தில் எந்தெந்த அரசியல் , சினிமா,பிசினஸ் சூப்பர் ஸ்டார்கள் மட்டும் தங்கள் பணத்தை காப்பாற்றிக் கொண்டார்கள் என்பது தெரியும் . ஆனால் பிரபலமில்லாத பல பெரும் கோடீஸ்வரர்களிடம் இருந்து வங்கி அதிகாரிகள் எவ்வளவு கொள்ளை அடித்தார்கள் என்பது பற்றி பலர் அறியவில்லை. பேசவில்லை. திட்டவில்லை .
அதே போல ஹர்ஷத் மேத்தா விவாகரத்தில் அவர் செய்தது பற்றிப் பேசப்பட்ட அளவுக்கு அவரை வைத்துப் பிழைத்த வங்கி அதிகாரிகள் மற்றும் அதிகார அரசியல் வர்க்கம் பற்றி பலரும் பேசவில்லை. இந்தப் படத்தில் பேசி இருக்கிறார்கள். பாராட்ட வேண்டிய விஷயம் .
அதே போல தமிழ் டப்பிங் மிக சிறப்பாக இருந்தது .
மற்றபடி,
வறுமை காரணமாக அயோக்கியத்தனத்துக்கு துணை போய் கோடி கோடியாக சம்பாதித்த ஒரு கீழ் நடுத்தர வர்க்க நபர் , ஒரு நிலையில் அதை எதிர்த்த தனது தந்தை , மனைவி (மீனாட்சி சௌத்ரி ) எல்லோரையும் எப்படி பணத்தால் அடித்து தன்னைப் போல கேடுகெட்ட நாதாரி நாய்களாக மாற்றினான் என்பதுதான் படம்.
இத்தனைக்கும் ஒரு இக்கட்டான சூழலில் அவன் கிட்டத்தட்ட கூட்டிக் கொடுக்கும் வேலையை செய்கிறான் . இன்னும் இக்கட்டான சூழல் வந்திருந்தால் காதல் பொண்டாட்டியையே கூட கூட்டிக் கொடுத்து இருப்பான் .
இத்தனைக்கும் அந்த நபருக்கு அயோக்கியத்தனம் செய்வதை நியாயம் என்று உணர வைப்பதே அவனது மகனான சிறுவன்தான் (ரித்விக்) . அப்படி ஒரு மானம் கெட்டு நாலும் வித்த குடும்பம் அது..
மொன்னைப் பாம்பு என்று ஒரு வகைப் பாம்பு உண்டு . என்ன அடித்தாலும் அது சாகாது என்று, எரித்து விடுவார்கள். அப்படி உயிரோடு கொளுத்தப்பட வேண்டிய குடும்பம் இது .
இவர்களின் வெற்றியைத்தான் நியாயப்படுத்தி தான் படம் முடிகிறது .
சரி.. இந்த எதிக்ஸ் சமாச்சாரத்துக்கு அப்பாற்பட்டு பார்த்தாலும் இது ஒன்றும் வியக்க வேண்டிய கொண்டாட வேண்டிய படம் எல்லாம் இல்லை .
ஸ்டாக் மார்க்கெட் , பேங்கிங் செக்டார் கூட்டு ஊழல் விசயத்தில் நடந்தது என்ன என்பதை சிரத்தையாக தீவிரமாக அலசி இருக்கிறார்கள் . அந்த சிரததையான உழைப்பு காரணமாக நாம் அட என்றும் அடடே என்றும் ஆச்சர்யப்படும் ஒரு சில விஷயங்கள் படத்தில் இருக்கு . அதைப் பாராட்டுவதில் மாற்றுக் கருத்து இல்லை ..
அதோடு சிவாஜி , கே ஆர் விஜயா நடித்த சொர்க்கம் படத்தை சேர்த்து, கொஞ்சம் தண்ணீர் விட்டு… சாரி …. பண ஆசை மீதான ஜொள்ளு விட்டு , ஒரு பிசை பிசைந்து அரைகுறையாக வாட்டி எடுத்தால் .. அதை வைத்து படம் பார்ப்பவனையும் வாட்டி எடுத்தால் , அதுதான் லக்கி பாஸ்கர் .
ஆனால் மிக குழந்தைத்தனமான நாலாந்தர திரைக்கதை .
படத்தின் துவக்கக் காட்சியில் அன்றைய வங்கி வழக்கப்படி, ” வங்கியின் வரவு செலவை தினமும் லெட்ஜர் என்ட்ரிதான் போடுவோம். மாசம் ஒரு முறை கம்ப்யூட்டரில் ஏற்றுவோம். ஆறு மாசத்துக்கு ஒரு முறைதான் ரிசர்வ் வங்கிக்கு அக்கவுன்ட் சப்மிட் செய்வோம்” என்று நீட்டி முழக்கி சொல்லும்போதே,
படத்தின் ஹீரோ தினசரி வசூல் பணத்தை எடுத்து பிசிக்கலாக ரோட்டேஷனில் விட்டு ஓரிரு நாட்களுக்குள்ளாகவோ மாசக் கடைசிக்குள்ளாகவோ திரும்ப வைத்து விடுவான் என்பது , காரைக்குடி திருப்பத்தூர் பஸ் ஸ்டாண்டில் கந்து வட்டிக்குப் பணம் வாங்கி நவாப் பழ ஏவாரம் செய்யும் ஆயாவுக்குக் கூடப் புரிந்து விடும் .
இதை வைத்துக் கொண்டு மொத்தப் படத்தையும் உருட்டி இருக்கிறார்கள்.
நாடகத்தனமான காட்சிகள் .
ஒவ்வொரு காட்சி ஆரம்பிக்கும்போதும் துல்கர் சல்மான் மாட்டிக் கொண்டது போல பயந்த முகம் காட்டுவாராம் . காட்சி முடியும்போது விஷமப் புன்னகை புரிவாராம். அதன் பின்னர் அவர் எப்படி சிக்கலில் இருந்து புத்த்த்த்…..திசாலித்தனமாக .…ஹக்காங்.. ஹக்காங்… ஹக்காங்… தப்ப்ப்பப்ப்ப்பப்பி விட்டார் என்று காட்டுவார்களாம். சம்மந்தப்பட்ட கேரக்டர்களின் முன்னால் அவர் பயந்த மாதிரி நடிக்கிறார் ஒகே . ஆனால் அது போன்ற காட்சிகளுக்கு முன்னால் யாரும் இல்லாத போதும் அப்படி நடிக்கிறாரே . அது எஎன்ன மைசூர் பாக்கு சூஸ்பரிக்காம்?
செகண்ட் ஹேண்டு செல்போனில் எருமை மாட்டை வைத்து ஏதோ ஒரு குறும்படம் எடுக்கும் வந்தவாசி அஞ்சாவது படிக்கும் மாணவன் கூட இப்படி ஒரு அமெச்சூர் ஷாட் ஸ்டைலைப் பயன்படுத்த மாட்டான். படம் முழுக்க நாரத கான சபா டிராமா மாதிரி இதே பாணி.
அதிலும் துல்கரின் சூட்கேஸ் செக் செய்யப்படும் காட்சி எல்லாம் பார்க்கும்போது கழட்டி … அடிச்சுக்கணும் போல தோணுது. அந்தக் காட்சி எதுக்காக ? வேறு யாருடைய பங்களிப்பும் இல்லாமல் அந்தக் காட்சி எதற்கு? (நான் கூட அந்த நண்பன் பணத்தை மாற்றி வைத்து ,துல்கரைக் காப்பாற்றி இருப்பான் என்று காட்டுவார்கள் என்று நம்பித் தொலைத்தேன் . அது கூட இல்லை .
ஒரு வீடியோவில் கமல்ஹாசன் இளையராஜாவைப் பார்த்து , ” எல்லாமும் நீங்களே வச்சுக்கணும் னா அப்புறம் நாங்க என்ன பண்றது?’ என்று கேட்டது போல எல்லாமே துல்கர்தான் செய்யணும்னா .. அது சினிமா இல்ல … பக்குவமில்லாத டிராமா. நண்பன் கேரகர் கேபினுக்குள் வர முடியாது என்று லாஜிக் எல்லாம் பேசக்கூடாது . எனில் கேபினுக்குள் ஒரு டெல்லர் சொந்த சூட்கேசையும் கொண்டு போக முடியாது . டெல்லர் வெளியே போகும்போது சின்ன பைகளே செக் செய்யப்படும் , 1980, 90 களிலும் ! )
சரி லாஜிக் எப்படி இருக்கு?
படத்தில் லாஜிக்காக சாத்தியமான சில காட்சிகள் , சாத்தியமாக வாய்ப்புள்ள சில காட்சிகள் , சாத்தியம் ஆக வாய்ப்பே இல்லாத சில காட்சிகள் மூலம்தான் ஹீரோ பணத்தைக் கையாடல் செய்கிறான் . அதை எல்லாம் கூட திரைக்கதையின் சுவாரஸ்யத்துக்கு என்று ஏற்கலாம் .
ஆனால், அன்றைய கால கட்டத்தில் ஒரு வங்கியில் வேலை செய்து கொண்டு தினமும் வெளியே உட்கார்ந்து கொண்டு, எழுதப் படிக்கத் தெரியாத வாடிகையாளர்களுக்கு சலான்களையும் அப்ளிகேசன்களையும் ஃபில் அப் பண்ணித் தர காசு வாங்கும் ஒருவன் ( அதுவும் ஒருத்தர் அதற்கு ஐந்து ரூபாய் எல்லாம் கொடுக்கிறார்), தனது மகனுக்கு ஒண்ணுக்கு ரெண்டாக பாவ் பஜ்ஜி வாங்கிக் கொடுக்கக் கூட வக்கில்லாமல் கஷ்டப்பட்டான் … அதற்காக அயோக்கியத்தனம் செய்ய துணிந்தான் என்று சொல்கிறார்கள் பாருங்கள் ( பயபுள்ள…. கூத்தியா வச்சுக்கிட்டு குதிரை ரேஸ் க்கும் போவான் போல…. . எடுத்து இருப்பாங்க . அப்பால எடிட்டிங் ல தூக்கி இருப்பாங்க) , அங்கேதான் படுத்தே விட்டானய்யா.. ரேஞ்சுக்குப் போகிறது படம்.
சொர்க்கம் படம் எடுத்தவர்கள் எல்லாம் நாடு நல்லா இருக்கணும் என்று நினைத்தவர்களும் எனவே தப்பு செய்தவன் , தப்ப முடியாமல் சிக்கினான் பிறகு திருந்தினான் என்று படம் எடுத்தார்கள் .
லக்கி பாஸ்கர்களை எடுப்பவர்கள் , ஒட்டுமொத்த நடுத்தர சமூகமும்பண வெறியில் சகலத்தையும் உதிர்த்து விட்டு உருவி எறிந்து விட்டு பணக்காரர்கள் முன் நிர்வாண உடலாக ஆட்டு மந்தைகளாக நிற்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் . அதனால் தான் கடைசியில் இந்த ஈத்தரைக் குடும்பத்தை அமெரிக்காவில் ஹோட்டல் அதிபராக , பெரும் பங்களா உரிமையாளராக , லிமிட்லஸ் டெபிட் கார்டு பயன்படுத்துபவர்களாகக் காட்டி , படம் பார்ப்பவர்கள் மனதில் தீபாவளி லீவ் முடிந்ததும் யாரை எப்படி எப்படி ஏமாற்றலாம் என்று யோசிக்க வைத்து அனுப்புகிறார்கள் . (அதுவும் கடைசிக் காட்சியில் கதாநாயகி கொடுக்கும் முக பாவம் எல்லாம் … இவளை விட குடும்பத்தைக் காப்பற்ற லாரியை மறித்து உடம்பை விற்கும் அப்பாவிப் பெண்கள் மேல் .
மொத்தத்தில் இது லக்கி பாஸ்கர் இல்லை….. ‘ல’ வுக்குப் பதில் ‘ந’
பெயர் : சு.செந்தில் குமரன்
புனைப் பெயர் : ராஜ திருமகன்
கல்வித் தகுதி : B.E. Mechanical
பிரசுரமான முதல் படைப்பு : கவிதை --
பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில்
தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே
தேவை என்றாராம் ஜெயவர்த்தனே!
நல்ல வேளை.....
தமிழன் ரத்தம் கேட்கவில்லையே
(ஜூனியர் விகடன் )
பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம்
மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது
விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்)
விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு)
கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு)
சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்)
நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்)
பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்)
சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் )
தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி )
நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி )
நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது )
திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்)
நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு )
-- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக)
-- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள்
பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா),
முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் )
அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து
தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462