ஃபிலமென்ட் பிக்சர்ஸ் சார்பில் இயக்குனர் நெல்சன் தயாரிக்க, கவின், ரெடின் கிங்ஸ்லி , ராதாரவி நடிப்பில் சிவபாலன் முத்துக்குமார் என்ற அறிமுக இயக்குனர் இயக்கி இருக்கும் படம்.
தனது வாழ்வில் நடந்த சில சம்பவங்களால் மனம் இறுகிக் கெட்டிப்பட்டு எகத்தாளமாய் சில்லுண்டித்தனமாக பிறரை ஏமாற்றி வாழும் ஒரு பிச்சைக்காரன் (கவின்), ஒரு சிறுவனுக்கு மட்டும் சிற்சில உதவிகள் செய்து வளர்க்கிறான் . அந்த சிறுவன் நேர்மையானவன்.
மேற்படி பிச்சைக்காரனுக்கு அந்தப் பகுதியில் இருக்கும் ஒரு மாளிகை போன்ற வீட்டில் ஒரு நாளாவது வசிக்க வேண்டும் என்று ஆசை.
சந்தர்ப்பமாக , அந்த மாளிகையில் வாழ்ந்து இறந்த ஒருவரின் நிறைவாக சில பிச்சைக்காரர்களை அதே மாளிகைக்கு அழைத்து உட்கார வைத்து தலைவாழை இலை போட்டு விருந்து வைக்க , இறந்தவரின் உறவினர் ஒருவர் திட்டமிட, சாப்பிடப் போன பிச்சைக்காரர்களில் இவனும் ஒருவன் .
சாப்பாடு முடித்து எல்லோரும் வெளியேறி, மாளிகையை பூட்டி விட்டும் சென்று விட, இவன் திட்டமிட்டு உள்ளேயே இருந்து விடுகிறான்.
பூட்டிய மாளிகைக்குள் இருப்பதை உண்டு உறங்கி , அது திறக்கப்படும் வரை ஜாலியாக இருக்கலாம் என்று பார்த்தால், உள்ளே சில மனிதர்கள் மற்றும் இவன் கண்ணுக்கு மட்டுமே தெரியும் ஓர் ஆவி ( ரெடின் கிங்ஸ்லி)
அங்கே உள்ளவர்கள் மாளிகைக்கு சொந்தக்காரரின் எல்லா வாரிசுகளுக்கும் பிரிக்க வேண்டிய சொத்தில் தகிடு தத்தம் செய்ய முயன்று , அதற்காக இந்தப் பிச்சைக்காரனையே ஆள் மாறாட்டம் செய்ய வைக்க முயல , அது அவனுக்கு உயிராபத்து வரை போக , நடந்தது என்ன என்பதே படம் .

சிவபாலன் முத்துக்குமார் என்பதற்குப் பதில் சிவபாலன் முத்துகுமார் என்று தனது பெயரைப் போட்டுக் கொள்கிறார் இயக்குனர். படத்தின் பெயரில், காட்சிக்குள் வரும் வார்ததைகளில் பிழைகள் செய்பவர்களை இதுவரை பார்த்திருக்கிறோம். ஆனால் தனது சொந்தப் பெயரையே தமிழில் தவறாக எழுதிய முதல் இயக்குனர் இவர்தான் .
நடைபாதையில் படுத்து உறங்கும் மக்கள் மீது குடிபோதையில் கார் ஏற்றிக் கொல்லும் செய்திகள் நமக்குப் புதியவை அல்ல. கேட்டால் அவன் ஏன் பிளாட்பாரத்தில் படுக்கறான் என்று , மன சாட்சியைக் கழட்டி வைத்து விட்டு, பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளி ஆக்கிக் கேள்வி கேட்பவர்களே அதிகம் .
விரும்பி யாரும் பிளாட்பாரத்தில் தூங்குவது இல்லை. ஆனால் குடித்து விட்டுத் தாறுமாறாக கார் ஓட்டுவது என்பது விரும்பிச் செய்யும் ஆணவச் செயல். அப்படி தவறு செய்யும் பலர் அந்தத் தவறுக்குப் பிறகு கூட மனிதாபிமானத்துடன் நடந்து கொள்கிறார்களா? அல்லது தவறை மறைக்க மேலும் குற்றங்கள் செய்கின்றனரா? அது முறையா? என்று இந்தப் படம் கேட்கும் கேள்வி முக்கியமானது . அது மட்டுமே இந்தப் படத்தில் உருப்படியானது .
அதை வைத்து சீரியசாக – யதார்த்தமாக – எமோஷனலாக ஒரு படம் பண்ணி இருந்தால் கூட உருப்பட்டிருக்கும் இந்தப் படம் .
ஆனால் சுழி சும்மா இருக்க விடுமா?

தமிழ் சினிமாவில் பிளாக் காமெடி என்பது அளவோடு இருந்தவரை படமும் ஓடியது . பிளாக் காமெடிக்கும் மரியாதை இருந்தது . ஆனால் நம்ம ஆட்களுக்குத்தான் பேரு வைக்கும் அளவுக்கு சோறு வைக்கத் தெரியாதே
நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படம் தியேட்டரில் ஓகோ என்று ஓடியது என்றால் , கொரோனாவால் பல மாதம் வீட்டில் முடங்கிக் கிடந்த மக்கள் தியேட்டருக்கு வந்து சிரிக்கக் காத்திருந்தார்கள்.அவ்வளவுதான் . பட்டினி கிடந்தவன் பழைய சோறை விரும்பித் தின்றான் என்பதற்காக தீபாவளிக்கும் அவனுக்கு அதே பழைய சோறைப் போட்டா எப்படி? (அடுத்து நெலசன் இயக்கிய ஜெயிலரில் பிளாக் காமெடி ரொம்பக் குறைவுதான் )
இதுதான் சாக்கென்று பிளாக் காமெடி என்ற பெயரில், பிளடி பெக்கர் என்று இப்படி ஒரு படம் எடுத்து ரசிகர்களின் ரசனையை பிளாக் அவுட் செய்தால் என்ன நியாயம்?
கவின், சிறப்பாக நடித்து இருந்தாலும் ஜென்மார்ட்டின் இசை சுஜித் சாரங் ஒளிப்பதிவு ஆகியவை நன்றாக இருந்தும்,
சீரியசாகவும் இல்லாமல்…. பிளாக் காமெடி மட்டுமல்ல , எந்த கலர் காமெடியாகவும் இல்லாத -அரைவேக்காட்டுத்தனமான பைத்தியக்காரத்தனமான காட்சிகளால்
படம் பார்க்க வருபவர்களை கடித்துக் குதறுகிறது இந்த ப்ளடி பெக்கர்