பிரபல பாடலாசிரியரும் இயக்குநரும் பத்திரிகையாசிரியருமான எம்.ஜி.வல்லபன் பற்றி அருள்செல்வன் தொகுத்துள்ள தொகுப்பு நூலான,
‘சகலகலா வல்லபன்’ நூல் வெளியீட்டு விழாவில் நூலை நடிகர் சிவகுமார் வெளியிட்டார். இயக்குநர் கே. பாக்யராஜ் பெற்றுக் கொண்டார்.
விழாவில் சிவகுமார் பேசும் போது,” நல்ல செய்தியை மட்டுமே போட்ட பத்திரிகை பேசும்படம். நல்ல செய்திகள் எல்லாம் தெரிந்து கொள்ள உதவியது அந்த பத்திரிக்கை .
அப்படிப்பட்ட காலத்தில் பேசும்படத்தில் வல்லபன் இருந்தார்.
என்னை மாதம் இரண்டு ஓவியங்கள் சிவாஜி எம்.ஜி.ஆர். பத்தினி, சாவித்ரி என்று வரையவைத்து 24 ஓவியங்களை பேசும்படத்தில் வெளியிட்டார்.
அப்படி எனக்கு நட்பாக வந்தவர்தான் வல்லபன். அவர் பிறந்த ஊர் கேரளா திரிச்சூர். பிறந்த ஆண்டு 1943 .அவர் 60 வயதில் இறந்து விட்டார் .
அங்கே 5 ஆம் வகுப்புவரை கேரளாவில் படித்து விட்டு 6ஆம் வகுப்பிலிருந்து இங்கு படித்து எஸ்எஸ்.எல்.சி யில் மாநிலத்தில் முதலிடம் பெற்றார்.
அவர் அப்பா பிரியாணி கடை ஓட்டல் வைத்திருந்தார். கல்லூரியில் படித்த போது டாக்டர் ராதாகிருஷ்ணன் கையால் விருது வாங்கியிருக்கிறார்.
அந்த இளைஞன்தான் பிலிமாலயா வல்லபன் .
பிலிமாலயாவில் ஒரு மோட்டோ போட்டிருப்பார் ‘நல்லதைச் சொல்லும் போது நன்றி கூற நேரமில்லாதவர்கள்,
அல்லதைச் சொல்லும் போது எரிந்து விழா உரிமையில்லாதவர்கள்’ என்று. என்ன ஒரு தைரியம் பார்த்தீர்களா? 
பிலிமாலயாவில் ‘எரிச்சலுடடும் எட்டு கேள்விகள் ‘என்று கேட்டு வாங்கிப் போடுவார். பொதுமக்கள் பேசிக் கொள்வதை,
தைரியமாகக் கேள்வியாகக் கேட்டுப் பதில் பெற்றுப் போடுவார். என்னிமும் கேட்டார்கள் மகாவிஷ்ணு ,சிவன் என்று சாமி வேடமே போடுகிறீரே நடிக்க வராதா என்று.
இப்படிப் பலரிடமும் கேட்டுப் போட்டுள்ளார்.
வாசனிடமும் கேட்டதுண்டு ,சினிமாவே விஷூவல் மீடியா என்று சொல்கிறார்கள் நீங்கள் பக்கம் பக்கமாக வசனம் வைத்துள்ளீர்களே என்று .
முதன் முதலில் ஆபாவாணனையும் பாரதிராஜாவையும் பீச்சில் சந்திக்க வைத்து பேட்டி போட்டவர் வல்லபன் .
இதைவிடப் பெரிய விஷயம் இளையராஜா என்கிற மாணிக்கத்தைக் கண்டுபிடித்து உலகத்துக்கு முதலில் சொன்னது வல்லபன் .எவ்வளவு பெரிய விஷயம்?
கதை வசனகர்த்தா அன்னக்கிளி செல்வராசுக்கு இன்று உடல்நிலை சரியில்லை. அவரை நாம் கொண்டாட வேண்டும்.
முதன்முதலில் வல்லபனை ‘பொண்ணு ஊருக்குப் புதுசு’ படத்தில் பாடல் எழுத வைத்தவர் அவர்.
அதற்கான சன்மானம் 200 ரூபாயை டெல்லி திரைப்பட விழாவுக்குச் சென்ற வல்லபனுக்கு சித்ரா லெட்சுமணன் மூலம் கொடுத்து அனுப்பினார்.
தயாரிப்பாளர் கோவைத்தம்பி கதையோ திரைக்கதையோ வசனமோ வல்லபனைக் கேட்காமல் எதுவும் செய்யமாட்டார்.