ஆசியன் சினி கம்பைன்ஸ் சார்பில் திருப்பூரைச் சேர்ந்த தொழில் அதிபர் Ice Wear சந்திராசாமி , நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் டி என் தாய் சரவணன் மற்றும் ராஜீவன் ஆகியோர் தயாரிக்க,
விஷ்ணு விஷால், ரா. பார்த்திபன், ஸ்ரீதிவ்யா, சூரி ஆகியோர் நடிப்பில் சுசீந்திரன் கதை திரைக்கதை எழுதி இயக்கி இருக்கும் படம் மாவீரன் கிட்டு .
கிட்டுக்கு கிட்டுமா நற்பெயர் ? பார்க்கலாம் .
பழனி வட்டாரத்தில் உள்ள ஒரு கிராமம். 1980கள் காலகட்டம் . கீழ் சாதி மேல் சாதி பிரச்னை .
தாழ்த்தப்பட்ட மக்களில் யாரவது இறந்து போனால் அவர்களது பிணத்தை குளத்தின் வழியே குறுக்காக சுமந்து சென்றுதான் புதைக்க வேண்டும். மழை காலத்தில் குளம் நிரம்பி விட்டால்
ஒன்பது மைல் சுற்றிக் கொண்டு சுமந்து செல்ல வேண்டும் . காரணம் ஊருக்குள் உள்ள பொதுப்பாதை வழியே, தாழ்த்தப்பட்ட மக்கள் நடக்க உயர்சாதி அனுமதிக்காது .
அப்படி தாழ்த்தப்பட்ட மக்களுக்காக உழைத்த காளி முத்து அய்யா என்பவர், குளம் வழியும் காலத்தில் உயிர் வழிந்து இறந்து போக, கோர்ட்டுக்குப் போய் அனுமதி பெற்று,
அவரது பிணம் அனாதைப் பிணம் போல பொது வழியே கொண்டு போய் புதைக்கப்படுகிறது . அந்த அளவுக்காவது அனுமதி கிடைக்கக் காரணமான–
தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த கருப்புச் சட்டைக்கார மனிதன் சின்ன ராசு ( பார்த்திபன்) . அவனது இனத்தைச் சேர்ந்த கல்லூரி இளைஞன் கிருஷ்ணமூர்த்தி என்கிற கிட்டு ( விஷ்ணு விஷால் ) .
பெரிய மனிதர்களின் ஜாதி வெறி பிள்ளைகள் மனதிலும் இருக்க, கல்லூரி இளைஞர்கள் இளம் பெண்களுக்குள்ளும் ஜாதி வெறி .
ஆனால் அப்படி ஜாதி வெறி இல்லாத நிஜமான உயர்சாதி மனிதர் ஒருவரின் மகள் நாயகி (ஸ்ரீதிவ்யா )
கல்லூரியில் ஒரு தாழ்த்தப்பட்ட இன மாணவனுக்கும் உயர்சாதி இனப் பெண்ணுக்கும் வரும் காதலின் கல்யாணம் , மணமகளின் தந்தையே மகளை கொலை செய்வதில் முடிகிறது .
அதன் நீட்சியாக கிட்டுவுக்கும் நாயகிக்கும் காதல் .
அந்தக் காதலுக்கு நாயகியின் அப்பா சம்மதித்தாலும் உயர்ஜாதிக் கூட்டம் சம்மதிக்கவில்லை .
தாழ்த்தப்பட்ட மக்கள் தாங்கள் செல்ல வாங்கிய தனியார் பஸ் எரிக்கப்படுகிறது . தாழ்த்தப்பட்ட மக்களின் பல கோரிக்கைகள் நிறைவேற்றப் படவில்லை .
இந்த நிலையில் ஜாதி ஆணவ இன்ஸ்பெக்டர் ஒருவர் கிட்டுவை அடித்துத் துவைத்து அவனது கலெக்டர் கனவைக் குலைக்க, படுகாயம் அடைந்த கிட்டு , சின்ராசுவால் மறைக்கப் படுகிறான் .
கிட்டுவை இன்ஸ்பெக்டர் கொன்று விட்டதாக சொல்லி போராட்டத்தில் இறங்கி தங்கள் பல நாள் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ள சின்ராசு திட்டமிட,
கிட்டுவை கண்டு பிடித்து அவன் சாகவில்லை என்று நிரூபித்து போராட்டத்தை பிசுபிசுக்க வைக்க காவல் துறையும் அரசும் முயல , நடந்தது என்ன என்பதே இந்த மாவீரன் கிட்டு .
காலங்கள் மாறினாலும் நவீனம் பெருகி விஞ்ஞானம் வளர்ந்தாலும் ஃபேஸ் புக் , டுவிட்டரிலும் ஜாதி வெறி பேசும் இந்தக் காலகட்டத்துக்கு தேவையான ஒரு கதையை,
சொல்லி இருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன் . அந்த சமூக அக்கறைக்கு பாராட்டுகள் . அதை பீரியட் படமாக சொன்ன வகையில் ஒரு தனித் தன்மை தெரிகிறது.
கிராமிய வாழ்வில் தாழ்த்தப்பட்ட இன மக்களின் அவலம் , சாதி வெறியின் கோர முகம் , அங்கும் உள்ள நல்லவர்கள் என்று சார்பில்லாத நேரிய பதிவு .
மகளையே தந்தை கொல்லும் காட்சி உட்பட பல இடங்கள் யதார்த்தத்தின் கோர முகத்தை வெளிப்படுத்துகிறது. கிளைமாக்சில் கனம் ஏற்றி அனுப்புகிறார் சுசீந்திரன்.
படத்துக்கு பெரிய பல இமானின் இசை . ரொம்ப நாளைக்கு பிறகு அருமையான ஒரு தீம் மியூசிக் . அது காதல் , சோகம் , ஆக்ஷன் என்று எல்லாவற்றுக்கும் பொருந்தும் விதம் அருமை .
பாடல்களில் காதுக்குள் தேன் ஊற்றுகிறது இமான் — யுகபாரதி கூட்டணி . ”கண்ணடிக்கல.. கை பிடிக்கல…. ” பாடல் , ”இளந்தாரி … ” பாடல்கள்… ஆகா .. என்ன சுகம் !
இளந்தாரி அதன் உச்சம் . அதை பாடிய பூஜா அவ்வளவு அருமையாக பாடி உள்ளார் . என்ன ஒன்று … ‘ இளந்தாரி சொல்லு என்ன வேணும் … என்பதை இன்னும் கொஞ்சம் தெளிவாகப் பாடி இருக்கலாம் .
இந்தப் படத்தின் மூலம் வசனகர்த்தாவாக அறிமுகம் ஆகி உள்ள யுக பாரதியின் வசனங்களும் அருமை .
”அதிகாரத்துல உள்ளவங்க தப்புன்னு சொல்லல … அதிகாரமே தப்புன்னு சொல்றோம்… ” ,
எல்லா புரட்சிகளும் துரோகத்தால்தான் தோற்று இருக்கிறது . நமக்கும் அந்த நிலையை கொண்டு வராதீங்க … ”
சாதி வெறிக்காக பெத்து வளர்த்த மகளை கொன்னுட்டு எந்த கவுரவத்த காப்பாத்த போறோம் … “
— என்பது போன்ற வசனங்கள் மகுடம் .
சூர்யாவின் ஒளிப்பதிவு அபாரம் . எங்கே வைத்தாலும் அழகாகவே இருக்கிற லொக்கேஷன்களில் கூட நேர்த்தியாக செயல்பட்டு இருக்கிறார் .
கலை இயக்குனர் சேகரின் கலை இயக்கம் பீரியடை கண் முன் நிறுத்துவதில் அபார வெற்றி பெறுகிறது . இந்த நால்வர் கூட்டணி இயக்குனருக்கு பெரும்பலம் .
தனது பட நிறுவனத்தின் பெயரில் கானம் காவியம் காட்சி என்ற நல்ல தமிழ் வார்த்தைகளை திடம், திரவம் , காற்று வடிவின் மூலம் சொல்லி இருக்கும் தயாரிப்பாளர் சந்திராசாமிக்குப் பாராட்டுகள்
கிட்டுவாக, வித்தியாச கெட்டப்- உணர்ந்து நடிக்கும் விதம் என்று அசத்தி இருக்கிறார் விஷ்ணு விஷால் .
சின்ராசு கதாபாத்திரத்தில் அப்படி பொருந்துகிறார் பார்த்திபன் . சிரிப்பில் அவ்வப்போது வெளிப்படும் வில்லத்தனம் மட்டும் கேரக்டருக்கு பொருந்தவில்லை
கதாநாயகியாக ஜொலிக்கிறார் ஸ்ரீ திவ்யா . பாத்திரத்துக்கு ஏற்ற சிரிப்பு , தெறிப்பு நடிப்பு .
தன் மனம் பணத்துக்காக சில நொடிகள் சபலபட்டதை எண்ணி வெளியேறும் காட்சியில் சூரி வாள் வீசுகிறார் . அந்த காட்சி படைப்பாளிகள் உட்பட அனைவருக்கும் பாராட்டு தரும் காட்சி .
போராட்ட களத்தை சின்ன ராசு உருவாக்கும் விதத்திலும் கிளைமாக்சிலும் இருக்கும் வித்தியாசம் , படத்தின் அடிப்படை பிரச்னைகளை சொன்ன விதத்திலும் இருந்திருந்தால் படம் இன்னும் பல படி உயர்ந்து இருக்கும் .
அதனால் என்ன …
தொழில் நுட்ப சிறப்புகளோடும் படைப்பு வீரியத்தோடும் ஒரு சமூக அக்கறைக் கதையை கமர்ஷியலாக ரசனையாக கவிதையாக சொன்ன வகையில் ,
மாவீரன் கிட்டு …. முரசு கொட்டு !








