
நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் சார்பில் ராஜசேகர் கற்பூர சுந்தர பாண்டியன் கிறிஸ் பிக்சர்ஸ் சார்பில் கிறிஸ்டி சிலுவப்பன் ஆகியோர் தயாரிக்க,
ஜோதிகா, ஊர்வசி, பானு பிரியா, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடிப்பில்
தனது முதல் படமான குற்றம் கடிதல் மூலமே தேசிய விருதைக் கொண்டு வந்த பிரம்மா இயக்கி இருக்கும் படம் ககளிர் மட்டும் .
படத்தின் இசையை சூர்யாவின் தாயார் லட்சுமி சிவகுமார், ஜோதிகாவின் தாயார் சீமா, பிரம்மாவின் தாயார் பார்வதி கோமதி நாயகம்
மற்றும் 2டி ராஜாவின் தாயார் சாந்தா கற்பூர சுந்தர பாண்டியன் இணைந்து வெளியிட்டார்கள்.

பெண்மையின் சக்தி, பகுத்தறிவு, தமிழ்த் தேசியம் அதே நேரம் பறந்து பட்ட பார்வை கொண்ட படமாக இது வரலாம் என்பது படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்களில் தெரிந்தது .
அதற்கேற்ப நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசிய இயக்குனர் மகிழ் திருமேனி ” இன்னும் சில ஆண்டுகளில்
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக பிரம்மா வருவார் . அதில் மாற்றுக் கருத்தே இல்லை .
அவர் தமிழர்களின் வாழ்வியல் அறிந்தவர் தமிழர்களுக்கான நுண்ணரசியல் தெரிந்தவர் . இந்தப் படத்தின் மூலமும் அதை அவர் நிரூபித்து இருக்கிறார் .
சூர்யா- ஜோதிகா இருவரோடும் காக்க காக்க படத்தில் பணி புரிந்த அனுபவம் எனக்கு உண்டு . அப்போது நடந்த ஒரு சம்பவம் .

என் நண்பர் ஒருவர் தாய்த்தமிழ் பள்ளி நடத்தி வருகிறார் . தமிழ் வழியில் கற்பிக்கப்படும் அந்தப் பள்ளியில் ஆங்கிலம் ஒரு மொழிப் பாடம் மட்டுமே.
ஆனால் அங்குள்ள மாணவ, மாணவியர் மற்ற ஆங்கிலப்பள்ளி மாணவ மாணவியருக்கு இணையாக சிறப்பாக ஆங்கிலம் பேசுவார்கள் .
அந்தப் பள்ளிக்கு அப்போது சூர்யாவை அழைத்துப் போனேன். ஏதோ கொஞ்ச நேரம் இருப்பார் என்று நினைத்தேன் . ஆனால் மனம் லயித்து பல மணி நேரம் அங்கே கழித்தார் .
அதன் பிறகு என்னை எப்போது பார்த்தாலும் அந்தப் பள்ளி பற்றிக் கேட்பார் .இப்போது சூர்யா கேட்பதற்கு முன்பாகவே அந்தப் பள்ளி பற்றி நான் சொல்ல வேண்டி உள்ளது .

அந்தப் பள்ளிக்கு சில தேவைகள் உள்ளன . அது விசயமாக உங்களை சம்மந்தப்பட்டவர்களோடு விரைவில் சந்திக்கிறேன்” என்றார்
முன்னதாகப் பேசிய பாடலாசிரியர் உமாதேவி தன் பேச்சில் ” இங்கே பேசிய சிவகுமார் அய்யா , தனது பேச்சில் சாக்ரட்டீஸ், அரிஸ்டாட்டில் போன்றவர்கள் கூட,
பெண்களை எவ்வளவு கேவலாமாக சித்தரித்தார்கள் என்று கூறினார். ஆனால் அதே காலகட்டத்தில் அன்றைய தமிழ்ச சமூகம் பெண்களை உயர்வாக மதித்துள்ளது .
இரண்டு அரசர்களை சந்தித்து உரையாடி அவர்களுக்கு இடையேயான போரையே அவ்வையால் நிறுத்த முடிந்தது என்றால்

அதில் இருந்தே தமிழ்ச் சமூகம் அந்தக் கால கட்டத்தில் பெண்களை எவ்வளவு உயர்ந்த இடத்தில் வைத்துப் பார்த்திருகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம் என்றார்
ஜோதிகா பேசிய போது , ” பெண்கள் பணிபுரியும் போது, வீட்டிலிருக்கும் மற்ற பெண்கள் உறுதுணையாக இருப்பார்கள்.
எனது அம்மா, சூர்யாவின் அம்மா உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. சூர்யா, கார்த்தி ஆகியோரைத் தொடர்ந்து, தற்போது தினமும் எனக்கும் மதியம் சாப்பாடு அனுப்புகிறார்கள்.
நீண்ட நாட்கள் கழித்து எனது அம்மா இந்த இசை வெளியீட்டு விழாவுக்கு வந்துள்ளார்.
எனது அப்பா (சிவகுமாரை சொல்கிறார் ) எப்போதுமே நான் படப்பிடிப்புக்கு செல்லும் போது தப்ஸ்-அப் காட்டி அனுப்பி வைப்பார்.
சூர்யா எப்போதுமே நான் படப்பிடிப்புக்கு கிளம்பும் போது, வண்டியில் ஏற்றி கதவை அடைத்து விட்டு டாட்டா காட்டி அனுப்பி வைப்பார்.
கார்த்தி இப்படத்தில் பாடல் பாடியிருப்பது படத்துக்கு கூடுதல் பலம். சிவகுமார் குடும்பத்தில் இருக்கும் அனைத்து ஆண்களுக்கும், ஒரு பெண்ணை ஆதரவு கொடுத்து வருவதற்கு மிகப்பெரிய நன்றி.
‘மகளிர் மட்டும்’ படத்தில் பிரபாவதி என்ற ஆவணப்பட இயக்குநராக நடித்துள்ளேன். சூர்யா இல்லையென்றால் இங்கு நானில்லை.
தமிழ் திரையுலகில் ஒரு நாயகியின் உண்மையான வயதுக்கு, குறைவான வயதுடைய பாத்திரம் கொடுப்பவர் இயக்குநர் பிரம்மா மட்டும்தான். நிஜமாகவே இந்த எண்ணத்துக்கு இயக்குநருக்கு நன்றி சொல்ல வேண்டும்.
நாயகி என்றாலே 30 வயது கடந்தவுடன் வயதானவர் என்று முத்திரைக் குத்திவிடுகிறார்கள். பல இயக்குநர்கள் 12 வயது குழந்தைக்கு அம்மாவாக நடிக்க வேண்டும் என்றே அணுகியுள்ளார்கள்.
முழுக்கதையோடு பிரம்மா என்னை அணுகினார். திருமணமாகாத பெண்ணாக நடிக்க வேண்டும், டூவீலர் ஓட்ட வேண்டும் என்று முதலில் சொன்னார். அப்போதே இப்படத்தில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.
பெண்களை வேறு ஒரு கண்ணோட்டத்தில் அணுகியிருப்பதற்கு பிரம்மாவிற்கு நன்றி.
ஜிப்ரான் அருமையான இசையைக் கொடுத்துள்ளார். நயன்தாரா நடித்திருக்கும் ‘அறம்’ என்ற பெண்ணை மையப்படுத்திய படத்துக்கு இசையமைக்கிறீர்கள்.
பெண்களை மையப்படுத்திய கதைக்கு முக்கியத்துவம் அளித்தமைக்கு நன்றி. ஊர்வசி மேடம், பானுப்ரியா மேடம், சரண்யா மேடம் என 3 ஜாம்பாவன்களுடன் நடித்தது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.
முதற்கட்ட படப்பிடிப்பு மட்டுமே கொஞ்சம் கடினமாக இருந்தது. அதற்குப் பிறகு ஒன்றாக பழகி சந்தோஷமாக நடிக்க ஆரம்பித்துவிட்டோம்.
சரண்யா மேடத்துக்குத் தான் உண்மையில் பெண் சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுக்க வேண்டும். ஏனென்றால் குடும்பத்தைப் பராமரிக்கிறார் .
படங்களில் நடிக்கிறார், டெய்லரிங் யூனிட் நடத்தி நிறைய பெண்களுக்கு வேலை கொடுக்கிறார். எனது வயதுடைய பெண்களுக்கு,
உங்கள் வயதுடைய பெண்களுக்கு தெரிந்ததில் பாதிக்கூட தெரியாது. திறமையிலும் பாதிக்கூட கிடையாது.
பெரிய நாயகர்களின் படங்களை இயக்குநர்களுக்கு ஒரு வேண்டுகோள்.
உங்களுடைய படங்களில் பெண்களுக்கு கொஞ்சம் மரியாதை கொடுங்கள். அம்மா, தங்கச்சி, மனைவி என உங்களைச் சுற்றியிருக்கும் பெண்களின் கதாபாத்திரங்களை படங்களின் நாயகிக்கு கொடுங்கள்.
வீட்டில் இருக்கும் பெண்களைப் போன்று நாயகிக்கு உடைகள் கொடுக்க முடியாது என தெரியும். தயவு செய்து கொஞ்சம் அறிவாளித்தனமான கதாபாத்திரங்கள் கொடுங்கள்.
காமெடியன் அருகில் நிற்க வைத்து இரட்டை அர்த்த வசனங்களைப் பேச வைக்காதீர்கள். மிக கேவலமான அறிமுக காட்சியை கொடுக்காதீர்கள்.
படங்களில் நாயகன் பின்னால் ‘நாயகி ஐ லவ் யூ’ என்று சொல்லிக் கொண்டே திரிவதை நிறுத்துங்கள். ஒரு நாயகனுக்கு 4 நாயகிகள் வைத்தீர்கள் என்றால்,
இளைஞர்களும் நம்மளும் 4 காதலிகள் வைத்துக் கொள்ளலாம் என எண்ணுவார்கள். படத்தில் ஒரு நாயகனுக்கு ஒரு நாயகி போதும். சமூக பொறுப்புடன் நடந்து கொள்வோம்.
சூர்யா பேசும்போது ” ஜோதிகா பேசிய பிறகு நான் பேச வேண்டாம் என நினைத்தேன். ஆனால், தயாரிப்பாளர் என்கிற முறையில் பேசிவிடுகிறேன்.
’36 வயதினிலே’ படத்துக்குப் பிறகு எதிர்பார்த்த மாதிரி கதைகள் அமையவில்லை. காத்திருந்தோம் .
குற்றம் கடிதல் கொடுத்த பிரம்மா வந்தார் . அவர் நினைத்து இருந்தால் அடுத்ததாக ஒரு பெரிய நடிகரோடு படம் செய்திருக்கலாம்.
ஆனால் இயக்குநர் பிரம்மா பெண்களை முன்னிலைப்படுத்தி கதையை உருவாக்கி கொண்டு வந்தார். அதுதான் இந்தப் படம்

இப்போது ஜோதிகா பேசிய பிறகு நானும் பொறுப்போடு இருக்க வேண்டும் என நினைக்கிறேன். அடுத்தடுத்த படங்களில் எப்படி சரி செய்து கொள்ள முடியுமோ, அப்படி செய்வேன்.
பொழுதுபோக்கிற்காக நிறைய படங்கள் செய்து கொண்டிருக்கிறோம். ஒரு நல்ல புத்தகம், நல்ல பேசு, நல்ல உரையாடல் என அனைத்துமே வாழ்க்கையை ஊக்குவிக்கும்.
நான் நடிக்கும் படங்களை விட, தயாரிக்கும் படங்களை சமூக பொறுப்போடு தயாரிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
இயக்குநர் பிரம்மா சொன்னது போல ‘மகளிர் மட்டும்’ படம், பெண்களைக் கொண்டாடும் படமாக இருக்கும்” என்றார்