கவிதாலயா சரவணன் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ரவி மரியா, ராதாரவி, பழ. கருப்பையா, நாஞ்சில் சம்பத், இயக்குனர் பேரரசு, கஞ்சா கருப்பு, கவிதாலயா சரவணன், வருண் நடிப்பில் ராம் தேவ் என்பவர் எழுதி இயக்கி இருக்கும் படம்.
காமராஜர் பள்ளிகளைத் திறந்து போட்ட சத்துணவில் படித்து முன்னேறிய பச்சமுத்து பழனிமாணிக்கம் (ராதாரவி) என்ற தொழிலதிபர், கிராமத்துக்கு வந்து பால்யகால நண்பர் ஒருவரை சந்திக்கிறார். காமராஜர் சொந்த தொகுதியிலேயே அந்தக் காலத்தில் தோற்கடிக்கப்பட்டத்தில் பச்சமுத்துவுக்கு இன்றும் வருத்தம் உண்டு .
கனிம வளங்களை கொள்ளையடிப்பவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்துவது போல நடத்தி, சம்மந்தப்பட்ட கொள்ளையர்களிடம் இருந்து பணம் வாங்கி பிரபலமாகிறார் போலிப் போராளி நபர் ( ரவி மரியா) ஒருவர். அவருக்கு இரு நண்பர்கள் ( கஞ்சா கருப்பு, வருண்)
போலிப் போராளியை கட்சி ஆரம்பிக்க சொல்லி பணம் போடுகிறார் பச்சமுத்து. போலிப் போராளி நல்லது செய்வது போல வீடியோ எடுத்து அதை ரீல்ஸ்களாக செல்போன் மூலம் மக்களுக்கு பரப்பி, போலிப் போராளியை மேலும் பிரபலமாக்குகிறார் பச்சமுத்து.
பாட்டிலுக்கு பத்து ரூபாய் வாங்கும் அரசு, டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான போராட்டம் இவற்றையும் ஆளுங்கட்சிக்கு எதிராக பயன்படுத்திக் கொள்கிறார்
நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுக்கிறார் போலிப் போராளி . பாரம்பரியக் கட்சிகள் தடுமாறுகின்றன.
அது தவிர செல்போன் லிங்கை கிளிக் செய்து கட்சியில் சேர்ந்தால் போன் ரீசார்ஜ் , கட்சிக்கு ஓட்டுப் போடுபவரில் ஒருவருக்கு சி எம் பதவி… என்று எல்லாம் வாக்குறுதிகள்.
அதாவது காமராஜரை தோற்கடித்த மக்களை பழி வாங்குகிறாராம் காமராஜரால் படித்து முன்னேறிய பச்சமுத்து .
சி எம் ஆகும் ஆசையில் மக்கள் எல்லோரும் ;போலிப்போராளி கட்சிக்கு ஒட்டுப் போடுகின்றனர். நடந்தது என்பதே படம்.
திராவிட கட்சிகளை , தவெ க வரை விமர்சிக்கும் படம். சரிதான். ஆனால் அது படமாக இருக்க வேண்டாமா? சும்மா பேஸ்புக்கில் வரும் பதிவுகளை கமெண்டுகளை மட்டும் வைத்துக் கொண்டு ஒவ்வொன்றையும் கோந்து போட்டு ஒட்டினால் அது படம் ஆகி விடுமா?
படத்தின் பெயரே தப்பு. மக்கள் தலைவா for sale என்று பெயர் வைத்துள்ளார்கள்..
ஒன்று…. மக்கள் தலைவா என்று நிறுத்திக் கொள்ள வேண்டும். அல்லது மக்கள் தலைவர் for sale என்று இருக்க வேண்டும் . இப்படி, ஓர் அரசியல் படத்தில் படத்தின் பெயரே தப்பாக இருந்தால் அந்தப் படம் எப்படி இருக்குமோ அப்படியே இருக்கிறது இந்தப் படம்
உருப்படியாக ஒரு காட்சி எடுக்கப்படவில்லை. ராதா ரவி, பழ. கருப்பையா தவிர மற்ற எல்லோரும் எல்லாம் சும்மா பேசிக் கொண்டே இருக்கிறார்கள். படத்தில் பெண் கதாபாத்திரங்களே இல்லை.
போலிப் போராளி காதலிக்கிறார் என்று ஒரு பாடல் காட்சியில் ரவிமரியாவை விட வயசான இரண்டு அத்தைகள் வந்து ஆடி விட்டுப் போகிறார்கள்
இன்றைய அரசியல் பற்றிய படத்தில் உருப்படியாக ஒரு பெண் கதாபாத்திரம் கூட இல்லை.
இயக்கம், ஒளிப்பதிவு, பாடல், படத்தொகுப்பு என்று எதிலும் நேர்த்தி இல்லை.
கார் போனால் போகிறது… போகிறது… போகிறது.. போய்க் கொண்டே இருக்கிறது.
நடந்தால் நடக்கிறார்கள்….நடக்கிறார்கள்… நடக்கிறார்கள்.. நடந்து கொண்டே இருக்கிறார்கள்.
போன் பார்த்தால் பார்க்கிறார்கள்… . பார்க்கிறார்கள்.. பார்க்கிறார்கள்… பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள்
தேவை இல்லாத ஷாட்கள்.. நீளநீளமாக .. கேமரா வைத்தால் மணிக்கணக்காக பேசுகிறார்கள் …
இத்தனைக்கும் படம் ஒரு மணி நேரம் ஐம்பது நிமிடம்தான். ஆனால் மூன்று மணி நேரம் ஓடியது போல இருக்கிறது .
பொதுவாக பணம் போடும் சினிமா தயாரிப்பாளர்களுக்கு ஒரு விஷயம்.
எதைச் சொல்கிறோம் என்பது விஷயம். எப்படி சொல்கிறோம் என்பது உத்தி .
ஒரு விஷயத்தை சிறுகதையாக சொல்கிறோமா, நாவலாக சொல்கிறோமா, தெருக்கூத்தாக சொல்கிறோமா, நாடகமாக சொல்கிறோமா. டி வி சீரியலாக சொல்கிறோமா, வெப் சீரிஸ் ஆக சொல்கிறோமா, சினிமாவாக சொல்கிறோமா என்று பார்த்து, அதற்கேற்ப எழுத வேண்டும். அதற்கு ஏற்ப எடுக்க வேண்டும் .
அப்படி சரியாக எழுதி எடுக்கத் தெரிந்தவர்களிடம் எடுக்கச் சொல்ல வேண்டும். அதற்கு தயாரிப்பாளர்களுக்கு சரியான கதையை, படைப்பாளிகளை தேர்ந்தெடுக்கும் திறமை வேண்டும். ”நீங்க நடிக்கலாம் சார் ரெண்டு சீன்ல உங்களை பார்த்து எல்லாரும் ஜால்ரா அடிக்கிற மாதிரி சீன் வச்சுக்கலாம்” என்ற ஜாலராக்களுக்கு மயங்க கூடாது.
நாம் எடுக்கிற படம் என்று கிளுகிளுத்துப் பார்த்தால் எல்லாமே நல்லா இருக்கற மாதிரிதான் தெரியும்.. இந்தப் படத்தை நாம காசு கொடுத்துப் பாப்போமா என்று யோசிக்கணும்.
அப்படி எல்லாம் இல்லாமல் குளிர்விக்கும் வார்த்தைகளை நம்பினால் படம் விக்க முடியாது. இதை அவர்கள் உணர வேண்டும்.
சரி, சொன்ன முறையான உத்திதான் சரி இல்லை . சொன்ன விசயமாவது நன்றாக இருக்கிறதா என்று பார்த்தால் அதிலும் அரைவேக்காட்டுத்தனம்.
காமராஜரால் படித்து முன்னேறிய ஒருவர், காமராஜரை தோற்கடித்த மக்களை பழிவாங்க தவறான அரசியலை உருவாக்குவாரா? . அடுத்து வரும் சமுதாயத்தை இவர் கெடுப்பதற்க்குத்தான் இவரை காமராஜர் படிக்க வைத்தாரா? சரி, நாட்டைக் கெடுத்தாச்சு. இதை காமராஜர் விரும்புவாரா?
மொபைல் ரீசார்ஜ் செய்து கட்சியில் மெம்பர் ஆக்கலாம் . ஆனால் ஒட்டுப் போடுபவர்களில் இருந்து ஒருவரை குலுக்கல் முறையில் சி எம் ஆக்குவோம் என்று அறிவிக்க முடியாது.
பதினெட்டு வயது முதலே ஒட்டுப் போடலாம். ஆனால் எம் எல் ஏ ஆவதற்கு இருபத்தி ஐந்து வயது ஆகி இருக்க வேண்டும். முதல்வர் பதவிக்கு அடிப்படை தகுதி எம் எல் ஏ வாகவோ அல்லது எம் எல் சி ஆகவோ இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் எம் எல் சி பதவி இல்லை.
இப்படி, அரசியல் பற்றிய ஒரு பள்ளி மாணவனுக்கு உரிய அடிப்படைப் புரிதல் கூட இல்லாமல் ஒரு படத்தை எடுத்து தியேட்டருக்கும் அனுப்புகிறார்கள் என்றால் என்ன சொல்ல?
ஓர் அரசியல் படம் என்பது என்ன? லாஜிக்குக்குள் நடக்கிற மேஜிக் ஆக இருக்க வேண்டும். அதுதான் திறமை. .அதைத்தான் மக்கள் கொண்டாடுவார்கள் .
லாஜிக்கும் இல்லாமல் மேஜிக்கும் இல்லாமல் -வடிவேலு சொல்கிற மாதிரி- லஜக் பஜக் மொஜக் காக இருந்தால் எப்படி? படம் பாக்கிறவன் பாவம் இல்லியா?
அமைதிப்படை எடுத்த மணிவண்ணன் இருந்த தமிழ் சினிமாவில் இப்படி ஒரு படம் வருவது எல்லாம் காலக்கொடுமை.