ஜே.எஸ்.எம். பிக்சர்ஸ் ஏ.ஆர். ஜாபர் சாதிக் தயாரிப்பில் குபேந்திரன் காமாட்சி இயக்கத்தில் ‘கயல்’ ஆனந்தி நடிக்கும் படம் ‘மங்கை’ இப்படத்தில் ஆனந்தி, துஷி, பிக் பாஸ் புகழ் ஷிவின், ராம்ஸ், ஆதித்யா கதிர், கவிதா பாரதி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ‘கிடா’ படத்திற்கு இசையமைத்த தீசன் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்வில் படத்தின் நடிகர் நடிகைகள் மற்றும் பல முக்கிய திரைக்கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசும்போது, ” குபேரன் அண்ணா ‘மங்கை’ போன்ற பொறுப்பான படங்களை தொடர்ச்சியாக செய்ய வேண்டும். ‘மங்கை’ ஒரு நல்ல கலைப் படமாகவும், வணிக ரீதியாக வெற்றியடையும் படமாகவும் அமைய வேண்டும் என்று விரும்புகிறேன், வாழ்த்துகிறேன். நல்ல ஒரு ஆக்கபூர்வமான விரிந்த பொருள் கொண்ட கதைகள் வணிகரீதியாகவும் வெற்றி பெறும் போது, பெரிய பெரிய கலைப் படைப்புகள் நிறைய வரும் என்று நினைக்கிறேன். வெறும் வசூலுக்காகவே திரைப்படம் இல்லாமல், நல்ல கலைப்படங்கள் வசூலாக மாற வேண்டும். அதற்கு நாம் ஒரு புறம் பார்வையாளர்களையும் தயார் செய்ய வேண்டியது இருக்கிறது. ஒரு புறம் இலக்கியத்தின் வாயிலாகவும், மறுபுறம் சிறந்த உலகத் திரைப்படங்களை கொண்டு போய் மக்களிடம் சேர்ப்பதின் மூலமாகவும், சிறுகதை, நாவல் மற்றும் கவிதை போன்ற வாசிப்பு பயிற்சியினை பள்ளி வகுப்புகளில் இருந்து துவங்குவதன் மூலமாகவும் இந்த மாற்றத்தை கொண்டு வரமுடியும் என்று நம்புகிறேன்.”என்றார்.
ஒளிப்பதிவாளர் எஸ்.ஜே.ஸ்டார் அவர்கள் பேசும்போது, “. ‘மங்கை’ திரைப்படம் எனக்கும் ஒரு சிறப்பான படம் என்று தான் சொல்ல வேண்டும்.”என்றார்
ஸ்டண்ட் இயக்குநர் ராம்குமார் அவர்கள் பேசும்போது, “இப்படத்தின் பாதி வெற்றியை இசையமைப்பாளர் தன் பாடல்களில் நிரூபித்துவிட்டார். சில பாடல்கள் கேட்க கேட்கதான் பிடிக்கும். இப்படத்தின் இரண்டு பாடல்களும் கேட்டவுடனே பிடித்துவிடும். இயக்குநரின் படம் எப்போதும் தோற்காது. ஒரு படத்தின் ஹீரோ என்பவர் இயக்குநர் தான். “என்றார்.
படத்தொகுப்பாளர் பார்த்திபன் பேசும்போது, “இதுதான் எனக்கு முதல் படம், முதல் மேடை. நான் இங்கு நிற்பதற்கு காரணமாக இருக்கும் சிலருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். முதலில் என் அப்பா அம்மாவுக்கு நன்றி. அவர்கள் இல்லாமல் நான் இல்லை. என் மனைவிக்கு நன்றி. அவரின் தீவிரமான பிரார்த்தனைதான் நான் இன்று இங்கு நிற்பதற்கு காரணம் என்று நான் நினைக்கிறேன். என் முதல் தயாரிப்பாளர் ஜாஸ்வா அவர்களுக்கும், இயக்குநர் அருள் சக்தி முருகன் அவர்களுக்கும் நன்றி. என் குரு எடிட்டர் ஆண்டனி சாருக்கும் நன்றி. இப்படத்தின் இயக்குநருக்கு நன்றி.
படத்தில் பணியாற்றத் துவங்கும் முன்னர் நான் இரண்டு முறை மட்டுமே இயக்குநரைச் சந்தித்தேன். என் வேலைகளைப் பார்த்துவிட்டு, உடனடியாக என் கையில் அட்வான்ஸ் கொடுத்து, நீங்கள்தான் இப்படத்தின் எடிட்டர் என்று கூறி விட்டார். எனக்கு இப்படத்தில் எடிட்டிங் பணிகளில் முழு சுதந்திரம் கொடுத்தார். அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. என் மீது அவர் வைத்த நம்பிக்கைக்கு ரொம்ப நன்றி. படத்தின் நாயகி ஆனந்தி அவர்கள் ஒவ்வொரு ஷாட்டிலும் அவ்வளவு அருமையாக நடித்திருந்தார். அது கோபமோ சிரிப்போ ஒவ்வொரு ப்ரேமிலும் அவ்வளவு அழகாக இருந்தார். கார் சீக்குவன்ஸ் காட்சிகளில் துஷி மிகவும் சிறப்பாக நடித்திருந்தார்.ஏனென்றால் ஒரே நேரத்தில் கார் ஓட்ட வேண்டும், டயலாக் பேச வேண்டும், பெர்ஃபாமன்ஸ் செய்ய வேண்டும். மலைப்பகுதியில் கார் ஓட்டுவது எளிதல்ல… அதை திறம்பட செய்த நாயகனுக்கு வாழ்த்துகள். “என்றார்.
நடன இயக்குநர் ராதிகா பேசும்போது, “மேடையில் இருக்கும் அனைத்து ஜாம்பவான்களுக்கும் வணக்கம். இதை ஒரு படம் என்று சொல்வதை விட படைப்பு என்று சொல்லலாம். இப்படி ஒரு அற்புதமான படைப்பில் நானும் ஒரு சிறிய பங்காற்றியுள்ளேன் என்பது மிகப்பெரிய விஷயம். நடனம் அமைத்திருக்கிறேன் என்பதை விட இப்படத்தில் இயக்குநர் மிகப்பெரிய பொறுப்பைத் தூக்கிக் கொடுத்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும். அந்தப் பொறுப்பை நான் சரியாக செய்து முடித்திருக்கிறேன் என்று நம்புகிறேன். ஏனென்றால் இது ரொம்பவே சவாலான பாடல்.
ஒரு காருக்குள்ளாகவே அழகான மூவ்மெண்டுகள் உடன் என்டர்டெயின்மென்ட் ஆகவும் இருக்க வேண்டும், கருத்தாழம் மிக்கதாகவும் இருக்க வேண்டும் என்பதால் இயக்குநர் அதை எனக்கு எளிமையான முறையில் விளக்கினார். நான் அதை அப்படியே எடுத்துக் கொண்டு செய்து கொடுத்திருக்கிறேன்.
ஆனந்தியை பொருத்தவரை அவர் தேர்ந்தெடுக்கும் படங்கள் எல்லாமே வித்தியாசமானதாக இருக்கும். ‘மங்கை’யும் அப்படிப்பட்ட ஒரு பொறுப்பான சமூகத்திற்கான படமாக ஆனந்தியால் கருதப்பட்டு அவரால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது என்று நான் நினைக்கிறேன். கண்டிப்பாக இது பெரிய அளவில் வெற்றி பெறும்”என்றார்
பாடகி சாக்ஷி பேசும்போது, இந்த நிகழ்விற்கு வந்திருக்கக்கூடிய அனைவருக்கும் நன்றி. நான் வேண்டுமானால் சிங்கப்பூரில் இருந்து வந்திருக்கலாம். ஆனால் நீங்கள் எல்லோரும் இங்கேயே இருந்து கடின உழைப்பைக் கொட்டி இப்படத்தை உருவாக்கி இருக்கிறீர்கள். இந்த அளவிற்கு இப்படத்தைப் பற்றி பேசுகிறோம் என்றால், ஒரு பெண்ணைப் பற்றி பேசுகிறோம் என்றால், நாம் அதை நினைத்து பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.”என்றார்.
‘கிடா’ படத்தின் இயக்குநர் ரா.வெங்கட் பேசும்போது, இந்த மேடையினை எனக்குக் கொடுத்த குபேந்திரன் சார் அவர்களுக்கு நன்றி. தயாரிப்பாளருக்கு பெரிய நன்றி. ஏனென்றால் இது போன்ற கண்டெண்ட் தொடர்புடைய படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் இப்பொழுது மிகவும் குறைவு. இப்படத்தில் பணியாற்றிய கார்த்திக் அண்ணா அவர்களுக்கு நன்றி. அவர் ஆலமரம் போன்றவர். எத்தனையோ பேருக்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பவர் அவர். இசையமைப்பாளர் தீசன் அவர்களுக்கு என் படம் தான் முதல்படம். அவரை அறிமுகப்படுத்தியதை எண்ணி பெருமைப்படுகிறேன். தீசன் இன்னும் சில ஆண்டுகளில் மிக முக்கியமான இசையமைப்பாளராக இருப்பார். படத்தில் எல்லா பாடல்களும் சிறப்பாக வந்திருக்கிறது. படம் பார்த்துவிட்டேன், சிறப்பாக வந்திருக்கிறது.”என்றார்.
நடிகை மற்றும் பிக்பாஸ் புகழ் ஷிவின் பேசும் போது, “இப்படத்தின் ஒரு பகுதியாக நானும் இருக்கிறேன் என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் இயக்குநர் குபேந்திரன் அவர்களின் பார்வையும் சிந்தனையும் தான் என்று நினைக்கிறேன். இசை என்று பார்த்தால், இன்றைய பரபரப்பான சூழலில் தீசன் பொறுப்புணர்வுடன் செயல்படுகிறார் என்று தோன்றுகிறது. இப்படத்தில் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு உணர்வை அழகாக வெளிப்படுத்துகிறது. ஒரு படத்தின் இசை அதைத்தான் செய்ய வேண்டும். அதை திறம்பட செய்திருக்கிறார் தீசன். ஆனந்தியை நான் பல நேரங்களில் ஆச்சரியமாக பார்த்திருக்கிறேன். துஷியும் அப்படித்தான். இவர்களுடன் நடிப்பது சிறந்த அனுபவத்தைக் கொடுத்தது.”என்றார்
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ பட இயக்குநர் ரோஹந்த் பேசும்போது, “எப்படி குபேந்திரன் குடும்பத்திற்கு இது மகிழ்ச்சியான தருணமோ அதே போல் தான் எனக்கும் இது மகிழ்ச்சியான தருணம். எல்லா உதவி இயக்குநர்கள் எழுதும் கதையும் ஏதாவது ஒரு டீக்கடையில் இருந்து தான் துவங்கியிருக்கும். இப்படத்தின் கதையும் அப்படித்தான் துவங்கியது. இக்கதையினை மிகவும் எளிமையாக என்னிடம் சொல்லி, இதை ஒரு ஐபோனில் ஷூட் செய்ய வேண்டும், ஒரு டிராவலிங் ஸ்கிரிப்ட் 40 நிமிடங்களுக்குள் வரும் என்று தான் பேசத் துவங்கினோம்.. ஐபோனில் எடுக்க வேண்டும் என்று நினைத்த படம் ஜாஃபர் சாரை சந்தித்த பின்னர் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகும் பிரம்மாண்ட படமாக வளர்ந்திருக்கிறது,.
ஆனந்தி அவர்களின் நடிப்பைப் பற்றி கேட்கவே வேண்டாம். துஷியின் கைகளில் காரைக் கொடுத்த பின்னர் அவரின் முழுமையான நடிப்புத் திறமை வெளிவந்தது. இசையமைப்பாளர் தீசன் எனக்கு அறிமுகம் கிடையாது. அவரின் பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
சமத்துவம், சமூக நீதி, பாலின சமத்துவம் எல்லாம் சேரும் போது சமுதாயம் உயரும். அந்த வகையில் இப்படம் மக்கள் மற்றும் சமூகத்தின் நிலையை உயர்த்தும்”என்றார். .
‘மேற்குதொடர்ச்சி மலை’ பட இயக்குநர் லெனின் பேசும்போது, “கலை, இலக்கியம் யாவும் மக்களுக்கே என்கின்ற அடிப்படையில் ‘மங்கை’ படம் உருவாகி உள்ளது என்று தெரியும். இப்படத்தின் பாடல்கள் மற்றும் சில காட்சிகளைப் பார்த்த பின்னர்தான் டைட்டில் டிசைனை கவனித்தேன். ஆண் கதாநாயகர்களை மையப்படுத்திய டைட்டிலைப் பார்த்தால் கம்பீரமாக இருக்கும். ஆனால் இங்கு மங்கை கீறப்பட்டு இருக்கிறது, காயப்பட்டிருக்கிறது, உடைந்திருக்கிறது. சிதைந்திருக்கிறது, தாக்கப்பட்டு இருக்கிறது. அதற்குக் கீழ் டிராவல் ஆஃப் வுமன் என்கின்ற கேப்ஷன் இருக்கிறது. இது ஒரு மிகப்பெரிய அரசியல். எல்லா காலத்திலும் எல்லா சாதியிலும் எல்லா மதத்திலும் அடக்கி ஒடுக்கப்படுபவர்களாக பெண்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் ‘மங்கை’ என்கின்ற இந்த டைட்டில் மற்றும் திரைப்படம் முக்கியத்துவம் பெறுகிறது. குழுவினருக்கு வாழ்த்துகள்.
விழா நாயகன் தீசன் அவர்களுக்கு வாழ்த்துகள், பாடலாசிரியர்கள் பிற தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். நாயகன் துஷிக்கும் வாழ்த்துகள். தோழர் ஆனந்தி எப்போதும் ஆழ அகலக் கதைகளையே தேர்ந்தெடுப்பார். அவர் தேர்வு செய்யும் முறை எனக்கு மிகவும் பிடிக்கும். கடைசி வரைக்கும் இப்படியே இருங்கள் தோழர் ஆனந்தி. பெண்களை உடலாகப் போதிக்காமல் ஒரு உயிராக பாவிக்கும் எண்ணத்தை இப்படம் முன்னெடுக்கும்”என்றார்
நடிகர் துஷ்யந்த் பேசும்போது, “தீசன் பிரதரின் பாடல்கள் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது. இப்படி அருமையான பாடல்களைக் கொடுத்த உங்களுக்கு மிக்க நன்றி. மலைப் பாதையில் இரண்டு கேமராக்களைக் கட்டிய காரை கவனமாக ஓட்டியபடி, பெரிய பெரிய வசனங்களைப் பேசி, ஆனந்தி மேடத்திற்க்கு ஈடு கொடுத்து நடிப்பது மிகவும் சவாலாக இருந்தது. “என்றார்.
இசையமைப்பாளர் தீசன் பேசும்போது, ” இயக்குநர் குபேந்திரன் காமாட்சி எனக்கு என்ன தேவையோ அதைவிட சிறப்பான வசதிகளை செய்து கொடுத்தார். அவருக்கு நன்றி. பத்திரிகையாளர்கள் தான் என் முந்தைய படமான ‘கிடா’வை மக்களிடம் சென்று சேர்த்தீர்கள். அது போல் இப்படத்தையும் மக்களிடம் கொண்டு சேர்த்து ஆதரவு கொடுக்க வேண்டும்.”என்றார்.
நடிகர் ஜெயப்பிரகாஷ் பேசுகையில், “‘மங்கை’ திரைப்படத்தினை சிறப்பாக வெளியீட்டிற்கு முன்னெடுத்துச் செல்லும் தயாரிப்பாளர் ஜாஃபருக்கு வாழ்த்துகளும் நன்றியும். ஏனென்றால் ஒரு தயாரிப்பாளர் வெற்றி பெற்றால் இன்னும் பத்து இயக்குநர்கள் வருவார்கள். இங்கு சேரன் சார், சசிக்குமார் சார் மற்றும் சமுத்திரக்கனி சார் மூவரும் வர வேண்டியது. ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் அவர்களால் வர முடியவில்லை. ‘பசங்க’ படத்தின் ஆடியோ வெளியீட்டில் எனக்குத் துணைக்கு நான் என் பையன் துஷியை அழைத்துக் கொண்டு வந்திருந்தேன். அப்படித் தான் துஷியின் திரை பயணம் துவங்கியது. அவர் நடிக்க வருவார் என்று நினைத்ததே இல்லை. ஏனென்றால் நான் நடிக்க வருவேன் என்பதே என்னால் நம்ப முடியாத விஷயம். ஆனந்தி மிகப்பெரிய கலைஞர். அவருடன் நடித்ததெல்லாம் துஷிக்கு நல்ல அனுபவம். அவன் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறான்.
என் பிள்ளைகளுக்கு நான் கற்றுக் கொடுத்த முக்கியமான விசயம் “Don’t do injustice to woman”. நல்ல படங்களை எப்போதும் கொண்டு சேர்க்கும் பத்திரிகையாளர்களாகிய நீங்கள் இப்படத்தையும் கொண்டு போய் சேர்ப்பீர்கள் என்று நம்புகிறேன்.”என்றார்.
இயக்குநர் ஹலிதா சமீம் பேசுகையில், “இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் மிக நன்றாக வந்திருக்கின்றன. எல்லோருக்கும் உதவுவதற்காகவே ஒருவர் இருக்கிறார் என்றால் அது கார்த்திக் துரைதான். தீயாக இருக்கும் தீசனின் பாடல்கள் சிறப்பாக வந்திருக்கின்றன. சென்ற ஆண்டின் முழுமையான திரைப்படமாக நான் ‘கிடா’ திரைப்படத்தை தான் பார்க்கிறேன். துஷி ‘ஈசன்’ திரைப்படத்தில் மிகச்சிறப்பாக நடித்திருப்பார். அவருக்கு வாழ்த்துகள். இப்படம் பேச இருக்கும் கருத்திற்காக நான் இப்படத்தை பார்க்க ஆவலாக இருக்கிறேன்.”என்றார்.
தயாரிப்பாளர் ஜாஃபர் பேசும்போது, “எல்லோருக்கும் வணக்கம். திரைப்பட இயக்குநர்கள், நடிகர் நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் வணக்கம். ஒரு திரைப்படத்தை எடுப்பது மட்டுமே முக்கியமான வேலை இல்லை. அதை சரியாக மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதும் முக்கியமான வேலை என்று நான் நம்பி உழைத்துக் கொண்டிருக்கிறேன். ‘மங்கை’ மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. துஷி, கயல் ஆனந்தி மற்றும் சிறப்பான பாடல்கள் என ஒவ்வொன்றாக படத்தில் சேர்ந்து கொண்டே இருந்தார்கள். இசையமைப்பாளராக கிடைத்த வாய்ப்பை தீசன் சிறப்பாக பயன்படுத்தி இருக்கிறார். ‘இறைவன் மிகப்பெரியவன்’ என்பதில் இருந்து தான் இப்பயணம் துவங்கியது. பத்திரிகை நண்பர்கள் இப்படத்திற்கு ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.”என்றார்.
நடிகை ஆனந்தி பேசும்போது, ” :கயல்’ வெளியாகி பத்து ஆண்டுகள் கழித்து ‘மங்கை’ படம் வெளியாக இருக்கிறது. ‘மங்கை’ எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது நான் படத்தில் நடிக்க வந்துவிட்டேன். அப்போது சினிமா குறித்து ஒன்றும் தெரியாது. இப்பொழுதும் பெரிதாக ஒன்றும் தெரியாது. இப்பொழுது தான் கற்றுக் கொண்டிருக்கிறேன். என் படங்களை எடுத்துப் பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கும். கண்டிப்பாக இப்படத்தின் மூலம் என் கரியர் ஒருபடி முன்னேறி இருக்கிறது என்று நம்புகிறேன். படம் பாருங்கள். கண்டிப்பாக உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும்.
தயாரிப்பாளர் ஜாஃபர் எங்களுக்கு கிடைத்த வரம். படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க அவ்வளவு உழைத்திருக்கிறார். எக்ஸீகியூட்டிவ் புரொடியூசர் கார்த்திக் சார் எல்லா வேலைகளையும் எடுத்து செய்வார். எல்லாவித உதவிகளையும் எல்லோருக்கும் செய்பவர். அவருக்கு நன்றி. இன்றைய விழா நாயகன் தீசன் அவர்களுக்கு வாழ்த்துகள், மிகச்சிறப்பாக ஒளிப்பதிவு செய்த ஒளிப்பதிவாளர் ஸ்டார் அவர்களுக்கு நன்றி. ஷிவின் எனக்கு ஒரு நல்ல தோழியாக மாறி இருக்கிறார். அது போல் துஷி எனக்கு நல்ல நண்பர். ஜே.பி சாரின் பையன் என்பதை எல்லாம் காட்டிக்கொண்டதே இல்லை.நல்ல படங்களை எப்போதும் ஆதரிப்பீர்கள். இப்படத்திற்கும் உங்கள் ஆதரவை தாருங்கள். ”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.”என்றார்
மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் பேசும்போது, “என் அம்மா, அப்பா, மனைவி மற்றும் கடவுளுக்கு நன்றி. என் மனைவிக்கு ஏன் நன்றி சொல்கிறேன் என்றால் வீட்டில் இருக்கும் மங்கை நன்றாக இருந்தால் தான் வெளியில் ஜெயிக்க முடியும். இந்த ‘மங்கை’ வெற்றி பெற வாழ்த்துகள். வாய்ப்பு கொடுத்த ஜாஃபர் சாருக்கு நன்றி. இயக்குநர் குபேந்திரன் சார் சொன்னார் நாங்க ஒரு சின்ன படம் பண்றோம், சப்போர்ட் செய்யணும் என்று. படம் சின்ன பட்ஜெட் பெரிய பட்ஜெட் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என்று சொன்னேன். இப்படத்தின் க்ளைமாக்ஸ் மங்கைகளுக்கும் மட்டுமின்றி ஆடவர்களுக்கும் மிக முக்கிய பாடமாக அமையும் என்று கூறி விடை பெறுகிறேன்.”என்றார்
இயக்குநர் குபேந்திரன் காமாட்சி பேசும்போது, ” தீசன் எப்போதுமே பாஸிட்டிவ் எனெர்ஜியுடன் இருப்பார். அவருக்கு மிக்க நன்றி. படப்பிடிப்புக்கு போகும் போது ஒரு பாடல் மட்டும்தான் இருந்தது. பின்னர் அது ஐந்து பாடல்களாக ஆனது. அதற்கு தீசனின் இசை ஒரு காரணம். பாடலாசிரியர்கள் கபிலன், யுகபாரதி, கார்த்திக் நேத்தா அனைவருக்கும் நன்றி.
படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. தயாரிப்பாளர் ஜாஃபர் சாருக்கு நன்றி,”என்றார்.