பிக் வே பிக்சர்ஸ் சார்பில் சபாபதி தயாரிக்க, ராதிகா சரத் குமார், பருத்தி வீரன் சரவணன் விஜி சந்திரசேகர், லவ்லின் சந்திரசேகர் நடிப்பில் ஜி ஆர் எஸ் கதாநாயகனாக நடித்து இயக்கி இருக்கும் படம் மருத . மதுரை என்பதன் பாமர மொழிச் சொல்.
உறவுகள் விட்டுப் போய் விடக் கூடாது என்பதற்காக தங்கைகளுக்கும் அவர்கள் குடும்பத்தார்களுக்கும் அண்ணன்மார்கள் செய்முறை செய்யும் பழக்கம் ஒரு காலத்தில் புத்திசாலித்தனமாக உருவாக்கப்பட்ட நிலையில், காலப் போக்கில் செய்முறை என்பது கட்டாயக் கடன் போல ஆகி அதில் கவுரவம் எல்லாம் கலந்து எப்படி பகைக்கும் இழப்புக்கும் காரணம் ஆகிறது என்பதை சொல்லும் படம் .

பங்காளியின் ( வேல ராம மூர்த்தி) வஞ்சகத் தூண்டுதலால் தங்கையின் (ராதிகா) மகன் காது குத்துக்கு சக்திக்கு மீறி பணம் நகை என்று என்று செய்முறை செய்கிறார் பாசக்கார அண்ணன்( பருத்தி வீரன் சரவணன்) அதில் அண்ணன் மனைவிக்கு (விஜி சந்திரசேகர்) அவளது ஆத்தாக்காரி போட்ட சங்கிலியும் இருக்க, இயல்பிலேயே ஆங்காரம் பிடித்த அந்த அண்ணி ,
வட்டிக்குக் காசுக்கு பணம் கொடுத்து இரக்கம் இல்லாமல் வசூல் செய்யும் நபராக ஆகிறாள்.
தங்கையின் கணவனும் செய்முறையாக வந்த காசை குடித்து அழித்து விட்டு ஒரு நிலையில் அவமானப்பட்டு செத்துப் போக, கோபம் தணியாத அண்ணன் மனைவி மகளின் கல்யாண சமயத்தில் தனது ஏழை விதவை நாத்தனாரிடம் இருந்து , பல வருடம் முன்பு இழந்த செய்முறைப் பணத்தை வட்டியோடு வசூலிக்க , வெறி பிடித்த மிருகம் போல செயல்பட , அப்புறம் என்ன ஆனது என்பதே இந்த மருத.

செய்முறை செய்யும் பழக்கம் உருவானதை சொல்லும் அந்த ஆரம்பக் காட்சி அருமை .
உறவுச் சிக்கல்களை சொல்லும் கதை .. அண்ணனாக் சரவணன் சிறப்பாக நடித்துள்ளார் (மேக்கப் சொதப்பல்)
தங்கையாக ராதிகா பழகிய கேரக்டரில் பாண்டி ஆடி இருக்கிறார்.
நடிக்கும் எல்லோரும் மூச்சு விடாத எஸ் பி பி கணக்காக வசனங்களை பீய்ச்சி அடிப்பதும் ஒரே பாணியில் இழுத்து இழுத்துப் பேசுவதும் நாடகத்தனமும் குறைபாடுகள்.

பல இடங்களில் செய்முறை என்பது பணத்தின் அளவில் இல்லை . மத்தவன் பத்து ரூபாய் வைத்தாலும் தாய்மாமன் ஒரு ரூபாய் வைத்தாலும் தாய் மாமன் வைக்கும் ஒரு ரூபாய்க்குத்தான் மரியாதை . அதுதான் செய்முறை உறவின் நிஜப் பெருமை அதைப் பற்றியும் பேசி இருக்கலாம்.
இறுதிக் காட்சிகளில் நியாயமும் யதார்த்தமும் லாஜிக்கும் இல்லை என்றாலும் நெகிழ வைக்கிறது .