மருதம் @ விமர்சனம்

அறுவர் பிரைவேட் லிமிடெட் சி. வெங்கடேசன் தயாரிக்க, விதார்த்,  ரக்ஷனா , மாறன், அருள்தாஸ் , சரவண சுப்பையா, தினந்தோறும் நாகராஜ், மேத்யூ வர்கீஸ் நடிப்பில் வி.கஜேந்திரன் எழுதி இயக்கி இருக்கும் படம். 

வேலூர் ராணிப்பேட்டை அருகில் கல் புதூர் கிராமத்தில் பரம்பரை பரம்பரையாக சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வாழும் விவசாயி ஒருவர் (விதார்த்) . மனைவி (ரக்ஷனா) மழலை மகன் (மாஸ்டர் கார்த்திக்) . 

தன் விவசாய நிலத்தில் வேலை செய்யும் கூலி ஆட்களுக்கு தன் வீட்டில் சமைத்த உணவை மதிய சாப்பாடாக போடும் அளவுக்கு சிறப்பான விவசாயி அவர். 

ஆனால் தன் மகனைஅரசுப் பள்ளியில் சேர்க்க, அதன் ஆசிரியரே  வந்து அழைத்தும்,  அதை மறுத்து விட்டு  –  பிரபல பெரிய  கான்வென்ட் பள்ளியில் சேர்க்கப் போக,   அவர்கள் நன்கொடையாக மூன்று லட்சம் கேட்கிறார்கள். 

உடனே தன் நிலத்தை அடகு வைத்து மூன்று லட்ச ரூபாய் வாங்குகிறார் விவசாயி.  . நிலம் அவர் தந்தையில் பெயரிலேயே இருக்கிறது; இன்னும் விவசாயி பெயருக்கு மாறவில்லை என்ற நிலையிலும் கடன் கொடுக்கிறார் பைனான்சியர் ( அருள்தாஸ்) 

இந்த நிலையில் விவசாயி நிலத்தில் யாரோ ஒருவர் வந்து காம்பவுண்ட் போட்டு அபகரிக்கிறார் . கேட்டால் ”விவசாயியின் செத்துப் போன அப்பா பல வருடங்களுக்கு முன்பு  SBMI வங்கியில் (புரியுதா?)….

தானிய அரவை எந்திரம் வாங்க , கடன் வாங்கி சில தவணை மட்டும் கட்டியதோடு விட்டு விட்டார். வீட்டுக்கு பல முறை தகவல் சொல்லியும் கடிதம் எழுதியும் பதில் இல்லாததால் அந்த நிலம் ஏலத்துக்கு வந்து விட்டது . அதை நான்தான் வாங்கினேன் ” என்கிறார் காம்பவுண்டு போடுபவர் .

அப்படி ஒரு வங்கியே தெரியாத விவசாயி அந்த வங்கிக்குப் போய் விசாரித்தால் ” உண்மைதான்” என்கிறார் வங்கி மேனேஜர் . 

எனில் வாங்காத லோனுக்கு நிலம் பறிபோனது எப்படி என்ற கேள்வி  எழுகிறது.  

மூன்று லட்சம் வாங்கிய ஆங்கில பள்ளிக்கூடம் ”அது டொனேஷன்தான்  ; சீக்கிரம் வந்து பீஸ் கட்டினால்தான் பையனை ஸ்கூலில் படிக்க அனுமதிப்போம்  ” என்கிறது . 

விஷயம் தெரிந்த பைனான்சியர் உடனே “வாங்கிய காசைத் தரலேன்னா … ” என்கிறார் 

விவசாயியின் காமெடியான நண்பர் ஒருவர் (மாறன் ) இதே போன்ற ஒரு மோசடி லோன் வலையில் சிக்கி , மிகவும் சோக நிலைக்குப் போகிறார் . 

விவசாயியின் குடும்பம் நொடித்துப் போகிறது . மனைவி கூலி வேலைக்குப் போகிறாள் . பக்கத்து வீட்டில் அரிசி இலவசமாக வாங்கி சமைக்கும் நிலைமையும் வருகிறது . 

மோசடிக்கு காரணம் அரசியல்வாதியா? வங்கி அதிகாரிகளா? அல்லது வேறு யாருமா? விவசாயிக்கு நியாயம் கிடைத்ததா இல்லையா ? என்பதே மருதம் . 

சொல்ல வேண்டிய சமூக அக்கறை உள்ள கதை . நல்ல அழகான தமிழ்ப் பெயர் கொண்ட படம் .

ராணிப்பேட்டை மண் மொழியை படத்தில் அழகாக கையாண்டு இருக்கிறார் இயக்குனர் கஜேந்திரன் . மிக இயல்பான மேக்கிங் . பாராட்டுகள். 

விவசாயியாக விதார்த் மிக சிறப்பாக நடித்துள்ளார் . கடைசியில்  நீளமான ஒரே ஷாட்டில் அவரது எக்ஸ்பிரஷன்கள் பிரம்மாதம் . 

பாந்தமான கிராமத்து மனைவியாக அப்படியே வளைய வருகிறார் ரக்ஷனா . சிறப்பான பங்களிப்பு .

மழலை மகனாக வரும் கார்த்திக் (இயக்குனரின் மகன்) கொள்ளை அழகு . நடிப்பு என்றே தெரியாத அளவுக்கு வேலை வாங்கி இருக்கிறார் இயக்குனர் . (படத்தில் கடைசி ஷாட்டை அவன் மேல் போட்டே முடிக்கிறார் .)

மாறன் கஷ்டப்பட்டு சிரிக்க வைக்க முயன்று விட்டு,  கஷ்டமே படாமல் சீரியஸ் நடிப்பில் கவர்கிறார் ,

சரவண சுப்பையா, அருள்தாஸ் அவர்கள் பாணியில் நேர்த்தி . 

தினந்தோறும் நாகராஜ் கேரக்டரை இன்னும் சிறப்பாகப் பயன்படுத்தி இருக்கலாம். 

என் ஆர் ரகுநந்தனின் இசையில் நீதி எழுதி இருக்கும் பாடல்கள் சிறப்பு. 

பின்னணி இசையில்  பாராட்டவும் ஒன்றும் இல்லை. குறை சொல்லவும் ஒன்றும் இல்லை. அருள் சோமசுந்தரத்தின் ஒளிப்பதிவும் சந்துருவின் ஒளிப்பதிவும் அப்படியே . 

சென்னை ராமாபுரம் எஸ் ஆர் எம் கல்லூரியின் பிலிம் டெக்னாலஜி படிப்பின் துறைத் தலைவராக இருப்பவர் இந்தப் படத்தின் இயக்குனர் கஜேந்திரன் . 

நிச்சயமாக அவரிடம் படிக்கும் மாணவர்கள் ஒரு படத்தில் எதை சொல்ல eவேண்டும்  என்று கற்றுக் கொள்வார்கள். அது தமிழ் சினிமாவுக்கு அவர் செய்யும் சேவையாகவே அமையட்டும் 

ஆனால் ஒரு நல்ல கதையை எப்படி சொல்ல வேண்டும் என்று கற்றுக் கொள்வார்களா என்பதில் ஒரு கேள்விக்குறி வருகிறது

இது மிக நல்ல படம் .ஆனால் வெகுஜன மக்களைக் கவரும் வகையில் எடுக்கப்பட்டிருக்கிறதா என்ற கேள்வி அழுத்தமாகவே வருகிறது . 

உண்மையில் நிகழும் விஷயங்களைகதையாக எடுத்துக் கொண்டு  திரைக்கதை அமைக்கும் போது,  காட்சிகள் காரண காரியங்கள் சரியாக இருந்தால்தான் அது ரசிகர்களை பாதித்து கவர்ந்து ஈர்க்கும் . மாறாக மேம்போக்கான காட்சிகள் வைத்தால் ரசிகன் விலகி நிற்க ஆரம்பித்து விடுவான் . 

மருதம் என்ற பெயரை , ஒரு மலையைக் காட்டி அதன் மேல் போடுகிறார். மலை என்பது குறிஞ்சி அல்லவா? 

முதல் காட்சியில் ஒரு பெரிய புன்செய் நிலத்தில் தனியாக விதை விதைக்கிறார் விதார்த் . அடுத்த காட்சியில் ஒரு மிகப் பெரிய நன்செய் நிலத்தில் நடவு செய்கிறார் . 

கூலி ஆளாக இருப்பாரோ என்று யோசித்தால் அப்புறம் அவர் நிலம் கொண்ட விவசாயி என்கிறார்கள் . ஷாட் பியூட்டியில் லாஜிக் சிக்கிக் கொண்டது .

வீட்டில் சமைத்த சாப்பாட்டைக் கொண்டு வந்து , சாப்பிட வைக்க அவரே அழைக்கும் ஷாட்டில் வேலையாட்கள் யாரும் அவருக்கு ரெஸ்பான்ஸ் செய்யாமல் இருக்க, டப்பிங்கில் ”இதோ வர்றேங்க”  என்ற குரலைப் போட்டு இருக்கிறார்கள் . 

அது கூட சகஜம் என்றே வைத்துக் கொள்வோம். 

ஒரு நெல் அரவை மிஷின்  வாங்க லோன் தொகை என்னவாக இருக்கும் ? ஆறு வருடம் தவணை கட்டவில்லை என்றால்மொத்தத் தொகை  எவ்வளவு இருக்கும் ? அதற்காக மொத்த நிலமும் ஜப்தியில் போய் விட்டது என்றால் எப்படி ? ராணிபேட்டை பகுதியில் வளம் கொழிக்கும் நல்ல விவசாய நிலத்தின் விலை என்ன ?

அல்லது விவசாயிக்கு  இருக்கும் நிலம் கொஞ்சம்தான் என்பது படத்தில் எங்கேயும் எஸ்டாப்ளிஷ் செய்யப்படவில்லை 

‘போர்ஜரி’யாக லோன் வாங்கி ஆறு மாசம் டியூ கட்டி , அப்புறம் கட்டாமல் விடுவதற்காக வீட்டுக்கு வரும் அறிவிப்புக் கடிதங்களை போர்ஜரி ஆட்கள் தடுத்து விட்டார்கள் என்றே வைத்துக் கொள்வோம் . 

நிலம் ஏலத்துக்கு வரும்போது நிஜமான உரிமையாளரைக் கண்டு பிடித்து தகவல் சொல்லாமல் முடிக்க முடியுமா? இல்லை தஷ்வந்துகள் விடுதலை செய்யப்படும்  நாட்டில் அதற்கும வாய்ப்பு உண்டா?

இப்படி பல கேள்விகள் . 

இவை எல்லாம் பெரிய கேள்விகளாக வரக் காரணம் .. 

விவசாய நிலங்கள் கமர்ஷியல் நிலங்கள் பற்றிய சர்பாசி ஆக்ட் வரை உள்ளே புகுந்து டீட்டெயில் எடுத்து ” அட..” போட வைக்கிறார். இயக்குனர் . 

ஆனால் இந்தப் படத்திலும் எல்லாமே MATTER OF FACT ஆக, ‘டேட்டா’  வாக இருக்கிறதே ஒழிய , எமோஷனலாக சென்சேஷனல் ஆக எடுக்கப்படவில்லை.  மருதம் என்று பெயர் வைத்த படத்துக்கு சரியான லொக்கேஷனில் படம் எடுத்தும் அந்த லொக்கேஷன்கள் சரியாகப் பயன்படுத்தப்படவில்லை . 

அதுதான் படத்தின் பெரிய பலவீனம் . 

ஜென்டில் மேன் கிளைமாக்ஸ் மாதிரி ஒரு கமர்ஷியல் மற்றும் எமோஷனலான கிளைமாக்சை வைத்து படத்தை முடித்து இருக்கலாம் . இப்படி ஒரு கதைக்கு வசனங்கள் போதுமான தெறிப்பில் இல்லை . 

1330 திருக்குறளை அடுத்தடுத்து திரையில் ஓட விட்டு விளக்க உரை சொல்லி இரண்டரை மணி நேரம் எடுத்தால் அது கூட நல்ல படம்தான் . ஆனால் அது தியேட்டரில் ஓடுமா ?

இது போன்ற கதைகளுக்கு அடர்த்தியான திரைக்கதையும் போதுமான நேரம் எடுத்துக் கொண்ட நீளமும் அவசியம். 

ஆனால் மொத்த படமும் ஒரு மணி நேரம் நாற்பத்தி நாலு நிமிடம் என்பதும் மைனஸ்தான் . 

ஃபாரன்சிக் லேபில் ரிசல்ட் தப்பாக வரக் காரணம் என்ன என்பது எல்லாம் ‘ விளக்கமாக சொல்லத் தேவை இல்லை ஆடியன்ஸ் புரிந்து கொள்வார்கள் ‘ என்பது பொதுவில்  ஓகே . ஆனால் இது போன்ற கதைகளுக்கு அப்படி விட முடியாது . காரணம் அது ஒரு குற்றத்தை அம்பலப்படுத்தும் வேலை அல்லவா?

இப்படி சில விசயங்களை ‘தம்’ கட்டி  சரியாக செய்து இருந்தால் , நாமும் மருதம் என்று கொண்டாடி இருக்கலாம் . 

அப்படி  ‘தம்’  இல்லாததால் ஒரு ‘ மரு’ போலவே மனதில் தங்குகிறது படம் . 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *