வில் (WILL) @ விமர்சனம்

Foot Steps Production சார்பில் சிவராமன் மற்றும் Kothari Madras International Limited   தயாரிக்க, அதே  சிவராமன் இயக்கத்தில், சோனியா அகர்வால், அலேக்யா ராமநாயுடு , விக்ராந்த், பிர்லா போஸ்,  பதம் வேணு குமார், சுவாமிநாதன், மோகன் ராமன், ராகுல் தாத்தா நடிப்பில் வந்திருக்கும்  திரைப்படம் “வில்’ – ‘ WILL ‘ (உயில்). 

சித்தூரில் வாழும் விக்னேஷ் நாயுடு (பதம் வேணு குமார் ) தனது சித்தூர் சொத்துக்களை எல்லாம் தன் இரண்டு மகன்கள் மேல் எழுதி வைத்து விட்டு செத்துப் போகிறார். ஆனால் சென்னையில் உள்ள இரண்டு கோடி ரூபாய் வீட்டை யாரோ ஷர்தா (ஷ்ரத்தா) என்ற பெண்ணுக்கு எழுதி வைத்து விட்டிருக்கிறார் . 
 
அந்த வீட்டையும் தங்களுக்கு உரிமையாக்கிக் கொள்ள திட்டமிடும்  அவரது குடும்பம் , சித்தூரில்  இருந்தே போலியாக ஒரு பெண்ணை ”இவரே ஷர்தா ” என்று கோர்ட்டில் பொய்யாக ஆஜர் செய்து,  சொத்தை அந்தப் பெண்ணின் பெயருக்கு எழுதி பின்னர் தமக்கு எழுதிக் கொள்ள  திட்டமிடுகிறது . 
 
ஆனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும்போது பெண் நீதிபதிக்கு ( சோனியா அகர்வால் ) இதில் ஏதோ தப்பு இருப்பது தெரிய வருகிறது . 
 
நேர்மையாக இருந்ததால்,  அறிவிக்கப்படாத தண்டனை போல ஹை கோர்ட் இன்ஸ்பெக்டராக மாற்றல் தரப்பட்ட போலீஸ் அதிகாரி வசம்,  இந்த வழக்கை ஒப்படைக்கிறார்  நீதிபதி. . 
 
ஷர்தாவின் அட்ரசைக் கண்டு பிடித்து இன்ஸ்பெக்டர் அங்கே போக , அவள் கோத்தகிரியில் இருப்பது தெரிகிறது . அங்கே போனால் ரிட்டயர்டு ராணுவ மேஜரான நல்ல மாமனார் , ஹோமோ செக்ஸில் மட்டும் ஈடுபடும் கணவன்…  என்று வாழ்ந்து கொண்டு இருக்கிறார் நிஜ ஷர்தா ( ( அலேக்யா ராமநாயுடு) 
 
நீதிபதி முன்பு நிறுத்த அவரை அழைத்துக் கொண்டு வரும் வழியில்,  விக்னேஷ் நாயுடு பெயரை இன்ஸ்பெக்டர் சொன்னதும் ஷர்தா அதிர்ச்சி அடைகிறாள் 
 
விசாரணையில் சில உண்மைகள் தெரிய வருகின்றன. 
 
 ஷர்தாவின்வின் வங்கி ஊழியர் அப்பா (பிர்லா போஸ்) , தன் மகனின் கல்லூரிப் படிப்புக்கு ஆறு லட்ச ரூபாய் சக ஊழியரிடம் கடன் வாங்குகிறார் . ஆனால் அந்தப் பணம் GHOST EMPLOYER SCAM எனப்படும் வேலை செய்யாமலே வங்கி ஊழியர் என்ற பெயரில் மாத சம்பளம் பெறும் ஊழல் பணம் . எனவே அப்பாவைக் கைது செய்கிறது போலீஸ். 
 
எனினும் நிலைமையை உணர்ந்த வங்கி மேலதிகாரி (சுவாமிநாதன்) ” நீ பணத்தை மட்டும் கொடுத்து விட்டால் உன்னை வழக்கில் இருந்து விடுவிக்கிறேன்”  என்கிறார் . 
 
பணத்துக்கு அலையும் வங்கி ஊழியருக்கு, அவரது அண்ணன் உட்பட யாரும் உதவாமல் போக, ஷர்தாவுக்கு அவள் தோழி மூலம் விக்னேஷ் நாயுடு தொடர்பு கிடைக்கிறது. 
 
இசை , இளம்பெண்கள் , மது என்று வாழும் நாயுடு ஷர்தாவை அனுபவித்து விட்டு ஆறு லட்சம் வட்டி இல்லாத கடனாகத் தருகிறார் . 
 
பணத்தை வைத்து அப்பாவின் பிரச்னையைத் தீர்க்கும் ஷர்தா, வேலையில் இருந்து நீக்கப்பட்ட  அப்பாவின் பி எஃப் பணம் வந்தததும். வாங்கிய ஆறுலட்சம் கடனை திருப்பிக்  கொடுக்க  நாயுடுவை பார்க்கப் போகிறார் . 
 
அங்கே இசை,  ஒயின் எல்லாம் சேர்ந்து  நாயுடுவுக்கு தொடர்ந்து சுகம் தருகிறாள்  ஷர்தா.  அதற்கு அவர் எழுதிய காமப் பரிசு  உயில்தான் இந்த இரண்டு கோடி ரூபாய் ஃபிளாட்
 
அந்த உறவின் விளைவு என்ன? அது வெளிப்படும் போது நிகழும் அவலம் என்ன ? இரண்டு கோடி ரூபாய் சென்னை ஃபிளாட் சித்தூர் குடும்பத்துக்குப் போனதா இல்லை ஷர்தாவுக்கு வந்ததா? 
 
என்பதே இந்த WILL . 
 
அடிப்படையில் சிவராமன் வழக்கறிஞர் என்பதால் கோர்ட் விசயங்களை உண்மைக்கு நெருக்கமாக எழுதி இருக்கிறார் . 
 
குறிப்பாக ஹைகோர்ட் இன்ஸ்பெக்டர் என்ற PROFESSION OF THE CHARACTER அருமை . 
 
 GHOST EMPLOYER SCAM என்ற விஷயம் அபாரம் . பாராட்டுகள் . 
 
தமிழ்நாட்டில் விக்னேஷ் நாயுடுகள் வாழ்கிறார்கள் . ஷர்தாக்கள் விலை போகிறார்கள் . ஆனால் இரண்டும் தமிழர்களுக்கு வேடிக்கை பார்க்கும் விசயம்தான்  என்று பூடகமாக சொல்லும் இயக்குனரின் பார்வை கவனிக்க வைக்கிறது . ஷர்தா கேரக்டருக்கு அலேக்கியா ராமநாயுடு நடிக்க வைத்ததும் குறிப்பிடத்தக்க விஷயம்தான் . 
 
கலைக்குமாரின் பாடல் வரிகளில் சோனியா அகர்வாலின் சகோதரர் சவுரப் அகர்வால் இசையில் டெஸ்லா பாட்டு முனுமுனுக்க வைக்கிறது . 
 
அந்த ஒரு பாட்டு மட்டும் நடனம் , பிரசன்னாவின் ஒளிப்பதிவு , தினேஷின் படத் தொகுப்பு என்று யாவும் சிறப்பாக இருக்கிறது. மொத்தப் படத்தையும் அப்படியா எடுத்து இருக்கக் கூடாதுங்களா ஞாயமாரே? அந்த டான்ஸ் பாப்பாக்கள் கூட நைஸ் அண்ட் க்யூட். 
 
வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்தது சரிதான். ஆனால் அதன் வழியே சமூகத்துக்கு என்ன சொல்கிறோம் . அது வெகுஜன ரசனைக்கு உகந்ததா ? என்று பார்க்க வேண்டும்.
 
இந்தப் படத்தின் மெயின் ஆடியன்ஸ் யார் என்பது பற்றி எந்தத் தெளிவும் சமூக அக்கறையும் இல்லாத திரைக்கதை . இந்தப் படத்தை குடும்பத்தோடு பார்க்க வருவார்கள். இளைஞர்கள் வருவார்களா? இல்லை மிடில் கிளாஸ் ஆட்கள் வருவார்களா? 
 
இது தியேட்டரிக்களல் ஆக எந்த வகை ஆடியன்சுக்கான படமாகவும் இல்லை என்பதுதான் சோகம் . 
 
சித்தூருக்கு நாயுடுவின் மகன்கள் மனைவியைப் பார்க்கப் போகும் போகும் அந்த நேர்மையான இன்ஸ்பெக்டர் , எதுக்கு அங்கே போய் அவர்கள் காரை அடித்து , ”ஏன்யா இப்படி பண்ற நீ யாரு/’  என்று அவர்கள் கேட்ட பாவத்துக்காக,  அவர்களை புரட்டி புரட்டி சினிமா சண்டை போட வேண்டும் ?
 
மொழிவாரி மாநிலப் பிரிவினையின் போது தமிழர் நிலமான சித்தூரை ஆந்திரர்கள் நேருவையும் ராஜாஜியையும்  சரிகட்டி  அபகரித்துக் கொண்டதற்குப் பழிவாங்க இப்போது போய் அடிக்கிறாரா? எனில் சொல்ல வேண்டாமா ? இல்லாவிட்டால் எப்படி எல்லோருக்கும புரியும்?
 
படத்தின் ஆரம்பத்தில் கோர்ட் காட்சிகள் முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் இருப்பதைப் பார்க்கும்போது , ‘ இது என்னவோ இண்டியன் இங்கிலீஷ் படம் போல… PAN INDIA வுக்கு  குறி வைத்து இருக்கிறார். சபாஷ் . எப்படியும் போட்டகாசை எடுத்து விடுவார் போல ”  என்று பாராட்டத் தோன்றியது (படத்தின் பெயர் வேறு WILL என்று ஆங்கிலப் பெயர்) 
 
அப்புறம் பார்த்தால்  படம் முழுக்க தமிழில்தான்  போகிறது . எனில் அந்த ஆரம்பக் காட்சிகள் எப்படி ரசிகர்களுக்குப் புரியும் ? 
 
இந்தியாவின் மற்ற மாநிலங்களில் எல்லாம் உயர் நீதிமன்றத்தில்  அந்தந்த மொழிகளில் வாதாட அனுமதி உண்டு . ஆனால் இந்த திராவிட  ஆட்சிகளின்  மாநிலத்தில் மட்டும் உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாட அனுமதி இல்லை”
 
— என்று மறைமுகமாக சொல்ல வருவது சிறப்புதான் . ஆனால் பஞ்சாபில் இருந்து வந்திருக்கும் அந்தப் பெண் நீதிபதி ”எனக்கு தமிழ் பிடிக்கும் தமிழிலேயே வாதாடலாம்”  என்று சொன்ன பிறகும் எல்லோரும் ஆங்கிலத்தில் வாதாடுகிறார்கள் . 
 
ஒருவேளை தமிழ்நாடு உயர்நீதி மன்றத்தில் ( தப்பு தப்பு. கர்நாடகாவில் உள்ளது கர்நாடக உயர்நீதிமன்றம் . ஆந்திராவில் கேரளாவில் உள்ளது எல்லாம் ஆந்திர , கேரள உயர்நீதி மன்றங்கள் . 
 
ஆனால் இங்கே உள்ளது தமிழ்நாடு உயர்நீதி மன்றம் இல்லை. சென்னை உயர்நீதி மன்றம்தான் . இதுதான் திராவிட ஆட்சிகளில் சமூக நீதி ; தமிழ் வளர்த்த லட்சணம்) …
 
அதாவது சென்னை உயர்நீதிமன்றத்தில் முக்கியப் பதவிகளிலும் பெரிய வழக்கறிஞராகவும் அரசுத் தரப்பு வழக்கறிஞராகவும் இருப்பவர்கள் எல்லாம் தமிழ் தெரியாதவர்கள் (உதாரணம் அந்த வடக்கத்தி பெண் வக்கீல், மற்றும் சஞ்சனா சிங் நடித்து இருக்கும் வக்கீல் பாத்திரம்) …
 
– என்பதை மறைமுகமாக உணர்த்தவே இயக்குனர் சிவராமன் அப்படி வைத்திருக்கிறார் என்றால் அது கூட பாராட்டுக்குரியது . ஆனால் சப்டைட்டில் போட்டு இருக்கலாம். அல்லது ஆங்கில வசனத்தின் மேல் தமிழ் வசன ஒலியை பதிவு செய்து இருக்கலாம் . வெகுஜன மக்களுக்குப் புரியாத காட்சிகளால் பலன் என்ன?
 
ஒரு பெண் அப்பாவைக் காப்பாற்ற ஒரு முறை சோரம் போனால் என்பதே சொல்லக் கூடாத கதை . 
 
”ஈன்றாள் பசிகாண்பாள் ஆயினும் செய்யற்க 
சான்றோர் பழிக்கும் வினை ” 
 
– என்று இரண்டாயிரம் வருடத்துக்கு முன்னே செதுக்கி வைத்த மொழி  இது . 
 
நடக்கிறதைதான் சொல்றோம் என்பது எஸ்கேபிசம் . 
 
எல்லோரும் காலையில் கக்கா போகிறோம் . ஆனால் யாரும் டாய்லெட்டை திறந்து வைத்துக் கொண்டு போவதில்லை. வீட்டுக்கே சாம்பிராணி காட்டி சாமி கும்பிடுகிறோம் . அப்போது கூட கழிவறைக்குள் யாரும்  தூவக்காலைக் கொண்டு போவது இல்லை. 
 
அதுமட்டுமல்ல .. அப்படி ஒரு பெண் சோரம் போவது கூட பணத்துக்காக இல்லை . வட்டி இல்லா கடனுக்காக என்பது கேலிக் கூத்து.(அவ்ளோ அப்பாவியா நீ?)   அதோடு போச்சா?  ஏதோ கைமாத்து வாங்கிய கணக்காக அவள் அதை திருப்பிக் கொடுக்க வேறு நாயுடுவை போய்ப் பார்த்தாள் என்பது இன்னும் ஒரு கேலிக் கூத்து . (இந்த ஷர்தாவை பெத்தாங்களா? இல்ல ஆர்டர் கொடுத்து செஞ்சாங்களா?) 
 
சரி தொலையட்டும் என்று பார்த்தால் , அந்த சந்திப்பில் நாயுடுவின்  இசை ரசனையை உணர்ந்து ( ( பெரிய எஸ் எம் சுப்பையா நாயுடு) அவனோடு சேர்ந்து கிட்டார் மீட்டி. ஒயின் குடித்து மயங்கி ரசித்து பலமுறை இணைகிறாள் ஷர்தா. அவளை செருப்பைக் கழட்டி பிய்யப் பிய்ய அடித்தால் என்ன?
 
இல்லை அதுதான் அவள் கேரக்டர் என்று சொல்ல படைப்பாளிக்கு உரிமை உண்டு . ஆனால் அப்படிப்பட்ட ஒரு கேரக்டர் கடைசியில் உத்தமியாய்,  தர்ம சீலியாய்,  மக்களைப் பெற்ற மகராசியாய்,  ‘படித்தால் மட்டும் போதுமா’ சாவித்திரி கணக்காய் மாறும் யோக்கியதையை இழந்து விடுகிறது  )
 
அதுவும் பலர் இருக்கும் ஒப்பன் கோர்ட்டில் தன் கதையை சொல்லும் ஷர்தா,  மேற்படி பலான ரகசியத்தை மட்டும் பெண் நீதிபதி கிட்டே வந்து ரகசியமாக சொல்வாளாம் . அதே கோர்ட்டில் இருக்கும் அப்பா அம்மா,  எதிர்க்கட்சி வக்கீல் , பார்வையாளர்கள் , நீதிபதி அருகில் இருக்கும் கோர்ட் குமாஸ்தாக்கள் யார் காதிலும் விழாதாம் . 
 
பெண் நீதிபதி தவிர அங்கே இருந்த யாருக்கும் காது கேட்காது என்று ஒரு வார்த்தை சொல்லி இருக்கக் கூடாதா,  மை லார்ட்  டைரக்டரே  ?
 
உண்மையில் என்ன செய்திருக்க வேண்டும் ?
 
நாயுடுவிடம் உதவி கேட்டுப் போகும்போது ஷர்தாவுக்கு அவனது பாலியல் குணம் தெரியாது . தனியாக சிக்கிய நிலையில் அவள் மறுக்க, அந்த நிலையில் நடக்கும் ஏதோ ஒரு சம்பவம் , அவனை நிதானிக்க வைத்தது . 
 
”என்னிடம் பணத்துக்காக எதையும் செய்யத் தயங்காமல் வரும்  பெண்கள் போல் நீ இல்லை. எனவே பணம் தருகிறேன் . உன்னை இனி தவறாகப் பார்க்க மாட்டேன்.  நீ போய்விடு ” என்று அனுப்பி வைக்கிறான் . நன்றியோடு எடுத்துக் கொண்டு வந்தாள் . (பின்ன? இல்ல இல்ல.. இலவசமாக  காசு வாங்குவது பாவம் என்று சொல்வாளா என்ன?) 
 
அப்பாவின் பிரச்னை முடிந்ததும் ஷர்தா, இப்போது  நன்றி சொல்ல நாயுடுவைத் தேடிப் போனாள். அங்கே ஒரு கண்ணியமான நட்பு வந்தது . அதன் விளைவாலும் தன் குடும்ப உறுப்பினர்கள் மேல் கோபத்தாலும் அந்த இரண்டு கோடி ரூபாய் ஃபிளாட்டையும்  ஷர்தா பேரில் எழுதி நாயுடு எழுதி வைத்தான் . 
 
ஆனால் அது மற்றவர்கள் பார்வையில் தவறாகத் தெரிந்தது . உண்மைக் காரணத்தை உலகம் நம்பவில்லை. அப்புறம் என்ன  நடந்தது என்று சொல்லி இருந்தால்…
 
 அதுக்கு பேர்தாங்க   வெற்றிகரமான  கமர்ஷியல் திரைக்கதை . 
 
பேசாமல்,  அந்த GHOST EMPLOYER SCAM ஐ டெவலப் செய்தே ஒரு அருமையான திரைக்கதை எழுதி சும்மா தெறிக்க விடலாம் 
 
ஆனால் இங்கே எப்படா படம் முடியும் என்று ஏங்கிக் கிடக்க வேண்டிய நிலைமை . 
 
சரி…. இப்படி எல்லாம் பிரச்னையில் சிக்கியவள்…
 
 25 வருஷம் ராணுவத்தில் வேலை செய்து ரிட்டயர்டு ஆன ஒரு பெரிய அறிவாளிக்கு எப்படி மருமகள் ஆனாள்?  அவள் புருஷன் ஏன் ஹோமோ செக்ஸ் ஆனான்?  என்று இன்னும் இருபது நிமிடம் படத்தை ஓட்டுவார்களோ என்று பயந்து விட்டேன் நல்லவேளை பெரிய மனசு பண்ணி அதை எல்லாம் சொல்லி இன்னும் ஜவ்வுக்கே ஜவ்வு கொடுத்து இழுக்காமல், நம்மை  வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள் . நல்லா இருக்கணும் சாமி . 
 
நல்ல WILL (உயில்) மூலம் நியாயமான சொத்து வந்தால் கூட இப்படி ஒரு படத்தை எடுக்கலாமா ?
 
சினிமா பார்க்க வேண்டும் என்ற WILL (விருப்பம் ) அதிகம் இருந்தால் கூட,  இப்படி ஒரு படத்தைப் பார்க்க WILL POWER வேண்டும் . 
 
அது உங்களுக்கு இருந்தால் அவசியம் கட்டாயம் தவிர்க்காமல் தயவு செய்து பார்த்து   ஆதரியுங்கள் இந்த WILL படத்தை . 
 
மொத்தத்தில் WILL….. உடைந்து போன வில்… ரப்பர் அறுந்த உண்டி வில். 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *