மீண்டும் @ விமர்சனம்

ஹீரோ சினிமாஸ் சார்பில் சி. மணிகண்டன் வழங்க, கதிரவன், அனகா, ஷரவண சுப்பையா , சுபா பாண்டியன், எஸ் எஸ் ஸ்டான்லி, சுப்ரமணிய சிவா, கேபிள் சங்கர் நடிப்பில் , சிட்டிசன் படப் புகழ் இயக்குனர் ஷரவண சுப்பையா கதை, திரைக்கதை, வசனம் எழுதி இரண்டாவது கதாநாயகனாக  நடித்து இயக்கி இருக்கும் படம் மீண்டும் .

காதலித்துத் திருமணம் செய்து கொண்ட ஓர் இணையர் (கதிரவன்- அனகா).   அரசாங்கத்தின் பல்வேறு பாதுகாப்புத் துறைகளில் ஒன்றான அண்டர் கவர் ஆப்பரேஷன் பிரிவில் பணியாற்றும் நாயகன் , மனைவி கர்ப்பமாக இருக்கும் நிலையில் பணி நிமித்தம் பிரிய,   புரிதலின்மை காரணமாக கணவனை விட்டே பிரிந்து போய் விடுகிறாள் மனைவி .

பெண்ணின் பெற்றோர் பிறந்த குழந்தையை அநாதை இல்லத்தில் சேர்த்து விட்டு மகளுக்கு வேறு திருமணம் செய்து வைக்கின்றனர் . தனது குழந்தையை கண்டு பிடித்து வளர்க்கும் நாயகன் , தனிப்பட்ட வாழ்வில் தனது மகனுக்காகவே  வாழ்கிறான். 

இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நாயகியின் கணவன் ( ஷரவண சுப்பையா) மற்றும் அவனது அம்மா , தங்கைகள் அனைவரும் தூய இறை நம்பிக்கையும்  உயர் குணங்களும் கொண்டவர்கள் . 

ஒரு நிலையில் நாயகிக்கு , தன் குழந்தை உயிரோடு இருப்பதும் , அது தனது அப்பாவோடு வாழ்வதும் தெரிகிறது . மகனை தன்னோடு வைத்துக் கொள்ள விரும்புகிறாள். ஆனால் மகன் தனது அப்பாவை விட்டுப் பிரிந்து வர மறுத்து விடுகிறான். 

இந்த நிலையில் சென்னையை அழித்த சுனாமியை இல்லுமிநாட்டிகள் செயற்கையாக உருவாக்கி அழிவை ஏற்படுத்திய விசயமும் , 2022இல்  அதை விடவும் கொடுமையான ஒரு சுனாமியை உருவாக்க  திட்டமிட்டு இருப்பதும் தெரிய வருகிறது. 

மேல் விவரங்கள் சேகரிக்கவும் , அதை தடுக்கவும் இலுமினாட்டிகள் ஆளும் சிலாக்கி தீவுக்கு நாயகன் செல்கிறான். மகனை நாயகியிடமும் நாயகியின் கணவனிடமும் ஒப்படைத்து விட்டு, ‘நான் உயிரோடு மீண்டும் வராவிட்டால் இவன் உங்கள் பிள்ளை ‘ என்று கூறிக் கிளம்புகிறான். 
இதுவரை  சென்ற யாரும் உயிரோடு திரும்பாத நிலையில் , சிலாக்கியில் நடந்தது என்ன? அதன் விளைவுகள் என்ன ? என்பதே மீண்டும். 

சிட்டிசன் படத்தைக் கொடுத்து  அஜித்தை மக்கள் ஸ்டாராக மாற்றிஎதோடு, ஏ பி சி டி என்ற  பாலச்சந்தர் பாணிப் படம் ஒன்றையும் கொடுத்த ஷரவண சுப்பையா இந்த முறை, காதல், அம்மா செண்டிமெண்ட், பரபரப்பும் விறுவிறுப்புமான ஆக்ஷன் , திரில்லர் விஷயங்கள், சமூக அக்கறை, தேசப் பாதுகாப்பு , என்று அகன்று  விரிந்த அழுத்தமான கதை திரைக்கதையோடு  களம் இறங்கி இருக்கிறார் . 

அது மட்டுமல்ல திரைகதையின் தன்மைக்கு ஏற்ற ஷாட்கள், ஃபிரேம்கள், அதிரடியான கேமரா கோணங்கள் கொண்ட சிறப்பான் படமாக்கல், அழுத்தம்ன இயக்கம் என்று அசத்தலாக படத்தை உருவாக்கி இருக்கிறார் . 

ஒரு சிறப்பான இயக்குனருக்கான ஷாட் கம்போசிஷன்கள் ரசிக்க வைக்கிறது . சென்டிமென்ட், விறுவிறுப்பு என்ற பின்னலில் அருமையாக படத்தை செலுத்தி இருக்கிறார் .  

பணம் இருக்கிறது என்பதற்காக  எவ்வளவு வேண்டுமானாலும் பெட்ரோல்  வாங்கி பயன்படுத்துவேன் என்ற பணக்கார எண்ணம் எப்படி ஏழை மக்களை பாதிக்கிறது…வரிகட்டாத அயோக்கியத்தனம் .. இவற்றைப் பற்றி எல்லாம் அவர் வைத்து இருக்கும் காட்சிகளும்  வசனங்களும் அற்புதம் . சுனாமி பற்றிய கதைப் பகுதி அபாரம். 

தவிர மனைவியின் முதல் கணவனுக்குப் பிறந்த குழந்தையை தனது குழந்தையாக ஏற்றுக் கொள்ளும் ஒரு உயர்ந்த மனிதன் கதாபாத்திரத்தில ஒரு சிறகின் வருடல் போல நடித்துள்ளார்.   மனைவிக்கும் முதல் கணவனின் மகனுக்கும் பிறந்த குழந்தை , அவளை அம்மாவாக ஏற்றுக் கொள்ளும் காட்சியில் அவர் பூக்கும் ஒரு மெல்லிய புன்னகை உதாரணம். அந்தக் குடும்பத்தில் வரும்  எல்லா கதாபாத்திரங்களும் மனிதத்தின் மீது நம்பிக்கை ஏற்படுத்தும் விதம் அலாதி. 

கதிரவன், அனகா ஆகியோரிடம் வேலை வாங்கி இருக்கும் விதமும் சிறப்பு.  நிர்வாணமாக சித்திரவதைக்கு ஆளாகும் காட்சிகளில் கதிரவன் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார் 
அனகாவை ஒரு நிம்டம் பம்பாய் மனிஷா கொய்ராலாவாக ஆக்கி புன்முறுவல் பூக்க வைக்கிறார் இயக்குனர், 

 வைரமுத்து மற்றும் ஷரவண சுப்பையாவின் பாடல்களுக்கு  பலம் சேர்க்கிறது நரேன் பாலகுமாரின் இசை . பின்னனின் இசை நெகிழ்வான காட்சிகளுக்கு கனமும், ஆக்ஷன் காட்சிகளுக்கு பரபரப்பும் கொடுக்கிறது.  

சீனிவாச தேவாம்சத்தின் ஒளிப்பதிவு  இயக்குனருக்கு பெரும் துணையாக பயணித்து இருக்கிறது . 

தனிப்பட்ட வாழ்வு, தேசப் பணி என்ற இரண்டு தடங்களில்  செல்லும் கதையை அழகாக் இணைத்து படத்தை வேகமாக கொண்டு போகிறது ராஜா முகமதுவின் ஒளிப்பதிவு .  காட்சி மாறும் இடங்களில் பல சமயம் எடிட்டிங் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 

படத்தில்  நடித்து இருக்கும் இயக்குனர்கள்  எஸ் எஸ் ஸ்டான்லி, சுப்ரமணிய சிவா, கேபிள் சங்கர் கவனம் கவர்கிறார்கள். 

லேடி ஹிட்லராக நடித்திருக்கும் சுபா பாண்டியன், அமைச்சர் அனுராதா ஆகியோரும் சிறப்பு . 
படத்தில் வரும் சமூக அக்கறை விசயங்களை இன்னும் சிறப்பாக அழுத்தமாக சொல்லி இருந்தால் ஓடம் இன்னும் நன்றாக அமைந்திருக்கும். 

மொத்தத்தில் 

மீண்டும்……… ஷரவண சுப்பையா !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *