ஹர்ஷித் பிக்சர்ஸ் சார்பில் தமிழ் செல்வம் என்பவர் தயாரித்து முக்கிய வேடத்தில் நடிக்க, ஆதவ் பாலாஜி – மதுனிகா ஜோடியாக நடிக்க, ஆடுகளம் ஜெயபாலன், ஓ ஏ கே சுந்தர் நடிப்பில் வேலன் எழுதி இயக்கி இருக்கும் படம்.
கிராமத்தில் வசதியான வீட்டுப் பெண்ணை (மதுனிகா) ஏழை தாழ்த்தப்பட்ட சமூக இளைஞன் (ஆதவ் பாலாஜி) காதலிக்க, பெண்ணின் அக்கா புருஷனும் தாய்மாமனும் இன்ன பிறரும் சாதி மற்றும் குடும்ப மானம் போய் விட்டதாக கலாட்டா செய்ய, காதல் ஜோடி ரகசிய திருமணம் செய்து கொள்ள , பெண்ணின் உறவினர்கள் துரத்த ,
வடக்கே போகும் பஸ்ஸில் காதல் ஜோடி நண்பர்களுடன் சென்னை வர, அங்கே ஒரு பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற ஒரு ரவுடி கூட்டத்தின் பகைக்கு ஆளாக, அமெச்சூர் நாடக பணியில் ஒரு இன்ஸ்பெக்டர் உதவ, காதல் ஜோடி ஊருக்கு போய் பெற்றோர்களின் சமாதானம் பெற்ற நிலையிலும் நாயகன் சென்னை வந்து ரவுடி கும்பலை போட்டுத் தள்ளினால் அதுதான் மெய்ப்பட செய் .
படத்தின் பெயரிலேயே இலக்கணப் பிழை . மெய்ப்பட செய் என்பதே சரி . ஓரிரு இடங்களில் அத்தி அதிசயமாய் பூத்தது போல சிரிக்க முடிகிறது.
ஒரு ரவுடி தனது பல்வேறு அராஜகங்களில் ஒன்றாக ஒரு பெண்ணை வன்கொடுமை செய்து கொலை செய்வதைக் காட்டி பின்னணியில் ஒரு பாட்டைப் போடுவதால் மட்டும் மட்டும் அது பாலியல் வன்கொடுமை பற்றிப் பேசும் படமாக ஆகி விடாது . பாலியல் வன்கொடுமை பற்றிப் பேசும் படம் என்றால் அது அழுத்தமாக அக்கறையோடு பேசப்பட வேண்டும்
மெய்ப்பட வித்தியாசமான கதை திரைக்கதை செய்திருக்கலாம் .
மெய்ப்பட இயல்பாக எல்லோரும் நடித்து இருக்கலாம் .
மெய்ப்பட நேர்த்தியாக இயக்கி இருக்கலாம் .
மெய்ப்பட மற்ற தொழில் நுட்பக் கலைஞர்கள் பங்களித்திருக்கலாம்.
மெய்ப்பட அக்கறையோடு ஒரு படம் கொடுத்து இருக்கலாம்.
எதுவும் நடக்காத காரணத்தால் நம்மால் பொய்ப்படப் பாராட்ட முடியவில்லை .