கரண் புரடக்ஷன்ஸ் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமா சார்பில் பரத் சவுத்ரி , ராம் மோகன் புஸ்குர் தயாரிப்பில் சந்தீப் கிஷன் , திவ்யான்ஷா கவுசிக், கவுதம் மேனன், கௌரவத் தோற்றத்தில் விஜய் சேதுபதி மற்றும் வரலக்ஷ்மி நடிக்க ரஞ்சித் ஜெயக்கொடி என்பவர் எழுதி இயக்கி இருக்கும் படம்.
மிகப்பெரிய தாதாவின் ( கவுதம் வாசு தேவ் மேனன் ) உயிரைக் காப்பாற்றி அவரிடம் நம்பிக்கைக்கு உரிய ஆளாகச் சேர்கிறான், மழலை வயது முதல் வைராக்கியமும் இறுக்கமுமாக வளர்ந்த – அம்மாவை இழந்த – ஓர் இளைஞன்(சந்தீப் கிஷன்)
அவனுக்கு தாதா கொடுக்கும் முக்கியத்துவம், தாதாவின் மனைவி (அனுசுயா பரத்வாஜ் ) மகன் ( வருண் சந்தேஷ் ) ஆகியோருக்கு பிடிக்கவில்லை .
இந்த நிலையில் தாதா அவனை டெல்லிக்கு அனுப்பி ஒரு பெண்ணோடு பழகி (திவ்யான்ஷா) அவளைப் பார்க்க அவளது அப்பா வரும்போது இருவரையும் கொன்று விட்டு வா என்று அனுப்பி வைக்கிறார்.
போன இடத்தில் பெண்ணோடு காதல் .
பின் தொடர்ந்து வரும் தாதாவின் மகன் நாயகனையும் பெண்ணையும் பிடித்துக் கொல்ல முயல , தாதாவின் மகனைப் போட்டுத் தள்ளுகிறான் நாயகன் . எப்படிடா என் மகனைக் கொல்லப் போச்சு என்று தாதா கேட்க , பதிலுக்கு ” ங்கொய்யால … நான் உன் கிட்ட வேலைக்கு சேர்ந்ததே உன்னையும் உன் மனைவியையும் கொல்லத்தான்டா . என் அம்மாவை காதலிச்சு புள்ளை கொடுத்து ஏமாத்திட்டு நீ வந்த. நான் பொறந்த அப்புறம் எங்கம்மாவை உன் பொண்டாட்டி உன் முன்னாடியே எரிச்சுக் கொன்னால்ல… அதுக்கு பழிவாங்கத்தான் .. ” என்று நாயகன், ஒரு புத்த்த்த்த்த்த்த்தம் புது கதை சொல்li..
துப்பாக்கி குண்டு , கத்தி, கபடா, ரத்தம், சதை வெறி என்று ஆடித் தீர்க்கிறார்கள் .
இது போதாதென்று விஜய் சேதுபதியும் வரலக்ஷ்மியும் தங்கள் பங்குக்கு மிளகாய்ப் பொங்கல் வைக்கிறார்கள் . (கவனிக்க…மிளகுப் பொங்கல் அல்ல)
தமிழக , ஆந்திர, தென்னிந்திய , இந்திய, தெற்காசிய, ஆசிய, உலக சினிமாக்களில் இருந்து எல்லாம் ஒவ்வொரு காட்சியை அதுவும் அதிக அதிகம் பயன்படுத்தப்பட்ட காட்சிகளை உருவி , ” தக்காளி… நாம எடுக்கறோம்டா ஒரு கே ஜி எப் ” என்று கே ஜி எப் படத்தில் வந்த வசனத்தையே வைத்துக் கொண்டு இறங்கி இருக்கிறார்கள்.
தொழில் நுட்ப ரீதியாக பாராட்ட ஒளிப்பதிவு, படத்துக்கு கொடுக்கப்பட்டு இருக்கும் டோன் உள்ளிட்ட சில விஷயங்கள் உண்டு. கதாநாயகி அறிமுக பாடல் , காதல் பாடல் இரண்டும் எடுக்கப்பட்ட விதம் மிக சிறப்பு . படத்தில் ஹீரோவுக்கு பில்டப் கொடுக்க ஒருவர் பேசிக் கொண்டே இருப்பார்.. வரான் பாரு .. எங்க ஆளு.. அவன் கண்ணுல ரத்த வெறி .. அவனுக்கு சமம் யாரும் இல்ல … ” என்று பேசிக் கொண்டே இருப்பார் . அநேகமாக அந்தக் கேரக்டருக்கு டப்பிங் கொடுத்தவர் வேலை முடிந்ததும் ரத்த வாந்தி எடுத்து இருப்பார் . அப்படி ஒரு உழைப்பு .
ஆனால் அடுத்து வரும் ஷாட்களில் சந்தீப் கிஷன் பத்து நாட்கள் பட்டினி கிடந்து ரயிலில் வந்து எக்மோரில் இறங்கியவன் ஸ்டேசனுக்கு வெளியே உள்ள இம்பாலா ஹோட்டலை ஏக்கத்தோடு பார்ப்பது போலப் பார்த்துக் கொண்டு நிற்கிறார்
”அவன் கண்ணில் ரத்த வெறி” என்று பில்டப் வசனம் ஒலிக்கும் . இவர் முகத்தில் தூக்கச் சடவு கூட இருக்காது .
ஃபேன்சி டிரஸ் காம்பெட்டிஷனில் நடிக்கும் பேரூராட்சி பள்ளி மாணவன் போல கவுதம் வாசுதேவ் மேனனை நடிக்கவும் நடக்கவும் பேசவும் வைத்திருக்கிறார்கள்
கதாநாயகி மட்டும் பாலைவனச் சோலை .