ராம்தேவ் பிக்சர்ஸ் சார்பில் ராம்தேவ், மதுரை சி.ஏ, ஞானோதயா, டாக்டர் எம் ராஜ கோபாலன், டாக்டர் டி சாந்தி, ராஜகோபாலன் ஆகியோர் தயாரிப்பில் கே. பாக்யராஜ், சோனியா அகர்வால், ஸ்ரீநாத், ரிஷிகாந்த், பிரணா, சூது கவ்வும் சிவகுமார், ராஜ கோபால், மதுரை ஞானம் நடிப்பில் ராம்தேவ் கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி இயக்கி நடித்தும் இருக்கும் படம்.
உறவினர்கள் பார்த்து சொந்தத்துக்குள் திருமணம் செய்து வைத்த தம்பதிக்கு ( ராம்தேவ்- பிராணா) ஒரு மகனும் இருக்கும் நிலையில் கணவன் குடிப்பழக்கத்தில் மூழ்க, மனைவிக்கு எந்த சுகமும் இல்லாமல் போகிறது . அவள் வீட்டு வேலை செய்யும் வீட்டில் அந்த மனைவிக்கும் ( சோனியா அகர்வால்) அவளது காவல்துறை அதிகாரி கணவனுக்கும் பிரச்னை .
கணவனை சந்தேகப்படும் மனைவி அது குறித்து நண்பன் (ஸ்ரீநாத்) ஒருவனிடம் சொல்ல அவன் அவளை படுக்கைக்கு அழைக்கிறான்.
இந்த நிலையில் அந்த கணவனுக்கும் , வேலைக்காரியாக வரும் பெண்ணுக்கும் ( குடிகாரனின் மனைவி) கள்ளக் காதல் . அவள் மீது இரண்டு ரவுடிகள் அக்கா என்று உறவில் பாசம் காட்டுகிறார்கள் .
இந்த நிலையில் போலீஸ்காரர் கொல்லப் பட,
அந்தக் கொலையில் இருந்து ஆரம்பித்து மேலே சொன்ன விசயங்களை சொல்லி, யார் கொலைகாரன்? ஏன் என்பதை சொல்வதே இந்தப் படம்.
படத்தின் முதல் பலம் ஒரே பலம் வசனங்கள். ஷார்ப்பாக நேர்த்தியாக இருக்கிறது என்று சொல்ல முடியாவிட்டாலும் பல இடங்களில் ஆழமாகவும் கனமாகவும் வித்தியாசமாகவும் இருக்கிறது . வாழ்த்துகள்

அதை விட்டால் அப்புறம் எல்லாமே அடிமேல் அடிதான்.
கணவன் மனைவி பிரச்னையில் மூன்றாம் மனிதன் வந்தால் சிக்கல்தான் என்பதுதான் படத்தின் பெயருக்குப் பொருள் . அதுவே அரைகுறை சிந்தனை. யாரை எதற்காக அனுமதிக்கிறோம் எந்த அளவுக்கு அனுமதிக்க வேண்டும் அனுமதித்தவர் தவறாக நடக்க ஆரம்பித்தல் என்ன செய்ய வேண்டும் என்று சொல்ல வேண்டிய படம் , தலைகீழாக அடிப்படையிலேயே ஆட்டம் காணுகிறது .
கணவன் குடிகாரனாக இருந்தால் கள்ள உறவு வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அப்படியே இருந்தாலும் அதை ஏதோ புனிதக் காதல் போல பாடல் காட்சிகள் எல்லாம் வைத்து அழகியல் செய்வது அயோக்கியத்தனம் .

அப்படியே செய்தாலும் அதற்கு ஏற்ற நபராக அந்த கள்ள உறவு கதாபாத்திரம் இல்லாமல் அதை போட்டு உடைப்பது அயோக்கியத்தனம் . இப்படி படத்தில் விவகார விபரீதங்கள் பல .
சோனியா அகர்வால் வழக்கம் போல வந்து போக, உற்சாகமாக நடிக்கிறார் குடிகாரன் மனைவியாக வரும் பிராணா.
மற்ற எல்லோரும் கொடுமை . அதுவும் இயக்கி இருக்கும் ராம்தேவ் .. ரொம்பக் கொடுமை . நடிப்பு என்ற பெயரில் நரபலி.
பாக்யராஜ் ? அந்தக் கொலைக்கு முக்கியக் காரணம்.. ” என்பது போன்ற வசனங்களைக் கூட, ” நான் உன்ன பின்னாடி இருந்து கட்டிப் பிடிக்கும்போது.. ” என்ற பாணியிலேயே பேசி இருப்பது இன்னும் கொடுமை.
சோம்பலோடு கொசு அடிக்கும் ஆளைப் போல நடித்து இருக்கிறார் ஸ்ரீநாத் .
வேணு சங்கர் – தேவ் ஜி இசை யில் பாடல்கள் கேட்கும்படி உள்ளன.
குன்றத்தூர் பிரியாணி கடை கள்ளக் காதல் கொலை விவகாரம் எல்லாம் ஒகே. ஆனால் அதை எப்படி சொல்ல வேண்டும் என்று தெரியவில்லை.
கணவன் மனைவி குடித்தனம் , குடிக்கும் பழக்கம் , அப்போது வரும் சண்டை … கணவன் மனைவிக்கு இடையில் நடக்கும் சில அந்தரங்க உரையாடல்கள் என்று ஆரம்பத்தில் இவற்றைப் பார்க்கும்போது , கண்டிப்பாக ஒரு சுமாரான படத்தையாவது பார்க்கப் போகிறோம் என்ற நம்பிக்கை வந்தது நிஜம் .
ஆனால் ” வெவ்வெவ்வே…. யாருகிட்ட….?” என்று படம் பார்க்க வந்தவர்களிடமே பழிப்பு காட்டி விடுகிறது படக் குழு .