பிரகாஷ் சந்திரா தயாரித்துக் கதாநாயகனாக நடிக்க, தருண் கோபி, அன்விஷா , கே ஆர் விஜயா, ஆர் சுந்தர்ராஜன், ராஜ்கபூர், யார் கண்ணன், சிங்கம் புலி நடிப்பில் சரக்குட்டியின் கதை வசனத்தில் ரவி பார்கவன் திரைக்கதை எழுதி இயக்கி இருக்கும் படம்.
பலப்பல ஆண்டுகளுக்குமுன்பு, ஒரு கிராமத்தில் கும்பலாக கோவிலுக்குப் போனவர்கள் பயணம் செய்த லாரி, ஓட்டுனரின் குடிபோதை காரணமாக விபத்துக்கு ஆளாகி பற்றி எரிந்து, பலப் பலர் பிடி சாம்பல் ஆகிறார்கள் . அதிர்ந்து போகும் அந்த ஊரின் தலைவி மூக்கம்மா (கே ஆர் விஜயா) இனி அந்த ஊர் ஆட்கள் யாரும் சாராயம் காய்ச்சவோ குடிக்கவோ கூடாது என்று கட்டளை இடுகிறார் .
பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்த ஊர் நபர் குடித்து விட்டு வர, அவர் மீது சாணியைக் கரைத்து ஊற்றி விளக்குமாறால் அடித்து ஊருக்கு வெளியே விட்டு வரச் சொல்கிறார் மூக்கம்மா. அந்த நபர் இறந்தும் போகிறார் .
இப்போது மூர்க்கம்மாவின் குடும்பத்தில் உள்ள ஒரு இளம்பெண்ணை (அன்விஷா) திருமணம் செய்து கொள்ள அவளது குடுபத்தில் உள்ள இரண்டு முறை மாமன்கள் (பிரகாஷ் சந்திரா, தருண் கோபி) ஆசைப் பட , பெண் ஒருவரை ( பிரகாஷ் சந்திரா) விரும்ப , கொந்தளிக்கும் இன்னொருவர் ( தருண்கோபி) அந்த ஊருக்கு சாராயக் கடையைக் கொண்டு வர விரும்பும் ஒரு நபரின் ( ராஜ்கபூர்) கைப்பாவை ஆக, நடந்தது என்ன என்பதே படம்
மிக அருமையாக நட்த்துள்ளார் கே ஆர் விஜயா . இந்த வயதிலும் தள்ளாடாத நடிப்பு . வணக்கங்கள்.
சிங்கம் புலியை ”நான் நல்லா இருக்கேன் ” என்று சொல்ல வைக்க, சுந்தர்ராஜன் எடுக்கும் முயற்சிகள் ஐடியாவாக ஓகே.
மற்றபடி என்ன சொல்ல?
உதயகீதம் படத்தில் பல வருடங்கள் ஜெயிலில் இருந்து விட்டு வெளியே வரும் கவுண்டமணி, கடைக்கு தேங்காய் வாங்கப் போவார் . கடைக்காரனுக்கும் அவருக்குமான உரையாடல் பின்வருமாறு :
கவுண்டமணி : ஏங்க… தேங்கா எவ்வளவு?
கடைக்காரர் : பத்து ரூபா.
அதிரும் கவுண்டமணி : என்னது பத்து ரூபாயா? ஏங்க.. இந்த .. மூணு ரூவா… நாலு ரூவாவுக்கு எல்லாம் உங்க கிட்ட தேங்கா இல்லிங்களா ?
கடைக்காரர் : ஏய்.. நீ என்ன உள்ள இருந்துட்டு வந்தியா?
திடுக்கிடும் கவுண்டமணி மைன்ட் வாய்ஸ் ; நாம உள்ள இருந்தது இவனுக்கு எப்படி தெரியும் ?
கடைக்காரர் : மூன்று ரூவா நாலு ரூவாவுக்கு தேங்காயாம். போ போ …
இந்தப் படம் எடுததவர்களிடமும் அதே கேள்வியைக் கேட்கலாம் .
கதையாக நல்ல கதைதான் . ஆனால் சொன்ன விதத்தில்தான் எவ்வளவு பழைய நெடி .