அருள்நிதி நாயகனாக நடித்த இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக கால் தடம் பதித்த பத்திரிக்கையாளர் மு மாறன் அடுத்து இயக்கி இருக்கும் படம் கண்ணை நம்பாதே .
எம் ஜி ஆர் நடித்த நினைத்ததை முடிப்பவன் படத்தில் இடம் பெற்ற புகழ்பெற்ற ஒரு பாடலின் முதல் அடியை பெயராகக் கொண்ட இந்தப் படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின். ஆத்மிகா, பிரசன்னா, ஸ்ரீகாந்த், பூமிகா, வசுந்தரா ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்தின் ஒளிப்பதிவு ஜலந்தர் வாசன். இசை சித்துகுமார் .
” கணிப்பொறிப் பணியில் இருக்கும் ஒரு எளிய இளைஞர் , ஒரு பிரச்னையில் சிக்கிய நிலையில் அதில் இருந்து எப்படி மீள்கிறார் என்பதைச் சொல்லும் கிரைம் திரில்லர் படம் இது . கண்ணை நம்பாதே என்ற பெயர் இந்தப் படத்தின் கதைக்கு மிகப் பொருத்தமான ஒன்று. படத்தின் எண்பது சதவீதம் இரவில் நடக்கும் கதை . இரண்டாம் பகுதி முழுக்க ஒரே இரவில் நடக்கிறது. படம் பரபரப்பாக இருக்கும் .” என்கிறார் மாறன்.
‘முதல் படம் அருள்நிதி அடுத்த படம் உதயநிதி . நீங்களும் ஒரு வகையில் குடும்பப் பட இயக்குனரா?’ என்று கேட்டால் ,
சிரித்தபடியே ” அது இயல்பாக அமைந்த ஒன்று . நான் உண்மையில் உதய் சாருக்கு ஒரு காதல் கதைதான் கொண்டு போனேன்.
அவர் என்னிடம், ‘ தம்பி அருள்நிதியை வைத்து நீங்கள் இயக்கிய இரவுக்கு ஆயிரம் கண்கள் எனக்கு மிகவும் பிடித்தது . அப்படி ஒரு கதை சொல்லுங்கள்” என்றார் . பத்து நாள் அவகாசம் வாங்கிக் கொண்டு கதை தயார் செய்து கொண்டு போய் சொன்னேன் . உதய்சாருக்கு ரொம்பப் பிடித்தது . அப்படித்தான் படம் துவங்கியது ” என்றார் .
மாமன்னன் படம் உதயநிதி நடிக்கும் கடைசி படம் . அதற்கு முன்பு வெளிவரும் படம் உங்கள் கண்ணை நம்பாதே .
எப்படி உணர்கிறீர்கள் என்று கேட்டால், ” அவர் தொடர்ந்து நடிக்கணும் சார். அதுதான் என் ஆசை ” என்கிறார் மாறன்
மார்ச் மாதம் திரைக்கு வருகிறது கண்ணை நம்பாதே
நினைத்ததை முடிப்பவன் பாடலில் வரும் இரண்டாம் வரிபோல் இல்லாமல் இருக்க வாழ்த்துகள் !